எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

புதன், 30 செப்டம்பர், 2009

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்!

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!

இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், இராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

ஐ.நா.வின் மனிதவுரிமை அவையில்  இலங்கை அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!
"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!
இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குத்துக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.

இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்கினியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!

மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று “ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்” என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் “இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது “ மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைத்து அழகு பார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!

இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!

தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?

வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!
நன்றி.தமிழ்வின் இணையம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

விடுதலைப் புலிகளால் தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்: விளக்கக் கோவை வெளியீடு


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர்.


வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு - தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக - கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற் குழு தெரிவித்துள்ளது.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் விதமாக – அதனை உருவாக்குவதற்கான செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி - பதில் வடிவத்திலான முதற்கட்ட விளக்கக் கோவையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அந்தச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களால் வெளியடப்பட்டுள்ள குறிப்பும், விளக்கக் கோவையும் கீழே தரப்பட்டுள்ளது:



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: சில விளக்கக் குறிப்புக்கள்



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்ட்டுள்ளதனையும் அதனை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனையும் தாங்கள் அறிவீர்கள்.



இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான தேவைகளை வெளிப்படுத்தி திட்ட முன்னறிவிப்பினை 16.06.2009 அன்று ஊடகங்களுக்கான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.



இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்தை வினா - விடை வடிவிலான விளக்கக் குறிப்பாகத் தற்போது வெளிப்படுத்துகிறோம்.



இது முதற்கட்ட விளக்கக்கோவையே. திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், விளக்கங்களை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம்.



இந்த விளக்கக்கோவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணை புரியும் என நம்புகிறோம்.



இந்த விளக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விடயங்களே.



இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேவையான மாற்றங்களை செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.



இந்தத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.



எம்முடனான தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org



திரு விசுவநாதன் உருத்திரகுமாரன்

இணைப்பாளர்



1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இது ஒரு புதுமையான எண்ணக்கரு.



தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.



சிறிலங்கா அரசு சட்டரீதியான தடைகளுக்கு ஊடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகவும் படுகொலைகளுக்கு ஊடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது.



இந்நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள ஜனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதிஉயர் மக்கள் பீடமாக இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.



தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குபெறுவது நடைமுறைச் சாத்தியம் இன்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.



இந்த அரசு தாயகத்தில் இருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.



2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது?



ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே தங்கியுள்ளது.



இதனை சிறப்பாக அடைவதற்கும் அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது.



இலங்கைத் தீவுக்குள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்து எடுக்கப்பட்டு - இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும் அதன் அடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது.



இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன.



அத்துடன், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரல் எழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.



தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒருவகையில் அரசியல் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.



அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், இராஜதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டங்களிலும் பிரகடனம் செய்து வருகின்றனர்.



இவற்றினை எல்லாம் எதிர்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்று எடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவில் இருந்து வெளியேறி வாழ்கின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.



3. நாடு கடந்த அரசாங்கத்திற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் இடையில் (Government in Exile) வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா?



இந்த இரண்டு அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த இரு அரசாங்கங்களும் கோட்பாட்டு ரீதியில் வேறானவை.



புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடிவரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவர்.



புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம். புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புகலிட அரசாங்கம் பொதுவாக தனது ஆளுகைக்கு உரிய விடயங்களாக தமது தாயகத்து விடயங்களை மட்டுமே கொண்டிருக்கும்.



நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறையாகும். அதன் கோட்பாட்டு அடிப்படை கடந்த இரு தசாப்தங்களாக சமூக அறிஞர்களின் கூடுதல் கவனத்தினை ஈர்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நாடு கடந்த வாழ்க்கை முறையுடனும் (Transnational life) நாடு கடந்த அரசியலுடனும் (Transnational Politics) தொடர்புபடுகிறது.



புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக்கொள்ளும்போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைப் பேணிவருகின்றனர்.



இவர்களது வாழ்க்கை முறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வினை இவர்கள் அமைத்துக் கொண்டபோதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு அம்சங்களைத் தீர்மானிப்பதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முக்கிய பங்கினை வகிக்கிறது.



ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையும் இவ்வாறுதான் உள்ளது.



புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், நாடு கடந்து தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் தமது வாழ்வினை தாயகத்தில் அமைத்துள்ள ஒரு சூழலில் அந்த மக்களும் ஈழத் தமிழரின் நாடு கடந்த சமூக வெளியின் அங்கமாவே உள்ளனர்.



மேலும், ஈழத் தமிழரின் அரசியல் இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்போது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூக நலன்மிக்கதும் ஜனநாயக அடிப்படைகளில் கட்டி எழுப்பப்படுவதும் ஆகும்.



தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்று எடுப்பதற்காக அமைக்கப்படுகிறது.



தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கைகளை மட்டும் அன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்த நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும்.



மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இந்த அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது.



தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொது அமைப்புக்கள் இந்த அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இந்த அரசாங்கம் திரட்டும்.



தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் இராஜதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடும்.



4. நாடு கடந்த அரசாங்கம் உருவாகிவிட்டதா? இல்லை எனின் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப்போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?



நாடு நடந்த அரசாங்கம் இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான உருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு நடந்த அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



இந்த செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படும்.



விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு உருவாக்க செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும்.



தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இந்த அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களினதும் அரசாங்கத்தினதும் ஆதரவினை இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் செயற்பாடுகளிலும் இந்த செயற்குழு ஈடுபடும். ஆலோசனைக் குழுவும் முஸ்லிம், இந்திய கல்விமான்களையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும்.



ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத் தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் தமிழர் மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களின் துணையுடன் நன்மதிப்புப் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் துணையுடன் அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய சுயாதீனமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல்களை நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்புடுவர்.



தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தம்மை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி சட்ட சிறப்புக் குழுவினரின் உதவியுடன் மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான யாப்பினை தயாரிப்பார்கள்.



5. நாடு கடந்த அரசாங்கத்துக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்? நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?



நாடு கடந்த அரசியல் என்பது ஒரே நேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கமுடியும்.



அதாவது, ஒருவர் ஒரே நேரத்தில் பிரித்தானியராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல.



இது ஈழத் தமிழர்களுக்கு வலுச் சேர்க்கின்ற விடயமாகவே கொள்ளப்படவேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடு கடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது.



புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற ஐரிஷ் மக்கள், வட அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவினை வழங்கினார்கள்.



புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்த நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன.



இத்தாலிய நாடாளுமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடம் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்கள்.



கெயிட்டியில் புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக ஒரு தனித் தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.



உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்திற்கு சான்று பகல்கின்றன.



இந்தப் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களின் நாடு கடந்த அரசுக்கான முயற்சியினையும் நோக்கவேண்டும்.



இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு பிரதேங்களினை தமது பாரம்பரியத் தாயகமாக கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினதும் தொடர்ச்சியான தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாக தாயகத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டனர்.



தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும் இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்ட இன வன்செயல்களும் காரணமாக ஒருபகுதி மக்கள் வட கிழக்குக்கு வெளியே வாழ வழி தேடி குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.



மற்றுமொரு தொகுதியினர் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வன்செயல்களில் இருந்த தங்களின் உயிரினைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தீவிற்கு வெளியே அகதிகளாக புலம்பெயர்ந்து குடிபெயர்ந்தனர்.

எஞ்சியிருந்தோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளூரில் அகதிகளாகவும், பொருளியல் வலுவற்ற அநாதைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும், சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.



இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத் தமிழர்களில் ஏறத்தாழ 90 வீதமானோர் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் குடியரசு அரசியல் அமைப்பின் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தேசத்தினுள் சீவிக்கமுடியாது தமது சொந்த விருப்பத்திற்கு மாறாக வெளியேறியவர்கள்.



எனவே தாயக விடுதலை தொடர்பாக ஆகக்கூடிய அக்கறையுடன் போராடுவதற்கும் தாங்கள் தாயகத்தினை விட்டு வெளியேற்றப்படக் காரணமான காரணிகளினை உடைத்து எறிந்து செயற்படுவதற்கும் இவர்கள் உரித்துடையவர்கள்.



தாயகத்தில் ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினை வென்று எடுப்பதற்கான பணிகளினை முன்னெடுப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.



6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்கே அமையும்? அத்தகைய அரசாங்கத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஓர் புதிய அரசியல் முயற்சியாகும்.



இலங்கைத் தீவுக்கு வெளியே புலம்பெயர்க்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களில் ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளின் குடியுரிமைகளினைப் பெற்றும் பெறாமலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் எல்லைகளினையும் தாண்டியதாக தங்களுக்குள் ஒரு ஈழத் தமிழ்த் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதும் தங்களது தாயகத்தின் அரசியல் விடுதலைக்கான வேட்கை கொண்டவர்களாக செயற்படுவதும் தொடர்ச்சியாக தாய்த் தேசத்தில் வாழும் உறவுகளுடனும் சமூகங்களுடனும் இறுக்கமான தொடர்பாடல்களினை பேணுவதும் இங்கு முக்கியமானது.



அமைக்கப்பட இருக்கும் தமிழீழ அரசாங்கம் ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு தேசத்தின் நிலப்பரப்பினை தளமாக கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற பாரம்பரிய அரசு செயற்பாடுகளினால் தனது இறையாண்மையினை நிலைநாட்ட முற்படுவதாகவோ இருக்கமாட்டாது.



ஆகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி செயற்படுத்த ஒரு நிலப்பரப்போ தேசமோ அவசியம் அற்றது.



புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளம் என்கின்ற தளத்தின் மீது தாயகத்தின் தன்னாட்சி உரிமைக்காக போராடும் குறிக்கோளினால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டி எழுப்பப்பட்டதாக இந்த அரசு இருக்கும்.



தாயகத்தில் வாழும் மக்களினது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருளாதார பண்பாட்டு செழுமை ஆகியவற்றினை தனது முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும்.



மேலும், புலம்பெயர் தேசங்களில் குடியேறிய ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் தேசங்களின் சட்டமுறைமைகளுக்கு இசைவாக தங்களினை ஒரு பலம் பொருந்திய சமூகமாக கட்டி எழுப்பவதற்கும் அதன் ஊடாக அந்தத் தேசங்களில் அவர்களால் அடையப்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மேனிலையினை தாயக விடுதலைக்கான உந்துசக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இந்த அரசு முன்னெடுக்கும்.



உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினை தமது வாழ்வாகக்கொண்ட எம்மவர்களின் சமூக பொருளாதார செழுமைக்கான ஆதரவுத்தளமாகவும் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஈழத் தமிழரின் தாயக விடுதலைக்காக ஒருங்கிணைக்கும் அடித்தளமாகவும் இந்த அரசு செயற்படும்.



தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினை தனது ஆட்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களினை நிறைவேற்றுவதற்கான செயலணிகளினையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களினையும் பொருத்தமான முறையில் பல்வேறு தேசங்களில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு உருவாக்கிச் செயற்படுத்தும்.



7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்குமா? அவைகளின் அங்கீகாரம் இன்றி இந்த செயல் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?



முன்னரே குறிப்பிட்டது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு புதிய முயற்சியே ஆகும்.



இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது தேசத்துக்கு வெளியே புகலிட அரசாங்கங்களினை உருவாக்கி செயற்படுத்தி இருந்தனர்.



பல சந்தர்ப்பங்களில் உள்நாடுகளில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக தலைவர்கள் நாட்டுக்கு வெளியே தங்களது அரசாங்கங்களினை நகர்த்தி செயற்படுத்தியதும் பின்பு சுமூகமான சூழ்நிலையில் அந்த அரசுகளினை தேசத்தினுள் கொண்டு சென்று தொடர்ந்ததும் உண்டு.



அத்தகைய நிலைமைகளில் ஒரு தேசத்தின் ஆதரவும் அங்கீகாரமும் அத்தகைய புகலிட அரசாங்கங்களின் இருப்புக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கும் அவசியமானது.



முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு அத்தகைய தன்மைகளுக்கு உட்பட்டதல்ல. புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு பலமான புலம்பெயர் சமூகம் அவசியமானதாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் பலமான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு.



அதேவேளையில் ஆயுதப் போராட்டத்துக்குப் புறம்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான அவசியத்தினை வலியுறுத்தும் அனைத்துலகங்களினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான அறைகூவல்கள் மிக சாதகமான காரணிகளாகவும் உந்துசக்திகளாகவும் உள்ளன.



8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய எண்ணக்கருவினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வேலைத்திட்டமாக கொள்ள முடியுமா?



ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்களினையும் அணுகுமுறை மாற்றங்களினையும் தாண்டி வந்துள்ளது.



இந்தக் காலகட்டத்திற்குள் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைத்துவங்களும் மாற்றம் பெற்றன.



இது வரலாற்றின் இயங்கியல் தன்மை ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலைமையினையும் காணவேண்டியுள்ளது.



1980-களின் பின்னரைப் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சிறிலங்காவினதும் அதன் நேச சக்திகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாதிக்கத்தினால் பலவீனமாக்கப்பட்டது. இங்கு பலவீனமாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டம் அல்ல.



'செப்ரம்பர் 11' என குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கருத்துருவாக்கத்தினை மிக வெற்றிகரமாக கையாண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு போரினை ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நிகழ்த்தி முடித்துள்ளனர்.



இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக்கடமை தமிழ் மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.



இந்த முக்கியமான பங்களிப்பினை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்வைத்தார்.



இன்றைய சூழலில் மேல் எழும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்குள் அனைத்துலகங்களின் நலன்சார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக - பொருத்தமான புதிய அணுகுமுறைகளினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டி உள்ளது. இது அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தினால் பரந்த தளத்தில் கட்டி எழுப்பி முன்னெடுக்கப்படவேண்டும்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனை தமிழ்ச்சமூகத்திடம் கையளித்ததன் மூலம் வரலாற்றின் இயங்கியல் போக்கில் தமக்குரிய கடமையினைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஒரு தனித்துவமானதும் பொதுமைத்தன்மை கொண்டதும் ஈழத் தமிழர்கள் யாவரினையும் ஒன்றிணைத்து உள்ளீர்க்கக் கூடியதுமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்.



இது மேல் இருந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்காது. முற்றாக கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கும்.



இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் சிறப்பாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் ஜனநாயகச் செயன்முறை ஊடாக பல தேசங்களிலும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினைக் கொண்டு செயற்படுத்தப்படும்.



இந்த அரசாங்கம் செயற்படவுள்ள முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.



9. சிறிலங்காவின் அரசும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் இதனை எவ்வாறு நோக்குவார்கள்?



சிறிலங்கா அரசும் அதன் இனவெறி ஆட்சியாளர்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' வேலைத்திட்டத்தினை மிகவும் அச்ச உணர்வுடனும் ஆபத்தானதாகவுமே பார்க்கின்றனர்.



ஏனெனில் சிறிலங்கா அரசு தற்போது தாயகத் தமிழர்களின் மேலும் தாயகத்தின் மீதும் கொண்டுள்ள மேலாண்மை உண்மையான வெற்றியும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. தாங்கள் கட்டி எழுப்பிய இராணுவ மேலாதிக்கத்தினால் அவர்கள் பெற்றுக்கொண்டது வலுச்சமனிலை மேலாதிக்கம் மட்டுமே. அதுவும் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே சாத்தியமானது.



அத்துடன், ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே அவர்களின் இராணுவ மேலாதிக்கத்தினால் பதிலளிக்க முடியும்.



இத்தகைய நிலைமையில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக அனைத்துலக தளத்தில் கட்டி எழுப்பப்படுவதனை சிறிலங்கா ஆட்சியாளர்கள் தங்களால் எதிர்கொள்ள முடியாத விடயமாகவே அச்சத்துடன் பார்க்கின்றனர்.



எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றிகொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.



இன்று சிறிலங்காவும் அதன் துனை சக்திகளும் தங்களின் வளர்ச்சியின் எல்லைக்குப் போய்விட்டனர். கடந்த கால அணுகுமுறைகளினை மீளவும் மீளவும் செயற்படுத்துவதனைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.



சிறிலங்கா தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.



முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடு ஈழத் தமிழர்களினால் திறக்கப்படும் புதிய ஆடுகளமாகும். இதன் விதிகளினை சிறிலங்காவால் தீர்மானிக்கமுடியாது. அதன் இராணுவ மேலாதிக்கமும் ஆள்புலக் கட்டுப்பாடும் இங்கு செல்லுபடி அற்றது. முடிந்தால் சில உதிரியான தனிமனித அச்சுறுத்தல்களினை மட்டுமே சிறிலங்காவின் ஆட்சியாளர்களினாலும் அதன் துணைச் சக்திகளினாலும் ஏற்படுத்தமுடியும்.



10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்போது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அமைப்புக்களினைப் போன்ற ஒன்றுதானா? அல்லது தனித்துவம் கொண்டதா? அவ்வாறு தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு தற்போது இயங்குகின்ற நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளினைப் பேணும்?



நடைமுறையில் பல்வேறு சமூக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.



அவை செயற்பாட்டளவிலும் பங்கேற்பாளர்களினைப் பொறுத்தும் தமக்குள் ஒத்த தன்மைகளினையும் தனித்தன்மைகளினையும் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துவத்தினையும் செயற்படு ஆற்றலினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.



எனினும் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான சவால்களினை எதிர்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவசியமானது.



முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஈழத் தமிழ்மக்கள் சார்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் மக்கள் ஆணைபெற்ற அதிஉயர் அரசியல் பீடமாக அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்படும்.



புலம்பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக நடைமுறை ஊடாக மக்கள் நேரடியாக தமது வாக்குகளினைப் பிரயோகித்து பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வர்.



அந்தப் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட்டு எதிர்கால செயற்பாடுகளுக்கான சட்டகத்தினை உருவாக்குவர்.



அவ்வாறு அவர்கள் செயற்படும்போதும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானமும் 1977 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் அதற்கு வழங்கிய மக்கள் ஆணையும் 1985 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய திம்புக் கோட்பாடுகளும் அடிப்படை நெறிப்படுத்தல் நியமங்களாக அமையும்.



இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான பிரதிநிதிகளினை நேரடியாக தெரிவு செய்வதன் மூலம் தான் மக்கள் ஆணையினை பெற்றுள்ளதனை உலகுக்கு பிரகடனப்படுத்தும் அதேவேளை ஒவ்வோர் தேசங்களிலும் செயற்படும் மக்கள் சார்ந்த கட்டமைப்புக்களினை தன்னுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தனது செயற்றிட்டங்களினை கையாள்வதற்கான வலையமைப்பினையும் பங்காளி உரித்தாண்மையினையும் கட்டி எழுப்பும்.



இவ்வாறு மக்கள் ஆணை கொண்ட, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல் பீடமாகத் தன்னை நிலைநிறுத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களைத் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களினை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.



இந்தக் கலந்துரையால்களுக்கு ஊடாக பொருத்தமான இணைவு வடிவம் கண்டறியப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.



11. நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் அரசியல், சமூகம், பொருண்மியம், பாதுகாப்பு, புனர்வாழ்வு - புனரமைப்பு - மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் எத்தகைய சாதக பாதகவிளைவுகளினை ஏற்படுத்தும்?



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதன்மையான குறிக்கோளாக ஈழத் தமிழரின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை கொண்டிருக்கும் அதேவேளையில் இரட்டை முனைகளினைக்கொண்ட அணுகுமுறையினை முன்னெடுக்கும்.



ஒன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல். மற்றையது புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக்கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்.



இங்கு குறிப்பிட்ட நோக்கங்களினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத் தீவிற்குள் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் உள்ளூர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமையினைத் தக்கவைப்பதற்காகவுமான பொருத்தமான மாற்று ஒழுங்குகளினையும் உப நிறுவனங்களினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும், அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களினை பொருத்தமான முறையில் உள்வாங்கும்.



தேவையான நிலைமைகளில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தி தாயகத்தின் நல்லாட்சி, மீள்குடியேற்றம், அபிவிருத்தியும் முதலீடும், நிறுவனமயமாக்கம், மனிதவள மேம்பாடு, சூழல் நல்லாட்சி என்பவை தொடர்பாக விவாதித்து அவர்களின் பங்களிப்பினை தமிழ் மக்களின் முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும்.



இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கு பொருத்தமான உள்ளீடுகளினை வழங்குவதன் ஊடாக அவர்களினை வலுவூட்டி அவர்களின் செயற்பாடுகளினை முன்நோக்கி நகர்த்தும்.



12. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய தலைமைத்துவத்தினை வழங்கும்? நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவைதானா? அவர்கள் தற்போது அடைந்துள்ள சமூக பொருளாதார மேனிலை போதாதா?



மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.



எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு தேசத்தில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு குறிப்பாக விடுதலைக்காக போராடும் இனத்திற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.



அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதார புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தனது சுய ஆற்றல்களினாலேயே மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இந்த சமூகம் தனது வளர்ச்சியினை ஒரு வரையறைக்குள் முடக்கிக்கொண்டுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.



கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் வீதத்தினை கொண்டிருந்தாலும் இந்த சமூகம் உயர் தீர்மானம் எடுக்கும் கட்டளைப் பீடங்களில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிகமிக குறைவாகவே உள்ளது.



அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலினைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம் தொழிற்பாடு மூலதன உருவாக்கத்தில் மிகப்பலவீனமாகவே காணப்படுகின்றது.



தொழில் வினையாற்றலில் சிறப்பு தன்மைகளினைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில் வாய்ப்புக்களினை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே அவதானிக்கப்படுகின்றது.



இன வன்செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட உயிர் ஆபத்துக்களினையும் அபாயங்களினையும் துணிகரமாக எதிர்கொண்டு தம்மை தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள், திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர்.



போரின்போது இழக்கப்பட்ட வாய்ப்புக்களினை மீளவும் விரைவாக கட்டி எழுப்புவதற்கு உரிய வங்கிகள், மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றினைக் கூட சொந்தமாக கட்டி எழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தின் கீழான கட்டமைப்புக்களிலே தங்கி வாழும் சமூகமாக உள்ளனர். இவைகள் யாவும் மாற்றப்பட வேண்டும்.



ஈழத் தமிழர்களின் மேனிலை என்பது அனைத்துலகத்தின் சகல பரப்புக்களிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வாழும் தேசங்களின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவான மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத் தமிழர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும்.



தேசங்களின் தீர்மானம் எடுக்கும் உயர்கட்டளைப் பீடங்களின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஈழத் தமிழர்களின் அறிவாற்றலும் நிபுணத்துவமும் விரிவுபடுத்தப்படவேண்டும். அனைத்துலக நிறுவனங்களின் உயர்பீடங்களில் ஈழத் தமிழர்களின் ஆளுமை பிரதிபலிக்கவேண்டும். அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பயணம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் விரைவுபடுத்தப்பட்டதாகவும் அமையும்.



இதற்கு தேவையான மூலோபாய - தந்திரோபாய ரீதியான தலைமைத்துவத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.



13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசாங்கத்தின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டனவா? உத்தேசிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயகத்தின் மனிதநேய நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா?



'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற செயல் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாகும். அதேவேளையில் அதுபற்றிய போதிய கலந்துரையாடல்களினையும் விவாதங்களினையும் மக்கள் மத்தியிலும் பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மத்தியிலும் உருவாக்காமல் இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பது இந்த முயற்சியின் அடிப்படைகளினையே மறுப்பதாக அமையும்.



தேசத்தில் நிலவும் மனிதநேய அவலங்கள் தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைக்கான புலம்பெயர் சமூகத்தின் அதி உயர்பீடத்தினை உருவாக்குவதில் நியாயமான கால அவகாசம் கொண்டிருப்பது மிக முக்கியமானது.



இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விவாதங்களாகவே அமைந்துள்ளன.



இந்த விவாதங்கள் ஊடாக ஓரளவுக்கு சிறப்பான முடிவுகளினை உருவாக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைத்துள்ளன.



இந்த ஆலோசனைகள் யாவற்றையும் கவனத்தில் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான உருவாக்க குழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.



முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலுவைப் படிமுறை கீழே தரப்படுகிறது.



1 ஆம் நிலை: கருத்துருவாக்கம்.



2 ஆம் நிலை: நிபுணத்துவ ஆலோசனைக் குழுவினை அமைத்தல்.



3 ஆம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களினை உருவாக்குதலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாக தெரிவு செய்தலும்.



4 ஆம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படை வடிவத்தினை வரையறை செய்தலும் பிரதிநிதிகளினை தெரிவு செய்வதற்கான தேர்தல் செயன்முறையினை வடிவமைத்து முன்னெடுத்தலும்.



5 ஆம் நிலை: தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையினை கூட்டுதலும் யாப்பினை உருவாக்கி அங்கீகரித்தலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டளைப் பீடத்தினை அங்குரார்ப்பணம் செய்தலும்.



6 ஆம் நிலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.



மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் தற்போது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் தொடர்கின்றன.



14. நாடு கடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?



தமிழர் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேர்தல்களை ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பதற்கு தற்போது திட்டமிடப்படுகிறது.



இது குறித்த மேலதிக தகவல்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.



15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு இணைவது?



இந்தக் குழுவில் இணைய விரும்புவர்கள் 18 வயதினை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.



இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.



ஓவ்வொரு நாடுகளுக்கும் குழுக்களுக்கு தலைமை தாங்குபவர் பெயரினையும் அவரது தொடர்பு விபரங்களையும் விரைவில் அறியத் தருவோம்.



அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனை விட எமது மின்னஞ்சல் முகவரியுடன் மூலமும் தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம்.



எமது மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
நன்றி:தமிழ்வின்

வியாழன், 10 செப்டம்பர், 2009

அஞ்சாதே..!

      1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: “அநீதியான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண்ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவமதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமாயிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கெளரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒரு சில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள்.இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மனுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது”.




ஆம், மகாத்மா காந்தி, பிடல் காஸ்ட்ரொ, நெல்சன் மண்டேலா, பேராயர் ரோமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர்களாகப் போற்றப்படுகின்றமைக்குக் காரணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக்குள் தாங்கி, பின் வாங்காத போரளிகளாய், தளராத மன உறுதியுடன் நின்று போராடினார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள்.



எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மண்பினை தாங்கி களம் நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாசைகளை மட்டுமல்ல – ஆயிரம், லட்சங்களிலான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கைகளையும் அபிலாசைகளையும்.



எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத்தலைப்பு, “அறியப்படாத வீரனுக்காக”. (To the Unknown Soldier) இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக் கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண்பும், மேன்மையும் தோற்றுபோன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.



வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகல் நிறையத் தெரிந்தவன். நயமாகப் பேசி அவனைத் தம் வயப்படுத்த முயல்கிறார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும்பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் அந்த வீரனோ உறுதியாக நிற்கிறான். விடுதலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, ரத்தம் வழிகிறது. “எப்படி இருக்கிறது உன் விடுதலை?” என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல்வான்: “வலிக்கிறது ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை –வெல்லவும் முடியாது.”



அமெரிக்க ராணுவத்தினரின் கோபம் கிறுகிறுக்கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்பு குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கிவிட்டு முன்னிலும் வக்கிரமாய் கேட்பார்கள் – “இப்பொ எப்படியிருக்கிறது உன் விடுதலை இலட்சியம்…?” அப்போதும் அவன் பதில் சொல்வான்: “வலி தாங்க முடியவில்லைதான்… ஆயினும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது”.



ஆத்திரம் தலைக்கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார்கள்.முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலை நோக்கி நீட்டியபடியே அமெரிக்கத் தளபதி பைத்தியம் தலைக்கேறியவனாய் கத்துவான் – “நாயே… சாகப்போகிறாய்… இப்போதுகூட உன் உயிரை காப்பாற்றிக்கொள்ள விருப்பமில்லையா?” உச்ச வேதனையினூடேயும் முகம்மலர சாந்தம் வருவித்துக்கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். “அய்யா… உங்களைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்லவில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் லட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக்கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்” என கூறிக் கொண்டே ‘சுடுக’ என்கிறான்.



பைபிளில் யேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துவார்: “உயிரைக் கொல்ல முடியாமல் உடலைக் கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்” முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடும்மென்பதுதானே உண்மை? உண்மைதான்… உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை லட்சியங்களுக்காய் நிற்கிறவர்களின் உயிர் சாகா வரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.



மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்பணித்து சுமார் நாற்பது ஆண்டுகாலம் கலகம் செய்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளிகளுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான்: “அஞ்சாதீர்கள், உடலை மட்டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.



“தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் திளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல்லாம் அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.



குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்து விட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்து பொருட்கள் யாவும் மக்களுக்காய் வினியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.



தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராசபக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின்னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்காக் காரணம் – தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற்கான புறச்சூழலை ராசபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர்பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத்துணை இறுக்கம் காட்டுமென்றும், ராசபக்சே அரசுக்கு முழுபக்கபலமாய் இருக்குமென்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.



எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உண்ர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.



உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக் காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராசபக்சே வெற்றிபெற காரணமாக இருந்ததுதான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுபவர். ஆனால் ராசபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந்தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.



நன்றி.நக்கீரனுக்காக ஜெகத்கஸ்பர்

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ராஜீவ்காந்தியை கொல்ல... சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல்

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ - இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.


இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.



‘சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம்’ என்ற (From Peac to war, Insurgency to Terrorism) புத்தகத்தை சிரில் ரணதுங்க எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொழும்பில் ஜூலை 1-ம் தேதி நடைபெற்றது. இலங்கையின் கூட்டுப்படைத் தளபதியாகப் பணியாற்றியபோது தனக்கு நேர்ந்த அனுபவங்கள், அவர் சந்தித்த பிரச்னைகள் குறித்து இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இதில் ராஜீவ்காந்தியை இலங்கையில் படுகொலை செய்ய நடந்த சதியில் அவர் தப்பிய விதம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.



இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவியை 1987-ம் ஆண்டில் நாடினார். இதையடுத்து இந்தியா- இலங்கை ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் இணைந்து தயாரித்தன.



அப்போது ஜெயவர்த்தனே, தனது பாதுகாப்பு ஆலோசகராக அவரது மகன் ரவி ஜெயவர்த்தனேவை நியமித்திருந்தார். முப்படைகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, ரவி தரும் அறிக்கைகளைப் படித்த பிறகே ஜெயவர்த்தனே எந்த முடிவையும் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1987-ம் ஆண்டு ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனேவும், ராஜீவ்காந்தியும் கையெழுத்திட்டனர். அதற்காக ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றார்.



ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டபோது, சிங்கள ராணுவ வீரரான விஜயமுனி விஜித ரோஹன டி சில்வா, துப்பாக்கியால் ராஜீவ்காந்தியைத் தாக்கினார். அவர் சாதுர்யமாக விலகிக் கொண்டதால் துப்பாக்கியின் பின்புறப் பிடியின் அடியிலிருந்து தப்பினார். இந்தச் சம்பவம் அப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச்சம்ப-வத்தைப் பலநாடுகள் கண்டித்ததால் ராஜீவ்காந்தியிடம் ஜெயவர்த்தனே மன்னிப்புக் கேட்டு வருத்தமும் தெரிவித்-தார். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு இச்சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ராஜீவ்காந்தி இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரியவந்துள்ளது.



ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார். அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.



‘துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படை-வீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதை-யின் போது பயன்படுத்தினர்’ என்று இந்தப் புத்தகத்தில் ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ளார்.



அதாவது துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்-பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்-கொன்றிருப்பார் என்பதை இவரது புத்தகம் மறை-முகமாக விளக்குகிறது.



ரவி ஜெயவர்த்தனே இதுபோன்ற ஆலோ-சனையை வழங்கியிருக்காவிட்டால், ராஜீவ்காந்தி இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆலோசனையை ரவி வழங்கியதற்கு கூறிய காரணம், எகிப்து நாட்டின் அதிபர் அன்வர் சதாத் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுதான்’ என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிரில்.



இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய வெளியீட்டாளர் விஜிதயாப்பா, ராஜீவ்-காந்தியை துப்பாக்கியின் பிடியால் தாக்கிய ராணுவ வீரன், “முக்கியமான சம்பவத்தை நாளை நிகழ்த்த உள்ளேன். ஆகவே வீட்டிற்கு உயிருடன் திரும்பி வராமல் இருக்கலாம் என்று தனது நண்பனிடம் ஏற்கெனவே கூறியுள்ளான்” என்ற தகவலையும் வெளியிட்டார்.



அதாவது ராஜீவ்காந்தியை கொல்வதற்கு சிங்களர்கள் தீட்டியிட்டிருந்த திட்டத்திலிருந்து அவர் தப்பிவிட்டார். ஆனால், ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகளும், சிங்களர்களும் கோபமாகவே இருந்-திருக்கிறார்கள். இந்திய அமைதிப்-படையை இலங்கைக்கு அனுப்பியதாலும், அவர்கள் தமிழ்ப்பெண்களை கற்பழித்ததாலும் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் ‘துன்பியல்’ சம்பவத்திற்கு ஆட்படுத்தினர். ஆனால், சிங்களர்கள், ராஜீவ்காந்தி மீது கொண்டி-ருந்தது கோபமா? அல்லது சர்வதேச சதிகார சக்திகளின் தூண்டுதலா? இதைப்-பற்றி இந்தியா இப்போது சிந்தித்தாலும் தவறில்லை. நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு அது பயன்படும் என்ற கருத்தும் இலங்கையிலேயே ஒரு தரப்பினரிடம் இருந்து வெளி வருகிறது.



-நன்றி தமிழக அரசியல்-

புதன், 26 ஆகஸ்ட், 2009

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

நன்றி: தமிழ்வின்


தமிழீழத்தின் பலபாகங்களிலும் உள்ள மனிதப் புதைகுழிகள் ((Amnesty International வெளியிட்ட செய்தி) அமெரிக்கா செய்மதிப் புகைப்படக்கருவிகள் சிக்கிக்கொண்டதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு விடுதலைப்பலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைத் தாங்கள் முழுமையாகத் தேடிக்கண்டுபிடித்த பின்னரே மீள்குடியேற்றமும், வெளியுலக - உடகவியலாளர்களை உள்ளே அனுமதிப்பதும் எனக் கூறி காலம் கடத்துவதுடன், ஈழத் தமிழினத்தின் அழிப்பிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.

ஈழத் தமிழினத்தைத் திடமிட்டு அழித்து அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்யும் பாரிய செயல் திட்டத்தை திட்டமிட்டு இலங்கையின் பாசிச அரசு செயல்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அதற்காக, விடுதலைப் புலிக்கு எதிரான போர் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் தமிழின அழிப்பிற்கு மேல்முலாம் பூசி சர்வதேசத்தை ஏமாற்றித் தனது இனஅழிப்புக் கபடநாடகத்தை சிறப்பாக அரங்கேற்றியதன் மூலமம் ஒருலட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழினத்தைக்கொன்று குவித்துவிட்டு அதற்கு அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களை மின்சார முட்கம்பிகளுக்குள் முடக்கிச் சிறைவைத்துக்கொண்டு, அவர்களையும் நாளாந்தம் அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனைத் தட்டிக் கேட்பார் யாரும் இல்லை. அப்படிக் கேட்கச் சென்ற சர்வதேச அரசியல் வாதிகளும் இலங்கை அரசின் அற்பசொற்ப சலுகைக், களியாட்டங்கள், விருந்துகளுக்கும் விலைபோய்விட்ட நிலையில் இன்று ஈழத் தமிழினம் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுக்கொண்டு வருவதை யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்.

அண்மையில் மொரட்டுவையில் இரண்டு சிங்கள இளைஞர்கள் பொலிஸ் காவலில் விளக்கத்திற்குள்ளாக்கப்பட்ட வேளையில் கொல்லப்பட்டதற்காக அந்த பொலிஸ் நிலையமே நிர்கூலமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும்? யுவதிகளும் விளக்கம் என்னும் காரணம் காட்டி அழைத்தச் செல்லப்பட்டு அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் பின்னர் அவர்கள் அடையாளம் தெரியாமல் கொலை செய்யப்படுவதுமாக இன்று ஈழத்தமிழினத்தின் அழிப்பு நடவடிக்கைகள் இலங்கையின் பாஸிச அரசினால் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அவற்றில் ஒருசிலவற்றை சர்வதேச சமூகத்தின் கண்களுக்குத் தருகின்றோம்......

செய்மதிப் படங்களின் கணிப்பின்படி 1346 மனிதப் பதைகுழிகள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அவற்றுள் வகைதொகையின்றிப் புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் சொல்லப்போகும் பதில் தான் என்ன?

புதிதாகக் கிடைத்த செய்மதிப் படங்களின் கணிப்பில் வன்னிப் பகுதியில் மொத்தம் 17 பாரிய தமிழின அழிப்புத் தாக்கதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதம் 14ந்திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 12 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் உள்ளது.

மின்சார முட்கம்பிச் சிறை முகாம்களுக்குள் இருக்கும் தமிழ் இளைஞர்களையும். யுவதிகளையும், விடுதலைப்புலிகளின் அமைப்பின் காவற்துறை, அரசியல்பிரிவு என்றெல்லாம் தவறான குற்றச்சாட்டுக்களைக் கூறி நாளாந்தம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் அகதி முகாமிற்குத் திரும்பாத நிலையே இன்றுவரை தொடர்கின்றது. (இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவத்தினரதும், அவர்களின் எடுபிடிகளினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உள்ளானவர்கள் என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றாகும்)

கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் தொழில் செய்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் வாத்தகர்களிடம் நாளாந்தம் கப்பம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையில் பலர் தங்கள் முதலை இழந்தவண்ணம் இருக்கின்றனர். அப்படிக் கொடுக்காத, கொடுக்க முடியாத தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான் கும்பலினாலும், இராணுவத்தினரின் போலிக் குற்றச்சாட்டின் பெயரிலும் கைது செய்தும், கடத்தப்பட்டும் கப்பப் பணம் கிடைக்காதவிடத்து கொலை செய்யப்படுவது நாளாந்த நடைமுறை சம்பவங்களாகிவிட்டன.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல வெளிநாடுகளில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பும் தமிழர்கள் கட்டநாயக்கா விமானநிலையத்தில் கைதுசெய்து கடத்தப்படுவது நாளந்த செயற்பாடாகிவரும் இன்றைய நிலையில், இன்று அதனைச் சிறப்பாகச் செயற்படுத்தும் வகையில் அங்கேயே ஓர் புலனாய்வு விசாரணைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு கொண்டு செல்லப்படும் தமிழர்கள் யாரும் தங்கள் உடமைகளையும், பெருந்தொகைப் பணத்தையும் இழந்துதான் வெளியே வர முடிகின்றது. அப்படி வக்கற்ற வகையற்றவர்கள் ஒரேயடியாகக் காணாமல் போய்விடுவது இப்பொழுது சர்வசாதாரணமாகிவிட்டது.

இராணுவ நடவடிக்கைகளின்போது ஒவ்வொரு சதுர அடியாக படையினர் நகாந்துதான் போரினை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லிய இராணுவப் பேச்சாளர், தற்போது விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதங்களும் தளபாடங்களும் தாங்கள் கண்டெடுப்பதாகவும், அவை முற்றாகக் கண்டெடுக்கப்படுவதுடன், அங்கெல்லாம் கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவற்றையெல்லாம் மீட்டெடுத்த பின்னர் தான் மீள் குடியேற்றம் என்றும் சாவதேசத்திற்குப் பாசாங்குகாட்டி நாட்களைக் கடத்தகின்றார்கள்.

(ஏனெனில் இறந்துபோன இலட்சக்கணக்கான மக்களின் சடலங்களைப் புதைகுழிகளினின்றும் மீட்டெடுத்து அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு) அவர்களுடைய இந்த நடவடிக்கையை அனைத்துலகமும், ஐ.நா. சபையம் தலையாட்டிப் பொம்மைகளாகிவிட்டது போன்ற நிலை இன்று உருவாகி இருப்பது சர்வதேசத் தமிழினத்தை பெரும் கவலைக்குள்ளாக்கி இருக்கின்றது.

கடந்த வாரம் மலையகத் தமிழ்ப் பெண்கள் இருவர் கொழும்பில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தற்போதைய மழை காரணமாக மின்சார முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் தொற்றுநோய் பற்றிக் கொள்வதன் மூலம் அவர்கள் பாரிய அழிவினை எதிர்நோக்கி உள்ளனர் என்றும், அவர்கள் கிறிமினல் குற்றவாளிகளை விட மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணியாளரும், சட்டத்தரணியுமான திருமதி நிமால்கா பெர்னான்டோ அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.

ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அகதி வாழ்வை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பாரே தவிர அவர்களுக்கு நல்ல தீர்வுத் திட்டததையோ அல்லது 13வது அரசியல் சட்டத்தையோ நடைமுறைப்படுத்தவே மாட்டார்.

இப்படியான அகதி வாழ்வில் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை முற்றுமுழுதாக அழிக்கும் நடவடிக்கையே மேற்கொள்வார் என்றும் அவர் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அவர்கள் யாரும் இருக்க சொந்த நிலம் அற்ற அகதிகள் அல்ல. அவர்களின் சொந்த இடங்களுக்க அவர்களைத் திரும்பவும் செல்ல அனுமதித்தாலே போதும். அரசு அவர்களுக்கு எந்த அகதி நிவாரணமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் நாளாந்த சராசரி வாழ்க்கையை சிறப்பாக நடாத்திக்கொள்ள முடியும்.

அகதிமுகாமில் இருந்து வேறு முகாம்களுக்க அழைத்துச் செல்லப்படுவதாக நாளாந்தம் கொண்டு செல்லப்படும் மக்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள் என்ற தகவல் இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

நாளாந்தம் அகதி முகமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்து கொண்டு செல்லப்படும் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற பதிலும் இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.

இராணுவத்தினரின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஒருசிலர் அகதிமுகாமில் இருக்கும் மக்களில் சிலரை வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்சொல்லி அவர்களின் உடமைகளையும் பணத்தையும் அபகரித்துக்கொண்டு பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே போய்விடுவதம் அகதி முகாம்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. இதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் 80 வீதம் நிறைவேறிவிட்டது. அதேவேளை விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லாத அப்பாவித் தமிழ்மக்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை அரசு இன்னமும் ஏன் மீள்குடியேற்றம் செய்ய தாமதம் செய்கின்றது என எதிர்கட்சித் தலைவர் அரசின்மீது குற்றம் சாட்டியுள்ளார்.

போரின்போது அரசின் வேண்டுகோளை நம்பி சரணடைந்த அப்பாவி மக்களை அரசு ஏமாற்றிக்கொண்டே வருகின்றது. மூன்ற மாதங்களுக்குள் அவர்களின் இடங்களுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறிய அரசு இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்துகின்றது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன் அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக மீள் குடியேற்றம் செய்ய முடியாது என சரத் பொன்சேகா கடந்த வாரம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

( அதிகரித்து வந்த மக்கள் செல்வாக்குடன் முதலமைச்சாராகும் நிலையை நோக்கிய எல்லா முன்னுரிமைகளும் பறிக்கப்பட்டு தனக்கு சமூகம் முன்னுரிமை தருவதை ராஜபக்ச அன் பிறதேர்ஸ் இனால் சகிக்க முடியாமல் தான் பல்லுப் பிடுங்கிய பாம்பாக தன்னை நடத்துவது தெரியாது வாழும் இவரது அறிக்கையே இப்படியென்றால் மற்றவர்களின் செயற்பாடுகள் எப்படி என்று சர்வதேசம் எண்ணிப் பார்க்க வேண்டும்.)

கிழக்கு மாகாணத்தில் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் காட்டித் தருவதாக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போவதும் நீரேரிகளில் பிணமாக மீட்கப்படுவதும் அன்றாடம் நிகழ்வாகிவிட்டது. (மட்டக்களப்பு, பியகம ஆகிய இடங்களிலுள்ள வாவிகளில் மீட்கப்பட்ட தமிழ் வாலிபர்களின் சடலங்கள், இப்படிக் கொலை செய்யப்படும் அப்பாவித் தமிழ் இளைஞர்களது தான்....)

இவை எல்லாவற்றையும் தாண்டி இலங்கை அரசின் தமிழினப் படுகொலையும், அரச பயங்கரவாதமும் மலேசியாவில் கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அதனைத் தொடர்ந்து நோர்வேயிலும், அமெரிக்காவிலும் மற்றம் சாவதேசங்களிலும் தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துவருவோம், தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற சவால்விடும் இலங்கையின் ஜனாதிபதியும் அவரின் இராணுவ பேச்சாளரும். (கையாலாகாத்தனமாகச் செயற்பட்ட மலேசியாவைப்போல் சர்வதேசமும் இருந்துவிடும், அல்லது தங்களிடம் விலைபோகும் என இலங்கை பாஸிச அரசு நினைப்பதுதான் வேடிக்கை....)

போரும் முடிவுக்கு வந்து, விடுதலைப் புலிகளின் தலைவரையும் கொலைசெய்து, அந்த இயக்கத்தையே முற்றாக அழித்துவிட்டதாக வெற்றிவிழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கையின் பாஸிச அரசு இன்னமும் புலியென்று மக்களை ஏமாற்றிக்கொண்டு கடன் சுமைகளை மக்கள் சுமப்பது தெரியாமல் இருக்கும் அப்பாவிக் கிராமத்து மக்களை ஏமாற்றக் கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது.

தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிக் கிராமத்து மக்கள் எப்பொழுது தான் உண்மையை உணருவார்களோ தெரியாது. இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ஒன்றரைக்கோடி ரூபாவிற்கு மேல் அந்நியநாட்டுக் கடன்தொகையைத் தலையில் சுமந்தபடிதான் பிறக்கின்றது என்னும் உண்மை நிலை எப்போது அப்பட்டமாக வெளிவரப்போகின்றதோ?

நன்றி: தமிழ்வின்

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்




சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை "நமது நோக்கு" என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.

சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது 'ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது' என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.

ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.

பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.

வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.

சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.

'விடுதலைப் புலிகள்' என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.

இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.



சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.

சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

நன்றி. ஈழநாடு பாரிசு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஈழம் அவசியம் – அவசரம்!

ஈழம் அவசியம் – அவசரம்!
கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள்.

‘ஐந்தாம் யுத்தம்’ கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று ‘தமிழீழத்தில்’ தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. ‘கூடாரங்களைப் பிரியுங்கள்!’
ஈழத் தமிழரின் இன்றைய பெயர், ‘கூடார மக்கள்’. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், ‘இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்’ என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள்.

கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. ‘கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். ‘பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்’ என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன.

இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?
முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

“படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!” – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள்.

ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

‘இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை’, ‘பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்’ என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், ‘எமர்ஜென்ஸி’ பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.
“20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்” என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று.
நன்றி: விகடன்