எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

வெள்ளி, 1 ஜனவரி, 2010

இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா: மனித உரிமை அமைப்பின் தலைவர் சுரேஷ்

ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா: இந்திய மனித உரிமை அமைப்பின் தலைவர் சுரேஷ் குற்றச்சாட்டு


"ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரைக் இனப்படுகொலை செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழர்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது" எனக் குற்றம் சாட்டியிருக்கும் இந்திய மனித உரிமை அமைப்பான பி.யூ.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவரான சுரேஷ், "நீண்டகால மற்றும் நினைவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தி அவர்களை முடக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு. இவை எல்லாம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் அதிகளவு அக்கறை காட்டிச் செயற்பட்டுவரும் வழக்கறிஞரான சுரேஷ், ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் டி.அருள் எழிலனுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நேர்காணலை இங்கு முழுமையாகத் தருகின்றோம்:

கேள்வி இனப்படுகொலை என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்?

பதில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் படியும், ரோம் சட்டம் எனப்படும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் சட்ட விதிகளின் படியுமே இனப்படுகொலைகள் என்பதை வரையறை செய்ய முடியும். போஸ்னியா, சூடான், ருவாண்டா போன்ற நாடுகளில் நடந்த படுகொலைகளை மாதிரியாகக் கொண்டு 2005 இல் உருவாக்கப்பட்ட சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விதிகளின் படி ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களை அந்நாட்டில் வாழக் கூடிய இன்னொரு இனம், அல்லது பெரும்பான்மை இனமோ அல்லது அந்நாட்டின் அரசோ இன ரீதியாக அவர்களை தாக்கி கொலை செய்வதோ, கண்காணிப்பு முகாம்களுக்குள் முடக்கி வைப்பதோ நாட்டின் ஏனைய குடிமக்களைப் போல அவர்களை சமமாக நடத்தாமல் பாரபட்சமாக நடத்துவதோ கூட இனப் பாகுபாட்டின் ஒருவகைதான்.

இன்னொரு வகை என்னவென்றால் இனம் கருதி அவர்களை அச்சுறுத்தி ஒடுக்குவது, மூன்றாவது அவர்களை படுகொலை செய்வதன் மூலம் ஒழித்துக் கட்டுவது ஒரு சிலரைக் கொலை செய்வது கூட இனப்படுகொலைதான்.

பொதுவாக வன்னி மீதான இராணுவ நடவடிக்கையையொட்டி நடந்த மனிதப் பேரழிவு அல்லது அவலம் குறித்து கருத்துச் சொல்கிறவர்கள். கொழும்பில் வாழுகிற தமிழர்கள், மலையகத்தில் வாழ்கிற தமிழர்கள், கிழக்கில் வாழ்கிற தமிழர்கள் இவர்களெல்லாம் இந்தப் போரில் பாதிக்கப்படவில்லை என்னும்போது வன்னியில் நடந்ததை எப்படி இனப்படுகொலையாகக் கொள்ள முடியும் எனக் கேட்கிறார்கள். ஒரு இனத்தின் ஒரு பகுதியினரை படுகொலை செய்தாலும் அது இனப்படுகொலையே.

அதே நேரம் எங்கள் பியூசில் அமைப்பின் கண்ணோட்டத்தின் படி படுகொலைகளில் மூன்று வகையான குற்றங்களை வகைப்படுத்துகிறது. ஒன்று மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இரண்டு யுத்தக் குற்றங்கள், இன்னொன்று இனப்படுகொலை. இலங்கையில் நடந்ததோ தந்திரமான சாட்சியங்களற்ற இன ரீதியான படுகொலை, யுத்தக்குற்றங்கள், இவைகள் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானதும் கூட.

கேள்வி இலங்கை அரசு புரிந்துள்ள யுத்தக் குற்றங்களைச் ஆதாரங்களோடு நிறுவ முடியுமா?

பதில் பொதுவாக வன்னியில் நடந்த இனப்படுகொலைகளை சாட்சியமற்ற வார இறுதிப் படுகொலைகள் என்று சர்வதேச ஊடகங்களும் பல தரப்பினரும் கூறிவருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மக்கள்தான் சாட்சிகள். அவர்கள் கண்ணால் கண்ட சாட்சிகள் மட்டுமல்ல கடந்த பல மாதங்களாக துரத்தி துரத்திக் கொல்லப்பட்டு பாதிக்கப்பட்ட சாட்சிகள். அதனால்தான் அவர்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்து சிறை வைத்திருக்கிறது சிறிலங்கா அரசு.

மனித உரிமைப் பணியாளர்களோ, தன்னார்வக் குழுக்களோ, நடுநிலையான பத்திரிகையாளர்களோக் கூட அம்மக்களை சந்திக்க முடியாத நிலை இன்றுவரைத் தொடருகிறது. முகாம்களுக்குள் நடக்கும் கொலைகள், பாலியல் வன்முறைகள், கடத்தல், என எல்லா மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவுக்கும் தெரியும். ஆனால் நமது தாய்நாடும் அதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்துள்ள இந்தப் போரில் மருத்துவமனைகள் மீது குண்டு வீசியிருக்கிறார்கள். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த பகுதிகளில் குண்டு வீசி பெரும் தொகையான மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகள், தெர்மோ பெயரிக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாஸ்பரஸ் குண்டுகள் விழுந்த இடத்தில் உள்ள உயிரினங்கள், மரங்கள், மனிதர்கள் கூட எரிந்து கரிக்கட்டையாகிவிட்டார்கள்.

தெர்மோ பெயரிக் எனப்படும் குண்டு காற்று மண்டலத்தில் வெடிக்கும் அப்படி அது வெடிக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லி மாதிரி ஒன்றை கக்கும் பின்னர் அது சிதறி வெடிக்குமாம் அப்படி வெடிக்கும்போது அது வெடிக்கிற இடத்தில் உள்ள ஒட்டு மொத்த ஒட்சிசனையும் உரிஞ்சி எடுத்து விடுமாம். அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரும் இதயம் வெடித்து வெளிக்காயங்கள் இல்லாமல் அப்படியே சாக வேண்டியதுதான்.

மார்ச் மாதம் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த யுத்தக் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசு மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இதுபோக கொலை, பாலியல் வன்முறை, வற்புறுத்தி ஒரு இன மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து பிரித்தெடுத்து முகாம்களுக்குள் முடக்குவது போன்ற குற்றங்களை சிறிலங்கா அரசு மீது நூறு சதவீதம் நிரூபிக்க முடியும்.

கேள்வி உங்கள் அமைப்பு ஐ.நா. பாதுகாப்பு அவையில் சமர்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இலங்கை மீது இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் என்று நம்புகிறீர்களா?

 பதில் இது ஒரு நீண்ட போராட்டம். சிறிலங்காவை சுற்றி நிலவும் மௌனமே சிறிலங்காவை தொடர்ந்து படுகொலைகளையும் கடத்தலகளையும் செய்யத்தூண்டுகிறது. இதுவரை 19 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 35 பத்திரிகையாளர்கள் இலங்கையில் இருந்து உயிர் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா.

யுத்தக் குற்றம் புரிந்தமை தொடர்பாக 45 பக்கங்களில் ஆவணங்களையும் பல்வேறு ஆதாரங்களையும் இணைத்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் எங்கள் தலைவர் கண்ணபிரான் தலைமையில் மனுச் செய்திருக்கிறோம். பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களுக்குமே இதை அனுப்பியிருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசு இனப்படுகொலை புரிந்திருக்கிறது. யுத்தக் குற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது என்பதால் ராஜபக்ச சகோதரர்கள் மீதும் சரத் பொன்சேகா மீதும் பெல்ஜியம் பிரெஸ்சல்ஸ் நகரில் இருக்கிற சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறோம்.

உண்மையில் சர்வதேச கிரிமினல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும், சிறிலங்காவும் இதுவரை கையெழுத்திடவில்லை. ஆனால் அப்படி கையெழுத்திடாத அரசுகள் கூட இனப்படுகொலை குற்றம் புரிந்தால் அவர்களைத் தண்டிக்கவும் வழியிருக்கிறது.

கேள்வி வன்னிப் பிராந்திய மக்களின் இன்றைய நிலை குறித்து தகவல்கள் திரட்ட முடிகிறதா?

பதில்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரைக் இனப்படுகொலை செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு. தவிரவும் வடபகுதி மக்களின் விருப்பத்தையும் மீறி அவர்களை அவர்களின் பாரம்பரிய நிலங்களில் இருந்து பிரித்தெடுத்து முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கிறது.

இந்த முகாம்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், மனைவி கணவனிடமிருந்து என ஒரு குடும்பத்தை குடும்பமாக வாழ விடாமல் பல கூறாகப் பிரித்து இவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாவண்ணம் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி 25,000 ஆயிரம் பேரை புலி உறுப்பினர்கள் என்றும் 14,000 இளைஞர்களை புலிகளோடு தொடர்புடையவர்கள் என்றும் ஆக மொத்தம் 41,000 பேரை ரகசிய சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி, லோறன்ஸ் திலகர் போன்ற புலிகளின் தலைவர்களை இலங்கை அரசு கொன்றுவிட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் அவர்களின் நினைவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தி அவர்களை முடக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு. இவைகள் எல்லாம் மிகப் பெரிய மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்.

தவிரவும் மிகவும் தாழ்வான பகுதிகளில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட இந்த முகாம்களில் சின்னம்மை, தட்டம்மை, நெருப்புக்காய்ச்சல், போன்ற நோய்கள் உரிய சிகிச்சை இன்றி பரவி வருகிற நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் மழைக்காலம் துவங்கிவிடும் அப்போது இதே முகாம்களில் மக்கள் இருப்பார்கள் என்றால் அது நினைத்துப் பார்க்க முடியாத கேடுகளை அம்மக்களுக்கு உருவாக்கும். ஆகவே சிறிலங்கா அரசு முகாம்களில் இருக்கிறவர்களின் எண்ணிக்கை, கைது செய்யப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். போராளிகள் தவறு செய்திருப்பதாக இருந்தால் அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்துவதுதான் சிறிலங்கா அரசின் உரிமையே அன்றி படுகொலை செய்வதல்ல.
நன்றி-இன்போ தமிழ்