எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

யாகத் தீயில் எறியப்பட்ட தமிழனின் தன்மானம்!

தமிழீழத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆரம்ப காலங்களில் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவரது திருமணம் இந்து முறைப்படி ஒரு இந்துக் கோயிலில் நடந்தது. சில காரியங்கள் சாத்தியமான பொழுது இந்துக் கோயில்களில் நேர்த்திக் கடனை செய்தும் உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்தது.

இன்று போராளிகளின் திருமணங்கள் தமிழ் முறைப்படியே நடக்கின்றன. புரோகிதர்கள் இல்லாமல் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாமல் இந்தத் திருமணங்கள் நடக்கின்றன. போராளிகளுக்கு வட மொழிப் பெயர்களை தவிர்த்து தூய தமிழில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைத்தால், 10000 ருபாய்கள் அக் குழந்தைக்காக தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்படுகிறது. மற்றைய ஆரியப் பார்பன கொண்டாட்டங்களை விட தமிழர்களின் திருநாளாகிய பொங்கல் விழா முன்னிலைப்படுத்தப்படுகிறது.

தமிழீழத்தில் படிப்படியாக நிதானமான முறையில் பகுத்தறிவு வளர்க்கப்படுகிறது. பார்பன மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பரபரப்புரைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆனால் இங்கு ஐரோப்பாவில் தமிழர்கள் மத்தியில் மூட நம்பிக்கைகளே வளர்த்தே தீருவோம் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது. ஈழத்தின் பக்கம் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக கறுப்புப்பட்டி வாரம் செய்தார்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. உண்மையில் இது ஒரு நல்ல விடயமும் கூட. ஆனால் கறுப்புப் பட்டி வாரத்தின் கடைசி நாளில் ஐரோப்பாவில் உள்ள இந்து ஆலயங்களில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெறுவதற்காக யாகம் செய்துதான் சகித்துக் கொள்ள முடியாத மூடத்தனத்தின் உச்சமாகப் போய்விட்டது. இவர்கள் தமிழினத்தின் தன்மானத்தை தீயில் போட்டு யாகம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

யாகம் என்பது ஆரியர்கள் மேற்கொள்ளும் ஒரு வழக்கம். யாகம் குறித்து அதிகமாக ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத்தத்தின் விளக்கத்தின்படி எதிரிகளை வெல்வதற்கு யாகம் செய்யப்பட வேண்டும். யாகமானது ஆடு, மாடு, குதிரை போன்றவைகள் வெட்டப்பட்டு தீயில் போடப்பட்டே செய்யப்பட வேண்டும். இவைகள் தேவர்களின் அரசனும் உடம்பு முழுவதும் பெண்குறிகளைக் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கான படையல்களாக கொள்ளப்படும். இவ்வாறு ரிக் வேதம் கூறுகிறது. யாகத்தின் மீது ஓதப்படும் மந்திரங்கள் தமிழின எதிர்ப்புக் கொண்டவை. "ஓ, இந்திரனே உன் பாதங்களை சூத்திரன் மீது இறக்கு" என்பது போன்ற வார்த்தைகளோடு மிகவும் ஆபாசமான வார்த்தைகளுமே யாகத்தின் போது மந்திரமாக ஓதப்படுகின்றன

பௌத்த, ஜைன மதங்கள் உருவாகி ஜீவகாருண்யத்தை போதித்து, அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பொழுது, யாகங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுவது குறைந்து போனது. தற்பொழுது ஆடு, மாடுகளுக்கு பதிலாக நெய் வார்க்கப்படுகிறது. ஆனால் மந்திரங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த மந்திரங்களை தமிழில் சொன்னால், அதன் அர்த்தம் விளங்கி மந்திரம் சொல்பவனை மானமுள்ள தமிழன் யாராவது எட்டி உதைத்து விடுவான் என்ற அச்சத்திலேயே இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தமிழில் சொல்வதில்லை.

இப்படி ஆரியர்கள் தமிழனை ஏமாற்றுவதற்கும் அடிமை ஆக்குவதற்கும் உபயோகித்த சூழ்ச்சிகளில் முக்கியமானது இந்த யாகம். எதிரியை வெல்வதற்கு யாகம் செய்வது ஆரியனின் மரபு என்றால், போர் செய்வது தமிழனின் மரபு. இன்றும் ஈழத்தில் தமிழன் அதைத்தான் செய்கிறான். யாகம் செய்வது தமிழினத்தின் மரபுக்கும் தன்மானத்திற்கும் முரணானது.

ஆனால் எமது உரிமைப்போர் வெல்வதற்கு ஐரோப்பாவில் யாகம் செய்தார்கள் என்றால், இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் தமிழினத்தின் போராட்டம் குறித்து எவ்வித தெளிவும் அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதுவும் விடுதலைப் போராட்டத்திற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற சில பணியாளர்களும் இந்த யாகத்திற்காக ஓடியாடி வேலை செய்தார்கள் என்கின்ற செய்தி மிகவும் வேதனையை தருகிறது. இந்த பார்ப்பனிய மூடத்தனங்கள் குறித்து சிறப்பான கட்டுரைகள் எரிமலை, ஈழமுரசு போன்ற ஊடகங்களின் பலமுறை வெளிவந்திருக்கிறது. இவைகளை விற்பதற்கு ஓடித் திரிபவர்கள் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

இன்று யாகம் செய்தவர்கள் நாளை "தமிழீழம் கிடைப்பதற்கு போராளிகள் அனைவரும் அலகு குத்தி காவடி எடுக்க வேண்டும்" என்று ஆலோசனை சொன்னாலும், சொல்வார்கள். எதற்கும் விடுதலைப்புலிகள் இவர்களோடு அவதானமாக இருப்பது நல்லது.


வி.சபேசன் (19.06.06)

கருத்துகள் இல்லை: