எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

சனி, 14 நவம்பர், 2009

புதுயுகப் புரட்சி மலர்களுக்கு எம் வீரவணக்கம்.!


* தாய் நிலம் மீட்க

 தன்னையே ஈகை செய்த
 தற்கொடைப் பூக்களே..!
இப்புதிய பூமியின்-எம்
புரட்சி மலர்களே..!
எமது வீரவணக்கம்..!


* தமிழ்த் தாய்களின்
கருவறைகளில்
பேரினவாத வல்லூறுகளின்
வண்புணர்வின் வலிகள் பல
சுமந்து…..
பெண்மையின் மென்மை
துரத்தி….
பெரும் புயலாய் பெருக்கெடுத்து
கரும்புலியாய்
கறைகள் அழித்து
வரலாற்றை எமதாக்க-தம்
சுக வாழ்வினை அற்பணித்த
தியாகத் தீபங்களே..!
எமது வீரவணக்கம்..!


* தூர தேசங்களெங்கும்
கிளை பரப்பி- எமது
உரிமை மீட்புப் போருக்காய்
தூரத்து இடி முழக்கமாய்..,
கார்த்திகை மலர்களாய்..,
தமிழர் இதயமெங்கும் நிறைந்து
மலர்ந்து சிரிக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கம்..!


* முள்ளிவாய்க்காலின்
 உதிரக் கடலில்
மூழ்கடிக்கப்பட்ட எம்
முத்துக்களிலிருந்து
வெடித்து கிளம்பும்
வீரிய விதைகளாக
இப் பிரபஞ்சமெங்கும்
விளைந்து நிற்போம்


* ஈழ மண்ணில்
வித்தான ஒவ்வோர்
மாவீரர்களின் விதையாய்
மண்முட்டி எழும்
மான மறவர்களின்
ஈழத்து எழுச்சி விருட்சங்களாய்
எழுந்து நிற்போம்
எதிர்த்து வரும்
பகை விரட்ட….!


* எம்மை மறித்து நிற்கும்
அடிமை விலங்கை
அறுத்தெறியும் பாதை நோக்கி
பயணித்த..,
உமது தடம் பற்றி
தொடர்வோம்……..!


* திறந்த வெளி கொட்டடியில்
அனாதரவான வனாந்தரங்களில்
ஆயுதங்கள் முறைத்து நிற்கும்
முள்வேலி முகாம்களை
நொறுக்கி விட
வீர சபதமேற்போம்..!


* நீர் ஏந்திய சுடரை
ஏற்றிப் பிடிப்போம்..!
அணையா விளக்காய்.,
ஈகைச்சுடரை இதயத்தில்
சுமப்போம்…!


வீரவணக்கம்…! வீரவணக்கம்…!! வீரவணக்கம்…!!!


--குவைத்திலிருந்து…
  தமிழவன்

விடுதலைப் பாவலர் அய்யா புதுவை இரத்தினதுரை- மண் சுமந்தோர் கனவு.!


துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர்

வீடு திரும்பினேன்
படுக்கை விரித்து விழ சாமக்கோழி கூவிற்று
வித்துடல் தோளேற்றி நடந்ததால்
வலித்தது தோளும் மனமும்
தூக்கம் தொலைவாகிப் போனது.
கவிதையயான்று எழுதலாம்
எழுதலாம்தான் எப்படித் தொடங்குவது?
எழுதிச் சென்று எங்கே முடிப்பது?
பாட்டெழுதிப் பாட்டெழுதி
நான்படும் துயர் யாரறிவார்?
கூட்டுக்குள் கிடந்து குமைகின்றது உயிர்
பூ அள்ளிப்போட்டே புண்ணானது கைகள்
நிதம் அழுதழுது
நீர் வற்றிப்போனது விழிகள்
கண்மலரும் காலை ஒவ்வொன்றும்
வீரச் சாவுடன்தானே விடிகின்றது.
இமை மூடும் பொழுதும்
இடி விழுத்தித்தானே இருள்கிறது
நிலவு முகந்திருத்திய நிர்மலப் பூங்கொடிகளை
இழவு எடுத்துச் செல்கின்றது நாளாந்தம்
எத்தனைக் காலத்துக்கென்றுதான் இது?
பத்துப் பரப்பில் விதைக்கத் தொடங்கி வயல்
ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.
விதைக்க குழிதோண்ட வியர்க்கிறது நிலம்
காற்றின் விழிகளிலும் துயரம்.
வெள்ளையடித்த கல்லறைக்குள்ளே
பள்ளிகொள்கின்றனர் பரமாத்துமாக்கள்
நூல்பிடித்து ஓடிய நேராய்
வரிசையான நாற்று நடுகை
எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு
பொய்க்கவில்லை
கங்கும் களையுமாக எங்கும் அரும்புகள்
ஒருநாள் வந்து
உள்ளே புகுந்து ஒரு பூ வைத்துப்பாரும்
குழியிலிருந்து கேட்கும் குரல்
பார்க்கும் விழி
துடிக்கும் உயிர்
எவர் சொன்னது இவர்களை இறந்துபோனவர் என்று?
எவர் சொன்னது எலும்பும் உக்கி எருவானார் என்று?
வெளியே வருவதில்லையே தவிர
குழிக்குள்ளேயே ஒரு ராஜாங்கமே நடக்கிறது
கார்த்திகை இருபத்தேழு
தேசத்திற்கு உயிர்ப்பெழுதும் நாள்
சில்லிட்டுப்போகும் நிலம்
பூக்கொண்டு நடப்போம் புனிதரிடம்
மெல்ல அருகமர்ந்து
கல்லறைகள் கழுவுவோம் கண்ணீரால்
நெய்விளக்கு ஏற்றும் நேரம்
செல்வங்கள் விழிதிறப்பர்
செவிகேட்க சிரிப்பர்.
மெளன மொழியில்
பெற்றமனம் குறிப்பேவர்
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும்
“மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று
என்புருக வழியும் பாடலில்
சிலிர்த்துப்போய் சிலையாவோம்.
பணிமுடித்து உறங்குகின்றோம்
மீதி வழி முன்செல்வீர் என
தேவகுமாரனின் அசரீரி கேட்கும்
எமக்கானது பூவல்ல
எமக்கானது சுடரல்ல
எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல
எமக்கானது விடுதலை
எமக்கானது தேசத்தின் விடிவு
காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன்
கல்லறைகள் மூடிக்கொள்ளும்
ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்
வாசல் கடந்து வெளியேவர
நிலம் விரிந்திருக்கும்
எம் பயணம் தொடரும்
மண்மடிந்தோர் கனவு நனவாகும்வரை.



பின் குறிப்பு:

எரிமலை 2009 சனவரி-பெப்ரவரி இதழிலிருந்து இப்பாடலை எடுத்தளிக்கிறோம். அதில் காணப்பட்ட அச்சுப் பிழைகளை நீக்கிச் சரி செய்ய உதவிய கவிஞர் கி.பி. அரவிந்தன், புலவர் இறைக்குருவனார் ஆகியோருக்கு நன்றி.

நன்றி: கீற்று இணையவழி சமூக நீதித் தமிழ்தேசம் திங்களிதழ்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம்.!

(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர்  சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை.........!.)



* என் இனிய தோழா..!

   நீ
   புதைக்கப்பட வில்லை
   விதைக்கப்பட்டிருக்கிறாய்..!

* விடுதலை வேட்கையில்
   உன்
   எரிதழல் ஏந்தி
   வீறு கொண்டெழும் தமிழினம்..!


* உன் ஆத்மா சாந்தியடைய
   உலகத் தமிழர்களின் சார்பில்
   என்
   கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்..!

* உன் ஒருவனின் உயிர் மூச்சில்
   ஓராயிரம் தமிழ்ச்செல்வன்களை
   எம்
   வீர தமிழச்சிகள்
   ஈன்றெடுப்பார்கள்
   ஈழப் பிறப்பிற்காக..!


* கயவர்களின் கழுகுப் பார்வையில்
   நீ
   எப்படி சிக்குண்டாய்?
   எம் ஈழவேந்தனே.!


* தொலைக்காட்சி செவ்வியிலே
   உன்
   புன்னைகை முகத்தில்
   தமிழீழம் கண்டோமடா
   தமிழ்ச்செல்வனே..!


* உன் அரசியல் பார்வையினை
   உலகமே வியந்ததடா..!
   அனுபவ முதிர்ச்சியில்
   ஆதிக்க சக்திகள் நடுங்கியதடா..!
   அன்புத் தோழனே.!


* தோல்விகள் எமக்கு புதிதல்ல..
   உன்
   வீர மரணம் புதிய வரலாறு
   படைக்க போகிறது..!

* புரியவில்லை கயவர்களுக்கு
   காட்டுமிராண்டிகளின்
   கூடாரம் சிதைந்து போகும்
   காலம்
   வெகு தூரமில்லை..! தோழா..!


* கால் நூற்றாண்டு விடுதலைப் போரில்
   உன்
   காலடித் தடங்கள்
   வீரத் தழும்புகளாய்
   எம் இதயவரைக்குள்..!


* மறக்க முடியாத
   நினைவலைகள்- எம்
   உறக்க நிலையில் கூட
   உன்
   அழகிய புன்னகை
   தலாட்டுகிறது தமிழ்செல்வனே..!

* செஞ்சோலைக் குருதியில் நனைந்த
   பிஞ்சு உள்ளங்களின்
   ஆறாத் துயரம்- மீள்வதற்குள்
   மீண்டும் உன் இழப்பு- எமக்கு
   தாங்க முடியவில்லையடா..!


* உடல் பிரிந்தாலும்
   உன்
   உயிரும் உணர்வும்
   ஈழ மைந்தர்களின் இதயத்தில்
   உறங்காத ஓசையாய்…!


* ஈழ மலர்ச்சியின்
   எழுச்சிப் போருக்கு
   நீ- கொடுத்த
   உயிர்த் தியாகத்திற்கு
   ஈடு இணையேதுமில்லை தோழா..!


* நீ- சிந்திய ஒவ்வொரு
  குருதித் துளியிலும் துளிர்த்தெழும்
  எழுச்சி விருட்சங்களுக்கு- எமது
  வீர வணக்கங்கள்.


                                          ஆற்றாமையோடும்....,
                                           மீளாத்துயரோடும்....,
                                           குவைத்திலிருந்து
                                           தமிழவன்

வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்- 1967 - 2.11.2007

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய - 02″ எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் என்றால் புன்னகைதான் என்பதை உலகத்துக்கே உணர்த்திய புன்னகை மன்னன் நீள் துயில் கொள்ளுகிறார். மாவீரம் மகத்தானது.
ஆதாரம்: சங்கமம்

திங்கள், 26 அக்டோபர், 2009

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை




புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள்


ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்

எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”

“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக


- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…


”அட மானுடனே!

தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்

பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்

நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.

அன்னை மடியில் இருந்து கீழிறங்கி

அடுத்த அடியை நீ வைத்தது

தாயகத்தின் நெஞ்சில்தானே.

இறுதியில் புதைந்தோ

அல்லது எரிந்தோ எருவாவதும்

தாய்நிலத்தின் மடியில்தானே.

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்

பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்

ஆதலால் மானுடனே!

தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.


“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்

எல்லைகள் மீறி யார் வந்தவன்.

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா - உந்தன்

கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா இன்னும்

உயிரை நினைத்து உடலை சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா...”

என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.


“ஊர் பிரிந்தோம்

ஏதும் எடுக்கவில்லை

அகப்பட்ட கொஞ்சம் அரிசி,

பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,

மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,

காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,

காணியுறுதி,

அடையாள அட்டை அவ்வளவே,

புறப்பட்டு விட்டோம்.

இப்போ உணருகிறேன்

உலகில் தாளாத துயரெது?

ஊரிழந்து போதல் தான்.”

இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.


“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்

இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்

அங்கு உடல் சரிப்பு.

வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென

இருமலைக் கூட உள்ளே புதைப்பு

களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு

கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு

ஒண்டுக்கிருத்தல்,

குண்டி கழுவுதல்

ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”


இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


“இன்று நடை தளர்ந்தும்

நரை விழுந்தும் தள்ளாடும்

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!

வெள்ளைத் தோல் சீமான்கள்

வீடு திரும்ப மூட்டை கட்டியபோது

நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”

என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,


“உடல்கீறி விதை போட்டால்

உரமின்றி மரமாகும்

கடல் மீது

வலை போட்டால்

கரையெங்கும் மீனாகும்.

இவளின் சேலையைப் பற்றி

இந்தா ஒருவன்

தெருவில் இழுக்கின்றான்

பார்த்துவிட்டுப்

படுத்துறங்குபவனே!

நீட்டிப்படு.

உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த

அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.

‘ரோஷ’ நரம்பை

யாருக்கு விற்று விட்டுப்

பேசாமற் கிடக்கின்றாய்?”

இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.


“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?

இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.

எத்தனை பேரைத் தீய்த்து

இந்த தீ வளர்த்தோம்.

எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்

அணைய விடக்கூடாது

ஊதிக்கொண்டேயிரு.

பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்

ஊதுவதை நிறுத்தி விடாதே

இந்தத் தீயின் சுவாலையிற்தான்

மண் தின்னிகள் மரணிக்கும்.”

மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.


உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..?


என் வாழ்நாள் முழுவதும் உன்னை நினைத்து .......


ஈழக் கவியரசே

நீயும் என்ன

பாவம் செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய்

நீ பிறந்ததை தவிர


எம்மின மக்களை

எவனும் மதிக்கவில்லை

இந்த உலகில்


சிங்களவனாவது

பறவாயில்லை

தமிழனை மிருகமாய்

மதித்து சுட்டுக்

கொல்கிறான்


ஈழக்கவியரசே

என்ன பாவம்

செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய் நீ

பிறந்ததைத் தவிர


நீ கூவியதெல்லாம்

கவிதையானது

உன் கவி கேட்டவர்

கண்களில் கண்ணீரெல்லாம்

கடலானது


பிறந்த மண்

சுட்டிருந்தாலும்

விட்டுப் பிரிந்தால்

காலமெல்லாம் நின்று

வலிக்கும் மனமென்று

பாட்டில் அழுதவன் நீ


பாவி நீ


பக்கத்து நாட்டில்

பிறந்திருந்தால்


தமிழனை மறந்து

தமிழ் எழுதி இருந்தால் கூட

தமிழர்களே விழா எடுத்து

உனக்கு

விருது வழங்கி

பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்


ஏன் புதுவை நீ அமெரிக்காவில்

மைக்கேல் யக்சனாய்

பிறந்து இறந்திருந்தால்


எத்தனை தமிழர்கள்

அழுது கவிதையால் உனக்கு

மறுமொழி போட்டு இருப்பார்கள்


படுபாவம் நீ

தமிழ்கவி உன்னை கொன்ற

சிங்களவன் துப்பாக்கி கூட

தான் சிரித்ததற்காய் ஒரு

தடவையாவது அழுதிருக்கும்


ஆனால்

நீ இறந்த தகவலை

கண்ணீரோடு பகிர்ந்த என்

கண்ணீரை துடைக்க கூட

ஒரு வார்த்தை இட இங்கு

எந்த தமிழனும் இல்லை

என்பதால்


ஈழத்தமிழன் நானும்

பாவம்தான்....


யாரும் உனக்கு

அனுதாப அஞ்சலி

தெரிவிக்காமல் போனாலும்

என் கண்ணீர் கவி எழுதினால்

அது உன் இறப்புக்காகத்தான்

இருக்கும்.




நன்றி
தொல்காப்பியன்
(இன்போதமிழ்)

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு'





வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது.


விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன.

ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் குழப்பங்கள் நீடித்துச் சென்றிருக்கலாம். ஆனால், தொடர்ந்தே செல்லும் சிங்கள இனவாதக் கொடூரங்கள் வன்னி மக்களை வதை முகாமில் இட்டதன் மூலம்; ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு மேலும் மேலும் அவசியமாக்கியது.

தமிழீழ விடுதலையை வேகமாக முன்நகர்த்தும் பணிக்காக புலம்பெயர் தமிழர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு', 'உலகத் தமிழர் பேரவை' என்ற இரு அமைப்புக்களையும் இரு படை அணிகளாக முன்நிறுத்திச் செயற்பட, தமிழ் இளையோர் அமைப்புக்களும் போர்க் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக மொத்தத்தில், 'ஐந்தாவது கட்ட ஈழப் போர்' புலம்பெயர் தேசங்களில் மையங்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய நான்கு கட்ட ஈழப் போர்களை விடவும் வீரியமாக இந்த ஆயுதம் ஏந்தாத போர் வீறு கொண்டு எழ ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புலம்பெயர் தேசங்கள் எங்கும் நடைபெற்ற சிங்கள அரசின் இன வன்முறைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டது இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தற்போது, நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையே குழப்பத்தையும், போட்டியையும் உருவாக்கும் கைங்கரியங்களில் சிங்களக் கைக்கூலிகள் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு அமைப்புக்களையும் இரு கண்களாக வளர்க்க முன் வந்துள்ள நிலையில், பதவி ஆசை பிடித்த சிலர் இரு அமைப்புக்களுக்கும் இடையே போட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், தமிழீழத் தேசியத் தலைமையே புலம்பெயர் தேசத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். அதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்மேல் புலம்பெயர் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமும் புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் பக்கம் அணி திரள வைத்திருந்தது. ஆனாலும், தீர்க்க தரிசனப் பார்வை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாகவே அடுத்த கட்ட விடுதலைப் போரை புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிக்க இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இந்த கூட்டு எதிர் சக்திகளிடம் சரணடைவது அல்லது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி, அந்த அர்ப்பணிப்பு மூலம் அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிப்பது என்ற தெரிவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமது இலட்சியத்தைக் கைவிட மறுத்து இறுதிவரை களமாடினார். அதற்கு முன்னதாகவே, கடந்த வருட மாவீரர் தின உரையில் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்திருந்த அவரது தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த இரு போராட்ட அமைப்புக்களும் கத்திமீதான பயணத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதையில் கொஞ்சம் சறுக்கினாலும் கால்கள் அறுபடும் அபாயம் உள்ளதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இவர்களது தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தும் பொறுப்பில் புலம் பெயர் தமிழர்களே உள்ளார்கள். இதில் எங்கு பிழை நேர்ந்தாலும், அதற்குக் காரணமானவர் மக்களால் தூக்கி எறியப்படும் சாத்தியம் பலமானதாகவே உள்ளது.

ஏற்கனவே, உலகத் தமிழர் பேரவையினரின் நாடு தழுவிய அமைப்புக்கள் ஜனநாயக உரிமை கொண்ட அமைப்பாளர் தெரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரு வருட கால ஆயுள் கொண்ட இதன் நிறைவேற்று அமைப்பை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களே ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வார்கள் என்பதை யாப்பு ரீதியாகப் பதிவு செய்துள்ளார்கள். மாறும் தலைமை முறை கொண்ட இந்த அமைப்பு முறை தவறுகளுக்கு இடம் கொடுக்காது திறமைகளுக்கே இடம் கொடுக்கின்றது. பெரும்பாலும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பும் இவ்வாறான யாப்பு மூலமான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் போரை மக்கள் பலத்துடன் முன் நகர்த்திச் செல்ல முடியும்.

நாங்கள் போகும் பாதை எதுவாக இருப்பினும் இலக்கு என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். இலக்குத் தவறிய பயணம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் மீண்டும் புதைகுழிக்கே அழைத்துச் செல்வதாக முடியும். தமிழீழ தேசியத் தலைவரது தமிழீழம் என்ற இலக்கில் சமரசம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டுக்கோட்டை வரை முள்ளிவாய்க்கால் வரை அத்தனை இழப்புக்களையும் தமிழினம் தாங்கிக்கொண்டது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே. அதில் சமரசம் செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட முடியாது என்பது இறுதியான, உறுதியான முடிவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேச தமிழீழ மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஈழப் போரை வேகமாக முன்னெடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே இந்த அமைப்புக்களின் தலைமைகள் முனைந்து செயற்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி இலட்சியத்தை முன்னெடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

நன்றி: பாரிசு ஈழநாடு

புதன், 14 அக்டோபர், 2009

கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு 'இந்தியத் துரோகம்'!

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.

கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தமிழகம் அமைதியானது.

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.

நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.

இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலசை;சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.

நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.

மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள். இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள். இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.

சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி - ஈழநாடு

தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: நாடு கடந்த அரசாங்கம்: ஓர் ஆய்வு - தமிழ்நெற்




தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள் என தமிழநெற் இணையத்தளம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:

மிருகத்தனமான இராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை மறக்கச் செய்துவிடும் என்பது கொழும்பினதும், அதிகார வர்க்கங்களினதும் நம்பிக்கை. அதுவே அவர்களின் போர் மார்க்கத்துக்கான தூண்டுதலாகவும் அமைந்தது.

ஆனால் போரும் அதற்குப் பின்னாலான போக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமது நாட்டின் விடுதலையானது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருவரும் இன்னும் அறியவில்லை.

ஆனால் ஆணவமும், பேராசையும் காரணத்தை ஒரு போதுமே பார்க்காது. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்தில் சில அதிகாரவர்க்கத்தினர் மிகவும் நேர்மையாக உள்ளார்கள். அவர்கள் சர்வதேசத்தின் அனைத்து தலையீடுகளுக்கும் செவிமடுத்து கருத்துக் கூறுகிறாரகள். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நிலங்களையும் அவர்கள் வளங்களையும் அபகரிப்பதில் அவர்களுக்குள்ள பேராசையை அவர்கள் ஒருபோதுமே மறைக்கவில்லை.

அவர்களில் ஒருவர், தமிழ் அரசியல் தலைவர்கள் தமது மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து குரல் எழுப்பக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார். தாம் கூறும் தீர்வுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தலையாட்ட வேண்டும் எனவும் மிரட்டப்படுகிறார்கள் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். வேறொரு அதிகார அமைப்பும் அங்கு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அவர்கள் இப்போது கண்ணீர் சிந்துகிறார்கள், இலங்கையின் ஒற்றுமைக்காக வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காணப்பட வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்கள், வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ளவர்கள் கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள், இந்த நாடகத்தில் தாமும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக இரஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்கள் கொடுப்பது போல தம்மைக் காட்டிக்கொள்கிறார்கள்.

முதலாவது வகை அதிகார அமைப்பினர், தமிழர்கள் படும் அவலங்களுக்கு தமது பொறுப்பை அடையாளம் காணாத நிலையில், பிந்திய வர்க்கத்தினர் குறைந்தது மறைமுகவாகவேனும் அதை அறிந்துள்ளதோடு உடனடியாக தேவைப்படுகின்ற சில மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் கோரிக்கை விடுகின்றனர்.

எனினும், இவர்களில் எவருமே கொழும்பின் இன அழிப்பு போக்கை மாற்றுவதில் ஒரு சிறிய அளவு மாற்றத்தைக் கூட இதுவரை ஏற்படுத்த திராணியற்றவர்களாக உள்ளனர். மாறாக, கொழும்பானது தனது சிங்களத்துக்குரிய சர்வாதிகாரப் போக்கின் சகல வடிவங்களையும் நாட்டில் மிக வேகமாக உருவாக்குகிறது.

நாட்டிலுள்ள தற்போதைய உண்மை நிலையானது நிரந்தர அமைதி, ஜனநாயக உரிமை, வேறுபாடுகள் களையப்பட்ட இறுதியான அரசியல் தீர்வு மற்றும் பிராந்திய உலகளாவிய கூட்டுறவு எனபனவற்றுக்காக நாட்டைப் பிரிப்பதே தற்போதைய தேவை என்பதை அனைவரினதும் அறிவும், உணர்வும் அவர்களுக்கு தெளிவாக உணர்த்தும்.

ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் தேசியத்தின் அபிவிருத்தியிலும், கோரிக்கைகளிலும் உள்ள முக்கியத்துவத்தை, நியாய நேர்மையைக் கண்டறிய வேண்டும் என எந்தவொரு அதிகாரங்களும் விரும்பவில்லை என்பதை தமிழர்கள் மிக அவதானமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். தற்போது இலங்கையில் உள்ளது ‘இனப்பிரச்சனை'. அதற்கு இன வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காண்பதும், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளைக் பேணுவதற்கு கொழும்பின் மீது சிறிதளவு சர்வதேச அழுத்தம் ஏற்படுத்துவது என்பவற்றின் மூலம் எளிதாகக் தீர்த்துவிடமுடியும், ஆனால் தேசிய விடுதலை என்பது பயங்கரவாதத்தின் கோரிக்கை என்று நாங்கள் ஏற்றுக்கொண்டு நம்ப வேண்டும் என இலங்கை அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன.

இந்த நோக்கங்களிற்கு பின்னால் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும், அதாவது அறிவான அரசியல் சிந்தனைகள் இல்லை என்பதையும் வெறும் அதிகார சந்தர்ப்பவாதம் தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். தாம் செய்யும் எதுவுமே நாட்டின் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அதிகாரத்திலிருப்பவர்கள் முற்றுமுழுதாக அறிந்துள்ளனர்.

தமது மனப்போக்கின் நேர்மையில் இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் புரட்சி வெடிக்கும் என்பது பற்றி அவர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. இதில் அவர்கள் காட்டும் அதீத அக்கறையானது, அவர்களின் நடவடிக்கைகள் தப்பானவை என்பதை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறிய எம்.கே நாராயணனின் அண்மைக்கால அவதானிப்புகளில் இருந்து இந்தியாவின் குற்றமுள்ள நெஞ்சிலிருந்து கிளம்பியுள்ள பயத்தைக் கண்கூடாகக் கண்டு கொள்ளலாம்.

இவர்கள் எல்லோருமே தமிழர்கள் அரசியல் ரீதியாகப் போராட வேண்டும் என்று அறிவார்ந்த ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் இதிலுள்ள கபடத்தனம் என்னவென்றால், ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் கூட, தமிழர்கள் தமது விடுதலை வேட்கையைக் கைவிட்டு இலங்கையின் கூற்றுக்குத் தலையசைக்குமாறு வற்புறுத்தப்படுவதாகும்.

சுருக்கமாகச் கூறினால், ‘தோற்கடிக்கப்பட்ட தமிழர்களுக்கு' என்ன தேவை என்று ஜனநாயக முறைப்படி சொல்லக் கூட அரசியல் உரிமைகள் கிடையாது என்பதாகும். இந்த இடத்தில் தான் இலங்கையில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் உறுதியான ஒரு நிலைப்பாட்டைக் எடுத்து அதனை ஆணித்தரமாக வலுவான குரலில் அறிவிக்க வேண்டும்.

இறுதியாக 1977 இல் தமிழர்கள் ஜனநாயக முறைப்படி தமது குரல்களை உயர்த்திய போது, தமது தாயகத்தில் அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கில் சுதந்திரமான, கௌரவமான தமிழீழ உருவாக்கத்துக்கான தெளிவான, அடக்கிக்கொள்ளமுடியாத ஆணையை தமது சுய தீர்மானத்தின் அடிப்படையில் எடுத்திருந்தனர்.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைத்து தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் புதிய அரசியலமைப்பு வரும்வரை, எமது அடிப்படைகளைக் தொலைக்காமல் அவர்கள் விவாதங்களில் ஈடுபடலாம். இதுவே இப்போதுள்ள புதிய ஒரு நிலைப்பாடாகும். சொல்வதைக் கூறுமாறு உத்தரவு போடுகின்ற கொழும்பு மற்றும் புதுடில்லிக்கு வெளியே சுதந்திரமான ஜனநாயக நாடுகளில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

எனவே தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி உள்ளது. ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழ் ஈழம் மற்றும் முன் நிபந்தனையாக தேவைப்படுகின்ற வட்டுக்கோட்டை அரசியலமைப்பு மேலும் அடித்தள ஜனநாயக அமைப்பைத் தோற்றுவித்தல் என்பன குறித்து தமிழ் நெற் இணையத்தளம் நீண்ட நாட்களூக்கு முன்னர் எழுதியிருந்தது.

கடந்த புதன்கிழமை பி.பி.சியில் நாடு கடந்த தமிழீழம் குறித்த முன்மொழிவை உருத்திரகுமாரன் வழங்கியிருந்தார். அதில் அவர் தாய்நாடு மற்றும் சுய தீர்மானம் பற்றி மட்டுமே பேசியமை கவலைக்குரியது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மிக முக்கிய பகுதிகள் துண்டிக்கப்ப்ட்டிருந்தமை வருத்தமளிக்கிறது.

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்னும் சொற்தொடரானது தமிழர்களின் மிகுதி அபிலாசைகளையும் உள்ளடக்குவதாக இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வட்டாரங்கள் கூறின. ஆனால் ‘தமிழ் நாடு' என்னும் சொற்தொடர் இந்தியாவிலுள்ள சகலதையும் குறிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் ஜனநாயக ரீதியில் என்ன ஆணையை வழங்கினார்கள் என்பதை கூறுவதில் ஏன் தயக்கம்? இதைத் தடுப்பது யார்? நாடுகடந்த அரசாங்கம் என்பது அடையாளச் சின்னமாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும், எனவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் இப்போது தாங்கி நிற்கின்ற புலம்பெயர் தமிழர்களின் சுதந்திரமான ஆதரவுகளுடன் அது அமைக்கப்படுவது அவசியம்.

அனைத்து அரசாங்கங்களும் இதனை கருத்திலெடுக்காத பட்சத்தில் ஜனநாயக ரீதியில் அமைக்கப்படும் மாற்று அரசாங்கமே இது. சமரசப்பேச்சுக்களால் உடன்படிக்கை போடும் நோக்கத்துடன் மட்டுமே இது ஆரம்பிக்கப்படும் என்றால், நாடுகடந்த அரசாங்கத்தின் முழு கருதுகோளுமே தவறாக வழிநடத்தப்படும். சமரச பேச்சுகளின் உடன்படிக்கைகளுக்கான மேடை இதுவல்ல. தமிழர்கள் தமது அபிலாசைகளை வெறுமனவே ‘ஜனநாயக ரீதியில்' தெரிவித்தார்கள் என்று காட்ட வேண்டிய தேவை இல்லை.

ஏனெனில் சமரசப் பேச்சுக்களுக்கான முன் நிபந்தனையாக இதை எடுக்க சில அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன. கொழும்பு மற்றும் சில அதிகார வர்க்கங்கள் வழங்கியுள்ள அழுத்தத்தில் வாக்காளர் பதிவு மேற்கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பது நாடு கடந்த அரசாங்கம் குறித்த அறிவித்தலிலுள்ள பாதுகாப்பற்ற மற்றொரு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை படுகொலை செய்வதில் சர்வாதிகார சிங்கள அரசாங்கம் இந்த வாக்காளர் பதிவை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். வாக்காளர் பதிவை மையப்படுத்தி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளச் செய்யும், நாடுகடந்த அரசாங்கம் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்காது.

வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்படாமல், புலம்பெயர்ந்து நோர்வே நாட்டிலுள்ள தமிழர்களிடையே இந்த மே மாதத்தில் நடைபெற்ற வெற்றிகரமான வாக்குப்பதிவைப் பற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும். கடந்த புதன்கிழமை நாடு கடந்த அரசாங்கத்தின் முன்மொழிவின் போது கூறப்பட்ட ‘தாய்நாடு' என்ற பதம்பற்றி பி.பி.சி இன் செய்தியாளர் கருத்திலேயே கொள்ளவில்லை.

இராணுவ தோற்கடிப்புக்குப் பின்னர், வெற்றிகரமாகச் செயற்படாது என்று பல அவதானிகளால் கருதப்படுகின்ற தனி தாய்நாடு என்பதிலேயே இப்போதும் இந்த குழு தெளிவாக ஒட்டியுள்ளது" என்று பி.பி.சி செய்தியாளர் கூறியுள்ளார். புதிய மற்றும் உள்ளடக்கப்பட்ட மாதிரியுடன் இந்த அரசாங்கம் உருவாக்கப்படும் போது, முயற்சிகளை பிரதிபலிக்கும் பிரதிவிம்பமாக அது இல்லை.

புலிகளின் திட்டம் என்று முன்பே உருவாக்கப்பட்டுள்ள பிரதி விம்பத்தையும் தாண்டி நாடுகடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் செல்ல வேண்டும். பி.பி.சி இன் கருத்துப்படி சுதந்திரமான நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகளில் ஒரு தலையீடும் கொள்ள வேண்டிய தேவை இல்லாதபோதும், கொழும்பு அரசாங்கமானது உருத்திரகுமாரனைக் கைது செய்வதிலேயே இப்போது குறியாக உள்ளது.

நாடுகடந்த அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கான சிறந்த தேர்வு, அதை மேல்மட்டத்திலிருந்து ஆரம்பிக்காமல், அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறான அரசானது எவருடைய பயமுறுத்தல்களுக்கோ, ஊழல்களுக்கோ உள்ளாக மாட்டாது. ஏனெனில் அது புலம்பெயர் மக்களிடத்தில் எல்லா இடங்களிலும் முதன்மை பெற்று வியாபித்திருக்கும்.

சுதந்திர, கௌரவ தமிழீழம் அமைக்கும் நோக்கில் ஒரு ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுக்கான கவுன்சிலை அமைப்பது குறித்து நோர்வேயிலுள்ள ஈழத்தமிழர்க்ள் ஏற்கனவே கலந்துரையாடி உள்ளனர். இதில் 99 வீதமான தமிழ் வாக்காளர்கள் தமது ஆணையைக் கொடுத்துள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் சகல நாடுகளிலும் இருந்தால், நாடுகடந்த அரசாங்கம் அமைப்பதற்கான கருவியாக அவை தொழிற்படும்.

அது அதிக பிரதிநிதித்துவ, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் சக்தி வாய்ந்ததாக அமையும். நாடுகடந்த அரசாங்கம் தோன்றுவதற்கு முன்னர் கூறப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதான குறிக்கோளை மீண்டும் ஆணணயிடுதலானது ஜனநாயக முறையிலான அரசாங்கத்தின் குறிக்கோள்களை நிச்சயமான வழிமுறைகளில், ஒவ்வொருவரையும் சந்தேகத்துக்கிடமின்றி அல்லது மறுப்புக்கிடமின்றி சமாதானப்படுத்தி அமைப்பதற்கு மிக முக்கியமானது.

நன்றி: தமிழ்நெற்

திங்கள், 12 அக்டோபர், 2009

அக்:10-இரண்டாம் லெப்.மாலதி- 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் – தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்




எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.  இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள்.

அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள்.
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

நன்றி: ஊடகம்

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன்.

உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது.

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம். எங்களது தியாக வேள்விக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர்கள் ஆளும் உரிமை உள்ளவர்கள் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களது போர்ப் பறை இந்திய – சீன யுத்தத்துடன் முடிவுக்கு வந்தாலும் எங்கள் செவிகளில் இப்போதும் அது ஒலித்துக் கொண்டே உள்ளது.

ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று எங்கள் உணர்ச்சிக் கவிஞரும் அண்ணாவை நினைவு கூர்ந்தார். எங்கள் போதாத காலம் அண்ணா அவர்களது ஆயுள் அத்தனை குறைவாகப் போய்விட்டது. உங்களுக்குத் தெரியுமா… எங்கள் தலைவரின் ஆத்மார்த்த குரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது? ஆம்! வெள்ளையர்களுக்கு காந்தியின் அகிம்சை புரிந்தது. இந்தியாவுக்கு அது புரியவில்லையே! இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கைத்தீவை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படை, இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க கனவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவின் எதிரிகளுடன் உறவாடிய சிறிலங்காவைத் தாஜா செய்ய எங்களைப் பலிக்கடா ஆக்கியபோது எங்களது திலீபனும் காந்தியைத்தான் நம்பினார்.

அவரது காந்தியப் பாதை இந்தியாவுக்குப் புரியாமலே போய்விட்டது. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். காந்தி தோற்றுப்போய் காணாமல் போனதனால், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது பாதை மட்டுமே எங்களுக்கு மீதியாக இருந்தது. இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்? விடுதலைப் புலிகள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. காலம் அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கையளித்தது. சிங்கள இனவாத சிந்தனைகளால் விரக்தியடைந்திருந்த எங்களது இளைஞர்கள் கைகளில் இந்தியா ஆயுதங்களைக் கைகளில்’ வழங்கியது.

இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம். எங்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கி சிங்களத்திற்கு எதிராக எங்களைப் போராட வைத்தது. இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை. அப்போதும் எமது தாய்த் தமிழகமே எங்களது அறிவுக் கண்களை மறைத்து நின்றது.

தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது. வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் இந்தியர்களாக இருந்தே எங்களைத் தமிழர்களாக உணர்கின்றீர்கள். உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை. ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.

ஆம்! உங்களுக்காக நாங்கள் இந்திய தேசத்தை நேசித்த காரணத்தால் எங்களுக்கெதிராக சீனாவும், பாக்கிஸ்தானும் சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்ந்தது. இந்திய தேசத்தின் வல்லாதிக்க கனவுக்கு நாங்கள் பலி கொள்ளப்பட்டோம். இந்திய தேசம் எங்களைப் பலிக்கடா ஆக்கிய கணத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் – சீனா என அத்தனை பகை நாடுகளும் ஒரே திசையில் அணிவகுக்கும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டன. பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

திரையுலகிலும் நாயகனாகவே தன்னை நிலை நிறுத்திய அந்த மாமனிதர் நிகழ் வாழ்விலும் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றே பெரு விருப்புற்றிருந்தார். எங்கள் துர்ப்பாக்கியம் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்ய அஞ்சாத அந்த வீரத் திருமகனும் எம்மை விட்டு வெகு சீக்கிரமாக மறைந்துவிட்டார். பாவம், உங்களை எல்லாம் ஆளும் பொறுப்பை நீங்கள் கோழைத் தமிழனான கருணாநிதியிடமல்லவா கொடுத்துவிட்டிர்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கத் தெரிந்த கலைஞர் கருணாநிதியிடம் எங்கள் அவலங்கள் எடுபடுமா?

சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.

அதை மீறி, அரைநாள் உண்ணாவிரதம் தானே இருந்து சாதனை செய்து எங்கள் வேதனையிலும் அரசியல் ஆதாயம் தேடினார். ஈழத் தமிழர்களின் ஒற்றுமையின்மை பற்றி ஒப்பாரி வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை எத்தனை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்? அமரர் எம்.ஜி.ஆர். அவர்களை எப்படிப் பிரிந்து போக அனுமதித்தார்? தி.மு.க.வின் போர் வாளாக அறியப்பட்ட வை.கோ. அவர்களை எப்படி வெளியேற்றினார்?

பலதாரப் பிதாமகர் கருணாநிதி அவர்களுக்கும் அவரது அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போர் உலகப்பிரசித்தம் கொண்டது என்பதைக் கலைஞர் அறிவாரா? போதும் தமிழகமே! உனக்காக நாங்கள் இந்திய தேசத்தை நம்பியது போதும்! கிழக்கிலும், மேற்கிலும் எதிரிகள் பலம் பெற்ற போதும் தெற்கு வாசலில் உங்களுக்காக நாங்கள் தோத்தது போதும். உங்கள் எதிரி சீனா பாக்கிஸ்தானிலும் வங்காள தேசத்திலும், பூட்டனிலும், நேபாளத்திலும் நிலை கொண்ட போதும் இலங்கைத் தீவில் இன்றுவih எதிர்த் துருவமாக நின்றது நாங்கள் மட்டுமே.

சிங்கள தேசம் சீனாவுக்கு செங்கம்பளம் விரித்த போதும், எங்கள் இந்திய விசுவாசம் அதை எதிர்த்தே நின்றது. இந்தியாவுக்குப் பங்கம் வரக்கூடாது என்பதால்தான் எங்கள் தலைவன் சீனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- நன்றி்: ஈழநாடு

புதன், 30 செப்டம்பர், 2009

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்!

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!

இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், இராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

ஐ.நா.வின் மனிதவுரிமை அவையில்  இலங்கை அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!
"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!
இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குத்துக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.

இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்கினியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!

மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று “ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்” என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் “இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது “ மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைத்து அழகு பார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!

இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!

தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?

வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!
நன்றி.தமிழ்வின் இணையம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

விடுதலைப் புலிகளால் தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்: விளக்கக் கோவை வெளியீடு


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர்.


வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு - தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக - கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற் குழு தெரிவித்துள்ளது.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் விதமாக – அதனை உருவாக்குவதற்கான செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி - பதில் வடிவத்திலான முதற்கட்ட விளக்கக் கோவையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அந்தச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களால் வெளியடப்பட்டுள்ள குறிப்பும், விளக்கக் கோவையும் கீழே தரப்பட்டுள்ளது:



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: சில விளக்கக் குறிப்புக்கள்



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்ட்டுள்ளதனையும் அதனை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனையும் தாங்கள் அறிவீர்கள்.



இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான தேவைகளை வெளிப்படுத்தி திட்ட முன்னறிவிப்பினை 16.06.2009 அன்று ஊடகங்களுக்கான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.



இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்தை வினா - விடை வடிவிலான விளக்கக் குறிப்பாகத் தற்போது வெளிப்படுத்துகிறோம்.



இது முதற்கட்ட விளக்கக்கோவையே. திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், விளக்கங்களை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம்.



இந்த விளக்கக்கோவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணை புரியும் என நம்புகிறோம்.



இந்த விளக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விடயங்களே.



இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேவையான மாற்றங்களை செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.



இந்தத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.



எம்முடனான தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org



திரு விசுவநாதன் உருத்திரகுமாரன்

இணைப்பாளர்



1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இது ஒரு புதுமையான எண்ணக்கரு.



தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.



சிறிலங்கா அரசு சட்டரீதியான தடைகளுக்கு ஊடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகவும் படுகொலைகளுக்கு ஊடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது.



இந்நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள ஜனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதிஉயர் மக்கள் பீடமாக இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.



தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குபெறுவது நடைமுறைச் சாத்தியம் இன்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.



இந்த அரசு தாயகத்தில் இருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.



2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது?



ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே தங்கியுள்ளது.



இதனை சிறப்பாக அடைவதற்கும் அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது.



இலங்கைத் தீவுக்குள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்து எடுக்கப்பட்டு - இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும் அதன் அடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது.



இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன.



அத்துடன், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரல் எழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.



தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒருவகையில் அரசியல் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.



அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், இராஜதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டங்களிலும் பிரகடனம் செய்து வருகின்றனர்.



இவற்றினை எல்லாம் எதிர்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்று எடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவில் இருந்து வெளியேறி வாழ்கின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.



3. நாடு கடந்த அரசாங்கத்திற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் இடையில் (Government in Exile) வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா?



இந்த இரண்டு அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த இரு அரசாங்கங்களும் கோட்பாட்டு ரீதியில் வேறானவை.



புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடிவரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவர்.



புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம். புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புகலிட அரசாங்கம் பொதுவாக தனது ஆளுகைக்கு உரிய விடயங்களாக தமது தாயகத்து விடயங்களை மட்டுமே கொண்டிருக்கும்.



நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறையாகும். அதன் கோட்பாட்டு அடிப்படை கடந்த இரு தசாப்தங்களாக சமூக அறிஞர்களின் கூடுதல் கவனத்தினை ஈர்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நாடு கடந்த வாழ்க்கை முறையுடனும் (Transnational life) நாடு கடந்த அரசியலுடனும் (Transnational Politics) தொடர்புபடுகிறது.



புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக்கொள்ளும்போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைப் பேணிவருகின்றனர்.



இவர்களது வாழ்க்கை முறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வினை இவர்கள் அமைத்துக் கொண்டபோதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு அம்சங்களைத் தீர்மானிப்பதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முக்கிய பங்கினை வகிக்கிறது.



ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையும் இவ்வாறுதான் உள்ளது.



புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், நாடு கடந்து தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் தமது வாழ்வினை தாயகத்தில் அமைத்துள்ள ஒரு சூழலில் அந்த மக்களும் ஈழத் தமிழரின் நாடு கடந்த சமூக வெளியின் அங்கமாவே உள்ளனர்.



மேலும், ஈழத் தமிழரின் அரசியல் இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்போது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூக நலன்மிக்கதும் ஜனநாயக அடிப்படைகளில் கட்டி எழுப்பப்படுவதும் ஆகும்.



தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்று எடுப்பதற்காக அமைக்கப்படுகிறது.



தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கைகளை மட்டும் அன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்த நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும்.



மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இந்த அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது.



தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொது அமைப்புக்கள் இந்த அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இந்த அரசாங்கம் திரட்டும்.



தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் இராஜதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடும்.



4. நாடு கடந்த அரசாங்கம் உருவாகிவிட்டதா? இல்லை எனின் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப்போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?



நாடு நடந்த அரசாங்கம் இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான உருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு நடந்த அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



இந்த செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படும்.



விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு உருவாக்க செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும்.



தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இந்த அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களினதும் அரசாங்கத்தினதும் ஆதரவினை இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் செயற்பாடுகளிலும் இந்த செயற்குழு ஈடுபடும். ஆலோசனைக் குழுவும் முஸ்லிம், இந்திய கல்விமான்களையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும்.



ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத் தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் தமிழர் மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களின் துணையுடன் நன்மதிப்புப் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் துணையுடன் அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய சுயாதீனமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல்களை நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்புடுவர்.



தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தம்மை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி சட்ட சிறப்புக் குழுவினரின் உதவியுடன் மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான யாப்பினை தயாரிப்பார்கள்.



5. நாடு கடந்த அரசாங்கத்துக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்? நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?



நாடு கடந்த அரசியல் என்பது ஒரே நேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கமுடியும்.



அதாவது, ஒருவர் ஒரே நேரத்தில் பிரித்தானியராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல.



இது ஈழத் தமிழர்களுக்கு வலுச் சேர்க்கின்ற விடயமாகவே கொள்ளப்படவேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடு கடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது.



புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற ஐரிஷ் மக்கள், வட அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவினை வழங்கினார்கள்.



புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்த நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன.



இத்தாலிய நாடாளுமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடம் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்கள்.



கெயிட்டியில் புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக ஒரு தனித் தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.



உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்திற்கு சான்று பகல்கின்றன.



இந்தப் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களின் நாடு கடந்த அரசுக்கான முயற்சியினையும் நோக்கவேண்டும்.



இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு பிரதேங்களினை தமது பாரம்பரியத் தாயகமாக கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினதும் தொடர்ச்சியான தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாக தாயகத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டனர்.



தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும் இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்ட இன வன்செயல்களும் காரணமாக ஒருபகுதி மக்கள் வட கிழக்குக்கு வெளியே வாழ வழி தேடி குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.



மற்றுமொரு தொகுதியினர் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வன்செயல்களில் இருந்த தங்களின் உயிரினைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தீவிற்கு வெளியே அகதிகளாக புலம்பெயர்ந்து குடிபெயர்ந்தனர்.

எஞ்சியிருந்தோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளூரில் அகதிகளாகவும், பொருளியல் வலுவற்ற அநாதைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும், சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.



இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத் தமிழர்களில் ஏறத்தாழ 90 வீதமானோர் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் குடியரசு அரசியல் அமைப்பின் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தேசத்தினுள் சீவிக்கமுடியாது தமது சொந்த விருப்பத்திற்கு மாறாக வெளியேறியவர்கள்.



எனவே தாயக விடுதலை தொடர்பாக ஆகக்கூடிய அக்கறையுடன் போராடுவதற்கும் தாங்கள் தாயகத்தினை விட்டு வெளியேற்றப்படக் காரணமான காரணிகளினை உடைத்து எறிந்து செயற்படுவதற்கும் இவர்கள் உரித்துடையவர்கள்.



தாயகத்தில் ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினை வென்று எடுப்பதற்கான பணிகளினை முன்னெடுப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.



6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்கே அமையும்? அத்தகைய அரசாங்கத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஓர் புதிய அரசியல் முயற்சியாகும்.



இலங்கைத் தீவுக்கு வெளியே புலம்பெயர்க்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களில் ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளின் குடியுரிமைகளினைப் பெற்றும் பெறாமலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் எல்லைகளினையும் தாண்டியதாக தங்களுக்குள் ஒரு ஈழத் தமிழ்த் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதும் தங்களது தாயகத்தின் அரசியல் விடுதலைக்கான வேட்கை கொண்டவர்களாக செயற்படுவதும் தொடர்ச்சியாக தாய்த் தேசத்தில் வாழும் உறவுகளுடனும் சமூகங்களுடனும் இறுக்கமான தொடர்பாடல்களினை பேணுவதும் இங்கு முக்கியமானது.



அமைக்கப்பட இருக்கும் தமிழீழ அரசாங்கம் ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு தேசத்தின் நிலப்பரப்பினை தளமாக கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற பாரம்பரிய அரசு செயற்பாடுகளினால் தனது இறையாண்மையினை நிலைநாட்ட முற்படுவதாகவோ இருக்கமாட்டாது.



ஆகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி செயற்படுத்த ஒரு நிலப்பரப்போ தேசமோ அவசியம் அற்றது.



புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளம் என்கின்ற தளத்தின் மீது தாயகத்தின் தன்னாட்சி உரிமைக்காக போராடும் குறிக்கோளினால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டி எழுப்பப்பட்டதாக இந்த அரசு இருக்கும்.



தாயகத்தில் வாழும் மக்களினது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருளாதார பண்பாட்டு செழுமை ஆகியவற்றினை தனது முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும்.



மேலும், புலம்பெயர் தேசங்களில் குடியேறிய ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் தேசங்களின் சட்டமுறைமைகளுக்கு இசைவாக தங்களினை ஒரு பலம் பொருந்திய சமூகமாக கட்டி எழுப்பவதற்கும் அதன் ஊடாக அந்தத் தேசங்களில் அவர்களால் அடையப்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மேனிலையினை தாயக விடுதலைக்கான உந்துசக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இந்த அரசு முன்னெடுக்கும்.



உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினை தமது வாழ்வாகக்கொண்ட எம்மவர்களின் சமூக பொருளாதார செழுமைக்கான ஆதரவுத்தளமாகவும் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஈழத் தமிழரின் தாயக விடுதலைக்காக ஒருங்கிணைக்கும் அடித்தளமாகவும் இந்த அரசு செயற்படும்.



தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினை தனது ஆட்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களினை நிறைவேற்றுவதற்கான செயலணிகளினையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களினையும் பொருத்தமான முறையில் பல்வேறு தேசங்களில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு உருவாக்கிச் செயற்படுத்தும்.



7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்குமா? அவைகளின் அங்கீகாரம் இன்றி இந்த செயல் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?



முன்னரே குறிப்பிட்டது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு புதிய முயற்சியே ஆகும்.



இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது தேசத்துக்கு வெளியே புகலிட அரசாங்கங்களினை உருவாக்கி செயற்படுத்தி இருந்தனர்.



பல சந்தர்ப்பங்களில் உள்நாடுகளில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக தலைவர்கள் நாட்டுக்கு வெளியே தங்களது அரசாங்கங்களினை நகர்த்தி செயற்படுத்தியதும் பின்பு சுமூகமான சூழ்நிலையில் அந்த அரசுகளினை தேசத்தினுள் கொண்டு சென்று தொடர்ந்ததும் உண்டு.



அத்தகைய நிலைமைகளில் ஒரு தேசத்தின் ஆதரவும் அங்கீகாரமும் அத்தகைய புகலிட அரசாங்கங்களின் இருப்புக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கும் அவசியமானது.



முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு அத்தகைய தன்மைகளுக்கு உட்பட்டதல்ல. புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு பலமான புலம்பெயர் சமூகம் அவசியமானதாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் பலமான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு.



அதேவேளையில் ஆயுதப் போராட்டத்துக்குப் புறம்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான அவசியத்தினை வலியுறுத்தும் அனைத்துலகங்களினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான அறைகூவல்கள் மிக சாதகமான காரணிகளாகவும் உந்துசக்திகளாகவும் உள்ளன.



8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய எண்ணக்கருவினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வேலைத்திட்டமாக கொள்ள முடியுமா?



ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்களினையும் அணுகுமுறை மாற்றங்களினையும் தாண்டி வந்துள்ளது.



இந்தக் காலகட்டத்திற்குள் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைத்துவங்களும் மாற்றம் பெற்றன.



இது வரலாற்றின் இயங்கியல் தன்மை ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலைமையினையும் காணவேண்டியுள்ளது.



1980-களின் பின்னரைப் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சிறிலங்காவினதும் அதன் நேச சக்திகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாதிக்கத்தினால் பலவீனமாக்கப்பட்டது. இங்கு பலவீனமாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டம் அல்ல.



'செப்ரம்பர் 11' என குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கருத்துருவாக்கத்தினை மிக வெற்றிகரமாக கையாண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு போரினை ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நிகழ்த்தி முடித்துள்ளனர்.



இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக்கடமை தமிழ் மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.



இந்த முக்கியமான பங்களிப்பினை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்வைத்தார்.



இன்றைய சூழலில் மேல் எழும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்குள் அனைத்துலகங்களின் நலன்சார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக - பொருத்தமான புதிய அணுகுமுறைகளினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டி உள்ளது. இது அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தினால் பரந்த தளத்தில் கட்டி எழுப்பி முன்னெடுக்கப்படவேண்டும்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனை தமிழ்ச்சமூகத்திடம் கையளித்ததன் மூலம் வரலாற்றின் இயங்கியல் போக்கில் தமக்குரிய கடமையினைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஒரு தனித்துவமானதும் பொதுமைத்தன்மை கொண்டதும் ஈழத் தமிழர்கள் யாவரினையும் ஒன்றிணைத்து உள்ளீர்க்கக் கூடியதுமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்.



இது மேல் இருந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்காது. முற்றாக கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கும்.



இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் சிறப்பாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் ஜனநாயகச் செயன்முறை ஊடாக பல தேசங்களிலும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினைக் கொண்டு செயற்படுத்தப்படும்.



இந்த அரசாங்கம் செயற்படவுள்ள முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.



9. சிறிலங்காவின் அரசும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் இதனை எவ்வாறு நோக்குவார்கள்?



சிறிலங்கா அரசும் அதன் இனவெறி ஆட்சியாளர்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' வேலைத்திட்டத்தினை மிகவும் அச்ச உணர்வுடனும் ஆபத்தானதாகவுமே பார்க்கின்றனர்.



ஏனெனில் சிறிலங்கா அரசு தற்போது தாயகத் தமிழர்களின் மேலும் தாயகத்தின் மீதும் கொண்டுள்ள மேலாண்மை உண்மையான வெற்றியும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. தாங்கள் கட்டி எழுப்பிய இராணுவ மேலாதிக்கத்தினால் அவர்கள் பெற்றுக்கொண்டது வலுச்சமனிலை மேலாதிக்கம் மட்டுமே. அதுவும் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே சாத்தியமானது.



அத்துடன், ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே அவர்களின் இராணுவ மேலாதிக்கத்தினால் பதிலளிக்க முடியும்.



இத்தகைய நிலைமையில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக அனைத்துலக தளத்தில் கட்டி எழுப்பப்படுவதனை சிறிலங்கா ஆட்சியாளர்கள் தங்களால் எதிர்கொள்ள முடியாத விடயமாகவே அச்சத்துடன் பார்க்கின்றனர்.



எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றிகொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.



இன்று சிறிலங்காவும் அதன் துனை சக்திகளும் தங்களின் வளர்ச்சியின் எல்லைக்குப் போய்விட்டனர். கடந்த கால அணுகுமுறைகளினை மீளவும் மீளவும் செயற்படுத்துவதனைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.



சிறிலங்கா தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.



முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடு ஈழத் தமிழர்களினால் திறக்கப்படும் புதிய ஆடுகளமாகும். இதன் விதிகளினை சிறிலங்காவால் தீர்மானிக்கமுடியாது. அதன் இராணுவ மேலாதிக்கமும் ஆள்புலக் கட்டுப்பாடும் இங்கு செல்லுபடி அற்றது. முடிந்தால் சில உதிரியான தனிமனித அச்சுறுத்தல்களினை மட்டுமே சிறிலங்காவின் ஆட்சியாளர்களினாலும் அதன் துணைச் சக்திகளினாலும் ஏற்படுத்தமுடியும்.



10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்போது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அமைப்புக்களினைப் போன்ற ஒன்றுதானா? அல்லது தனித்துவம் கொண்டதா? அவ்வாறு தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு தற்போது இயங்குகின்ற நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளினைப் பேணும்?



நடைமுறையில் பல்வேறு சமூக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.



அவை செயற்பாட்டளவிலும் பங்கேற்பாளர்களினைப் பொறுத்தும் தமக்குள் ஒத்த தன்மைகளினையும் தனித்தன்மைகளினையும் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துவத்தினையும் செயற்படு ஆற்றலினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.



எனினும் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான சவால்களினை எதிர்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவசியமானது.



முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஈழத் தமிழ்மக்கள் சார்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் மக்கள் ஆணைபெற்ற அதிஉயர் அரசியல் பீடமாக அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்படும்.



புலம்பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக நடைமுறை ஊடாக மக்கள் நேரடியாக தமது வாக்குகளினைப் பிரயோகித்து பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வர்.



அந்தப் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட்டு எதிர்கால செயற்பாடுகளுக்கான சட்டகத்தினை உருவாக்குவர்.



அவ்வாறு அவர்கள் செயற்படும்போதும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானமும் 1977 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் அதற்கு வழங்கிய மக்கள் ஆணையும் 1985 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய திம்புக் கோட்பாடுகளும் அடிப்படை நெறிப்படுத்தல் நியமங்களாக அமையும்.



இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான பிரதிநிதிகளினை நேரடியாக தெரிவு செய்வதன் மூலம் தான் மக்கள் ஆணையினை பெற்றுள்ளதனை உலகுக்கு பிரகடனப்படுத்தும் அதேவேளை ஒவ்வோர் தேசங்களிலும் செயற்படும் மக்கள் சார்ந்த கட்டமைப்புக்களினை தன்னுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தனது செயற்றிட்டங்களினை கையாள்வதற்கான வலையமைப்பினையும் பங்காளி உரித்தாண்மையினையும் கட்டி எழுப்பும்.



இவ்வாறு மக்கள் ஆணை கொண்ட, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல் பீடமாகத் தன்னை நிலைநிறுத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களைத் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களினை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.



இந்தக் கலந்துரையால்களுக்கு ஊடாக பொருத்தமான இணைவு வடிவம் கண்டறியப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.



11. நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் அரசியல், சமூகம், பொருண்மியம், பாதுகாப்பு, புனர்வாழ்வு - புனரமைப்பு - மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் எத்தகைய சாதக பாதகவிளைவுகளினை ஏற்படுத்தும்?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதன்மையான குறிக்கோளாக ஈழத் தமிழரின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை கொண்டிருக்கும் அதேவேளையில் இரட்டை முனைகளினைக்கொண்ட அணுகுமுறையினை முன்னெடுக்கும்.



ஒன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல். மற்றையது புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக்கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்.



இங்கு குறிப்பிட்ட நோக்கங்களினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத் தீவிற்குள் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் உள்ளூர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமையினைத் தக்கவைப்பதற்காகவுமான பொருத்தமான மாற்று ஒழுங்குகளினையும் உப நிறுவனங்களினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும், அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களினை பொருத்தமான முறையில் உள்வாங்கும்.



தேவையான நிலைமைகளில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தி தாயகத்தின் நல்லாட்சி, மீள்குடியேற்றம், அபிவிருத்தியும் முதலீடும், நிறுவனமயமாக்கம், மனிதவள மேம்பாடு, சூழல் நல்லாட்சி என்பவை தொடர்பாக விவாதித்து அவர்களின் பங்களிப்பினை தமிழ் மக்களின் முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும்.



இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கு பொருத்தமான உள்ளீடுகளினை வழங்குவதன் ஊடாக அவர்களினை வலுவூட்டி அவர்களின் செயற்பாடுகளினை முன்நோக்கி நகர்த்தும்.



12. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய தலைமைத்துவத்தினை வழங்கும்? நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவைதானா? அவர்கள் தற்போது அடைந்துள்ள சமூக பொருளாதார மேனிலை போதாதா?



மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.



எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு தேசத்தில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு குறிப்பாக விடுதலைக்காக போராடும் இனத்திற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.



அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதார புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தனது சுய ஆற்றல்களினாலேயே மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இந்த சமூகம் தனது வளர்ச்சியினை ஒரு வரையறைக்குள் முடக்கிக்கொண்டுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.



கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் வீதத்தினை கொண்டிருந்தாலும் இந்த சமூகம் உயர் தீர்மானம் எடுக்கும் கட்டளைப் பீடங்களில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிகமிக குறைவாகவே உள்ளது.



அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலினைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம் தொழிற்பாடு மூலதன உருவாக்கத்தில் மிகப்பலவீனமாகவே காணப்படுகின்றது.



தொழில் வினையாற்றலில் சிறப்பு தன்மைகளினைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில் வாய்ப்புக்களினை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே அவதானிக்கப்படுகின்றது.



இன வன்செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட உயிர் ஆபத்துக்களினையும் அபாயங்களினையும் துணிகரமாக எதிர்கொண்டு தம்மை தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள், திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர்.



போரின்போது இழக்கப்பட்ட வாய்ப்புக்களினை மீளவும் விரைவாக கட்டி எழுப்புவதற்கு உரிய வங்கிகள், மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றினைக் கூட சொந்தமாக கட்டி எழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தின் கீழான கட்டமைப்புக்களிலே தங்கி வாழும் சமூகமாக உள்ளனர். இவைகள் யாவும் மாற்றப்பட வேண்டும்.



ஈழத் தமிழர்களின் மேனிலை என்பது அனைத்துலகத்தின் சகல பரப்புக்களிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வாழும் தேசங்களின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவான மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத் தமிழர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும்.



தேசங்களின் தீர்மானம் எடுக்கும் உயர்கட்டளைப் பீடங்களின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஈழத் தமிழர்களின் அறிவாற்றலும் நிபுணத்துவமும் விரிவுபடுத்தப்படவேண்டும். அனைத்துலக நிறுவனங்களின் உயர்பீடங்களில் ஈழத் தமிழர்களின் ஆளுமை பிரதிபலிக்கவேண்டும். அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பயணம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் விரைவுபடுத்தப்பட்டதாகவும் அமையும்.



இதற்கு தேவையான மூலோபாய - தந்திரோபாய ரீதியான தலைமைத்துவத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.



13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசாங்கத்தின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டனவா? உத்தேசிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயகத்தின் மனிதநேய நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா?



'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற செயல் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாகும். அதேவேளையில் அதுபற்றிய போதிய கலந்துரையாடல்களினையும் விவாதங்களினையும் மக்கள் மத்தியிலும் பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மத்தியிலும் உருவாக்காமல் இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பது இந்த முயற்சியின் அடிப்படைகளினையே மறுப்பதாக அமையும்.



தேசத்தில் நிலவும் மனிதநேய அவலங்கள் தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைக்கான புலம்பெயர் சமூகத்தின் அதி உயர்பீடத்தினை உருவாக்குவதில் நியாயமான கால அவகாசம் கொண்டிருப்பது மிக முக்கியமானது.



இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விவாதங்களாகவே அமைந்துள்ளன.



இந்த விவாதங்கள் ஊடாக ஓரளவுக்கு சிறப்பான முடிவுகளினை உருவாக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைத்துள்ளன.



இந்த ஆலோசனைகள் யாவற்றையும் கவனத்தில் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான உருவாக்க குழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.



முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலுவைப் படிமுறை கீழே தரப்படுகிறது.



1 ஆம் நிலை: கருத்துருவாக்கம்.



2 ஆம் நிலை: நிபுணத்துவ ஆலோசனைக் குழுவினை அமைத்தல்.



3 ஆம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களினை உருவாக்குதலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாக தெரிவு செய்தலும்.



4 ஆம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படை வடிவத்தினை வரையறை செய்தலும் பிரதிநிதிகளினை தெரிவு செய்வதற்கான தேர்தல் செயன்முறையினை வடிவமைத்து முன்னெடுத்தலும்.



5 ஆம் நிலை: தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையினை கூட்டுதலும் யாப்பினை உருவாக்கி அங்கீகரித்தலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டளைப் பீடத்தினை அங்குரார்ப்பணம் செய்தலும்.



6 ஆம் நிலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.



மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் தற்போது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் தொடர்கின்றன.



14. நாடு கடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?



தமிழர் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேர்தல்களை ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பதற்கு தற்போது திட்டமிடப்படுகிறது.



இது குறித்த மேலதிக தகவல்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.



15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு இணைவது?



இந்தக் குழுவில் இணைய விரும்புவர்கள் 18 வயதினை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.



இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.



ஓவ்வொரு நாடுகளுக்கும் குழுக்களுக்கு தலைமை தாங்குபவர் பெயரினையும் அவரது தொடர்பு விபரங்களையும் விரைவில் அறியத் தருவோம்.



அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனை விட எமது மின்னஞ்சல் முகவரியுடன் மூலமும் தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம்.



எமது மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
நன்றி:தமிழ்வின்