எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

சனி, 10 ஜனவரி, 2009

தமிழர்களின் சுய நிர்ணய உரிமையும் தத்துவார்த்த குரல்களும்

ஈழ விடுதலை:
தமிழ்கத் தமிழரும், தமீழீழத் தமிழரும் - இந்திய அரசை நம்புவது கொலையாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கே ஒப்பாகும்

வே. ஆனைமுத்து



ஈழ விடுதலை பற்றி, 1992க்குப் பிறகு நீறுபூத்த நெருப்பாகத் தமிழகத் தமிழரிடையே தேங்கிக்கிடந்த ஈழவிடுதலை ஆதரவு உணர்வு, 2.10.2008க்குப் பின்னர், தமிழகத்தில் எல்லாத் தரப்பினரிடமும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. இதற்கு உடனடிக் காரணராக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினரும், மாண்புமிகு தமிழக முதல்வரும் ஆவார்கள். இவர்கள் எடுத்த முன்முயற்சி - கட்சி, மாவட்டம், தேசம், பிராந்தியம் அல்லது மாநிலம் என்கிற எல்லாவற்றையும் கடந்து, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஏழு கோடித் தமிழரையும் பிற மொழியினரையும் பற்றிக் கொண்டது.

இந்தியத் தலைநகரான புதுதில்லியில் கடந்த ஓராண்டாகத் தமிழ் இனப் பல்கலைக் கழக மாணவர்களால் தூக்கிப்பிடிக்கப் பட்ட ஈழத்தமிழர் சிக்கல், 14.11.2008 அன்று எல்லா மாநிலங் களையும் சார்ந்த மாணவர்களாலும் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதற்கும் அடித்தளமாக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் பிரிவினராவர்.
தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, அவர் அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டி, தக்க முடிவுகளை எடுத்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் தலையான கோரிக்கை, "ஈழத் தமிழர் பேரிலான போரை இலங்கை அரசு உடனே நிறுத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசு தரவேண்டும்'' என்பது. ஆனால் இந்திய அரசு அப்படிச் செய்யவில்லை.

இதுபற்றிப் பேசுவதற்காக, முதலில் இந்தியாவுக்கு வந்த இராசபக்சேவின் தம்பி பாசில் இராசபக்சே - மகிந்த இராசபக்சேவின் தலைமை ஆலோசகர் என்கிற நிலையில் இருந்துகொண்டு, இங்குள்ளவர்களிடம் என்ன பேசினார்? "விடுதலைப் புலிகளின் பேரிலான தாக்குதலை நிறுத்த முடியாது. துன்பத்துக்கு ஆளாகும் இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்யும்'' என்று மட்டுமே அவர் பேசினார்.

இந்த நிலையை மாற்றிட வழி காணுவதற்கு, "தமிழகச் சட்ட மன்றத்தில், ஈழ விடுதலை கோருவோர் பேரில் நடத்தப்படும் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்'' என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கோரினர்.
மா.பெ.பொ.க. சார்பில் 13.10.2008இல் இப்படிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எல்லாக் கட்சிகளின்கோரிக்கையையும் ஏற்று, 12.11.2008இல் சட்டமன்றத்தில் இதுபற்றிய நெடியதோர் தீர்மானத்தை நிறைவேற்றி, உணர்ச்சிமிக்க உரையாற்றினார். இதுமிகவும் வரவேற்கத்தக்கது. இதற்குமேல், இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காகத் தமிழ்நாட்டு அரசு எதையும் செய்திட அதிகாரம் இல்லை.
ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட இக் கோரிக்கையை, இதே வடிவில் அப்படியே, பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த இராசபக்சேவிடம் எடுத்துக் கூறினாரே அன்றி, "போரை நிறுத்துங்கள்; பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அளியுங்கள்'' என்று அவர் இலங்கை அதிபரிடம் கூறவில்லை; பிரணாப் முகர்சியும் அப்படிக் கூறவில்லை.

இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நான்கு ஆகும்.

1. திருமதி. பண்டாரநாயகா ஆட்சிக்காலத்தில், அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுத், தமிழர்களை ஒடுக்குவதற்காக, இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இந்திராகாந்தியே ஆவார். அப்போது முதல் இலங்கை இராணுவத்துக்கு எல்லா உதவிகளையும் செய்வது இந்திய அரசு.

2. செயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அவருடைய கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு 20,000 இந்தியப் படைவீரர்களையும், இராணுவ டேங்குகளையும் மற்ற இராணுவத் தளவாடங்களையும் 1987இல் அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இராசிவ் காந்தி.

இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது விடுதலைப் புலிகளால்தான் என்று குற்றஞ்சாட்டி, பிரபாகரனைப் பிடித்துத்தர அரசுப் பரிமாற்ற ஆணையும் வெளியிட்டுவிட்டு, இந்தியாவில் அமைப்புரீதியாக இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பேரில் தடையையும் விதித்து நாளதுவரை அதைக் கால நீட்டிப்புச் செய்துகொண்டு, வெளிப்படையாக இலங்கை அரசுக்கு 2005 முதல் எல்லாவகையான இராணுவ உதவிகளையும் செய்வது தான் - கல்நெஞ்சம் படைத்த பிரதமர் மன்மோகன்சிங் அரசு. எனவே தான் அங்கே போர் தொடர்ந்து நடைபெற்று விடுதலைப் புலிகள் அடியோடு அழிக்கப்படுவதற்கு எல்லாம் தந்து உதவும் இந்திய அரசு, இப்போதும் "போரை நிறுத்துங்கள்'' என்றுகூறி இலங்கை அரசுக்கு மிகு அழுத்தம் தர முன்வரவில்லை; இனியும் முன்வராது.

இது இப்படியே நீடிக்குமே அன்றி, காங்கிரசுக் கட்சி ஆட்சியோ - அதைவிடக் கேவலமான பாரதிய சனதாக் கட்சி ஆட்சியோ - தமிழீழம் மலருவதை ஒருபோதும் விரும்பாது; அனுமதிக்காது என்பதையும் நாம் உணரவேண்டும்.

ஏன் இந்த இழிநிலை?

1. இந்தியாவிலுள்ள எந்த அனைத்திந்தியக் கட்சியும் "இந்தியா ஒரே தேசம்'' என்பதிலிருந்து விடுபடவில்லை; இந்தியாவிலுள்ள மொழிவழி மாநிலங்ளுக்குத் தன்னாட்சி உரிமை தரவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக எந்தத் தேசியக் கட்சியுமே ஏற்றிருக்கவில்லை. இதில் எவருக்கும் அய்யம் இருக்க இடம் இல்லை.

2. தமிழகத்தில் 1920களில் விதைக்கப்பட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வும், 1938இல் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும்; 1945 முதல் பெரியாரால் முன்வைக்கப்பட்ட தனித்தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கையும் - இந்தியா முழுகுவதற்கும் யாராலும் எடுத்துச்செல்லப்படவில்லை. இந்திய மய்ய அரசு பார்ப்பன ஆதிக்க அரசாகவே இன்றும் நீடிக்கிறது; இந்தி ஆதிக்கம் தெளிவுபட வந்துவிட்டது; மொழிவழித் தன்னாட்சிக் கோரிக்கை தமிழகத்திலேயே கேட்பாரற்றதாக ஆகிவருகிறது.

3. இந்த நிலையில் இராமேசுவரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழீழத் தமிழர்களுக்கு என்று ஒரு தனிச் சுதந்தரநாடு அல்லது ஒரு தன்னாட்சி (Autonomy) நாடு வர வழிவிட்டுவிட்டால், தெற்குக் கடல்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நேரிட்டு இங்கேயும் தனிநாடு கோரிக்கை துளிர்த்துவிடும் என்று ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டு, அதன் காரண மாகவே தமிழகத் தமிழர் ஆறுகோடிப் பேரின் சார்பில் தமிழக அரசும், தமிழக முதல்வரும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுத்த வேண்டுகோளை அப்படியே முன்வைக்கவும், வற்புறுத்தவும் இந்தியப் பிரதமர் முன்வரவில்லை; இனியும் அவர் முன்வரமாட்டார். அப்படியானால், அதையே முன்வைத்துத் தமிழக ஆட்சியாளர் பதவியைவிட்டு விலகத்தான் முடியும். அப்படி விலகி விடுவதால் மட்டும் இந்திய ஆட்சியில் இன்று இருப்பவர் களுக்கோ, நாளைக்கு வரப் போகிறவர்களுக்கோ ஒருசிறு இழப்பும் இல்லை.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் 57+2=59 பேர்கள். முதலில் இவர்கள் ஓர் அணியினராகச் சேரவில்லை. ஒருவேளை இவர்கள் இப்போது விலகினால் அதனால் அரசு கவிழாது. எப்போது விலகினாலும் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவீசி 60 உறுப்பினர்களின் ஆதரவை வேறு வழிகளில் ஆளும் அணி பெற்றுவிடும்.

அப்படியானால் இச்சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன?

இலங்கை அரசினர், ஏதோ "13ஆவது சட்டத் திருத்தம்'' என்கிறார்களே, அது என்ன? என்பதுபற்றி முதலில் தமிழீழத் தமிழர்களும், தமிழீழ ஆதரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தமிழீழத் தமிழர்க்கு உரிய சமத்துவ உரிமை வராது என்று தெரிந்த நிலையில், அய்க்கிய நாடுகள் அவைக்கும், உலக மானிட உரிமைக்காப்பு அமைப்புக்கும், உலக நீதிமன்றத்துக்கும் இச்சிக்கலை எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழீழ விடுதலையை விரும்பும் தமிழ்நாட்டுத் தமிழரும் இதே போன்று செயல்படமுன்வரவேண்டும், ஏன்?

1. இன்று உலக நாடுகளின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசமைப்புச்சட்டம் 1997இல் இயற்றப்பட்டது. அது 19 பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் 15 ஆவது பகுதி, "பிராந்தியங்ளுக்கு அல்லது மாகாணங்ளுக்கு அதிகாரங்களைப் பகிர்வு செய்வது அல்லது மாற்றித் தருவது'' (Devolution of Powers to Regions) என்ற தலைப்பைக் கொண்டதாகும்.

அச்சட்டம் ஒரு முன்வரைவே (a Draft) ஆகும். அது 27.03.1997இல் இலங்கை நீதி மற்றும் அரசமைப்புத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பெரிஸ் என்பவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப் பட்டது. அவர் 19 பகுதிகளுள் 1 முதல் 14 மற்றும் 16 முதல் 19 பகுதிகளை மட்டுமே வெளி யிட்டார். 15 ஆவது பகுதியை அவர் வெளியிடவில்லை. அது பற்றிய விவரம் பின்வருமாறு உள்ளது.

CONSTITUTION OF SRI LANKA

"Justice and Constitutional Affairs Minister Prof G.L Peris released 18 chapters of the Draft Consutitution of the Republic of Sri Lanka on March 27, 1997. Chapters released were Ch.I through XIV and XVI throuth XIX The Chapter XV THAT deals with "Devolution of Powers to Regions" was not included"

இலங்கை அரசமைப்புச் சட்ட வரைவு என்பதில், முகவுரை என்கிற பகுதிக்கு மேலே தலைப்பில் உள்ள அறிவிப்புச் செய்தி இது. இதுபற்றி அறிந்திட இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் இன உறுப்பினர்களும், இலங்கை வாழ் எல்லாத் தமிழர்களும்; தமிழகத் தமிழர்களும் முன்வரவேண்டும். இலங்கை அரசிடம் தமிழ் மாகாணங்களுக்குச் சுதந்தரம் கோருவது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே.

தமிழ் மாகாணங்களில் உள்ள ஏனைய தமிழர்கள் விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்திட இலங்கை அரசுக்குக் கையாள்களாக இருந்தும், இலங்கை அரசு இப்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும் மாகாண அரசை அமைக்க வழி விட்டதைப் பெரிய தீர்வாகவும் ஏற்றுச் செயல்படுகின்றனர். "அரசியல் தீர்வுபற்றிப் பேசுங்கள்; போரை நிறுத்துங்கள்'' என்கிற தமிழகத் தமிழரும் இதுபற்றிக் கவலைப்படவேண்டும்.

மேற்படி வரைவுச் சட்டத்தில் பகுதி I, விதி 1 என்பது :

"சிறீலங்கா ஒரு தன்னாதிபத்தியக் குடிஅரசாகும்; இது இலங்கைத் தன்னாட்சிக் குடிஅரசு என வழங்கப்படும். இலங்கைக் குடிஅரசு பிரிக்கப்படமுடியாத மாகாணங்களின் ஒன்றியமாகும்'' என்றும்;

விதி 2 (2) என்பது :

"எந்த ஒரு மாகாண ஆட்சியோ அல்லது பல மாகாணங் களின் ஆட்சிகளோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கீழேகண்ட எந்த ஒன்றுபற்றியும் முன்மொழியவோ முயற்சி எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது''

(அ) "மாகாணங்களின் ஒன்றியமாக அமைந்துள்ள இலங்கைக் குடியரசிலிருந்து எந்த ஒரு மாகாணமோ அல்லது மாகாணங்களோ பிரிந்துபோக அல்லது துண்டித்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடாது'' எனக் கூறுகின்றது.
பகுதி II விதி 7 (1) என்பது :

"இலங்கைக் குடிஅரசு பவுத்தத்துக்கு மிக முதன்மையான இடத்தை அளிப்பதுடன், புத்த சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ள நெறிகளைக் காப்பதும் வளர்த்தெடுப்பதும் இந்த அரசின் நீங்காக் கடமையாகும்...''

விதி - 12 (2) "இலங்கையிலுள்ள ஒருவர் இலங்கையை விட்டு வெளியேற உரிமை பெற்றவர் ஆவார்'' "Every persion shell be free to leave Sri Lanka" எனக் கூறுகிறது. இலங்கை பவுத்தர்களுக்கான ஒரு நாடே ஆகும்; எவர் வேண்டுமாVனலும் இலங்கையைவிட்டு வெளியேறலாம். இது இப்படி எழுதப்படுவதற்குமுன்னரே, 1981 - 1983இல் கொடுங்கோலன் செயவர்த்தனே மேற்கொண்ட "இலங்கையி லிருந்து தமிழரை ஓடவிடுங்கள்'' என்ற கோட்பாடு, இலங்கை அரசமைப்பிலேயே 1997இல் இடம்பெற்றுவிட்டது.

பகுதி IV விதி 27 என்பது :

"சிறீலங்கா அரசின் அலுவல் மொழிகளாக (Official languages) சிங்களமும், தமிழும் இலங்கும்'' என்றும்;

விதி 28 என்பது :

"சிறீலங்கா அரசின் தேசிய மொழிகளாக(National languages) சிங்கள மொழியும், தமிழும், ஆங்கிலமும் இலங்கும்'' என்றும் கூறுகின்றன. இலங்கையில் யாழ் பல்கலை உள்பட உயர்கல்வி மொழியாக ஆங்கிலமும்; தமிழன் வீட்டுத் திருமணப் பதிவு உள்பட சிங்களமும், தமிழனுக்கு வரும் அரசு மடல்கள் சிங்களத்திலும் உள்ளன என்பதை 2005 சூனில் அங்கு நாம் நேரில் பார்த்தோம். இன்றைய உண்மை நடப்பில், மொழி உரிமையில், இலங்கைத் தமிழர் இரண்டாந்தரக் குடிமக்களே ஆவர். எப்படி?

விதி 31 என்பது :

"அரசுப் பொது ஆவணங்கள் (Public records) தமிழில் வைத்துக் காக்கப்படும் பகுதிகளில் வாழும் எந்த ஒருவரும் விதி 30(1)இல் பத்திகள் அ, ஆ, இ, ஈ இவற்றில் கண்டுள்ளபடி, அவ் வுரிமைகளைக்கொண்டு, தான் கோரும் ஆவணத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பெறலாம்'' எனக் கூறுகிறது. தமிழரின் பாரம்பரிய வாழ்விடப் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றவும், அவர்கள் தம் தாய் மொழியான சிங்களத்தில் ஆவணம் பெறவும் - தமிழன் ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ மட்டுமே ஆவணம் பெறவும் வழி செய்வது இவ்விதியாகும். இவற்றை நாம் மேற்கொண்டு விரித்தெழுத விரும்ப வில்லை. ஆனால் ஒன்று.

"மாகாணங்களுக்கு எந்த எந்த அதிகாரங்களை மாற்றித் தர இலங்கைக் குடியரசின் அரசமைப்புச்சட்ட வரைவில் திட்டமிடப்பட்டிருக்கிறது'' என்பதை தீய உள்நோக்கத்துடன் இலங்கைத் தமிழர் பார்வையிலிருந்தும், தமிழகத் தமிழர் பார்வையிலிருந்தும், இந்திய அரசு - மற்றும் உலக அரசுகளின் பார்வையி லிருந்தும் வேண்டுமென்றே மறைத்துவிட்ட கொடியவர்கள் சிங்களவர்கள் என்பதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். 39 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை உள்ளடக்கிய "Constitution of the World" என்ற, எம்.வி. பைலீ (M.V.Pylee) தொகுத்து, 2000இல் வெளியிட்ட அரசமைப்புச் சட்டத் தொகுப்பில், இவை உள்ளன.

"மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு எத்தன்மையது'' என்பதை உலகத்தின் பார்வையிலிருந்து அடியோடு மறைத்து விட்ட ஒரு நாடு இலங்கை மட்டுமே. கொடுமைக்கும், பாதிப்புக்கும், அழிப்புக்கும் உள்ளான ஈழத் தமிழர்கள் முதலில் இதை உணரவேண்டும்; இந்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் இதை நாம் உணர்த்த வேண்டும். இந்தக் கொடுங்கோல் சட்டத்தை வைத்துக்கொண்டு, உலக நாடுகள் அவையில், அண்மையில் தமிழிலேயே சொற்பொழி வாற்றி, தமிழரை அழிப்பதே அரசின் நோக்கம் என்பதை மறைத்துவிட்டு, வெற்றியோடு இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே திரும்பினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 2008 - 2009 ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டத்தை முன்மொழிந்து பேசிய அதிபர் இராசபக்சே இடையிடையே தமிழர் படும் அல்லலைக் குறிப்பிட்டுத் தமிழிலேயே பேசி நீலிக் கண்ணீர் வடித்தார்.

இந்திய மண்ணில் இருந்துகொண்டே, "இலங்கை அரசு போரை நிறுத்தாது'' என்று, 13.11.2008 அன்றே வெளிப் படையாக இராசபக்சே துணிவுடன் அறிவித்துவிட்டார்.
எனவே, இந்தியாவிலுள்ள தேசியக் கட்சிகளும், பல மாநிலக் கட்சிகளும் "இலங்கைத் தமிழர் படும் துயரைத் துடையுங்கள்; தமிழக மீனவர் படும் துன்பத்துக்குத் தீர்வு காணுங்கள்'' என்று மட்டுமே பேசுகின்றனர்.

"இலங்கைத் தமிழர் படும் துயரம்'' என்பது என்ன?

1. ஈழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் வழியே செல்லும் பு-9 என்கிற கண்டி - யாழ் தேசியச் சாலையை 3 ஆண்டுகளுக்குமுன் இலங்கை அரசு மூடியது. அதனால் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்கும்; அரசு இராணுவத்திடம் உள்ள யாழ்ப்பாணத்துக்கும் உணவு மருந்து மற்றைய பொருள்கள் கிடைக்காமல் தமிழ் மக்களைப் பட்டினிக்கும் நோய்க்கும் ஆளாக்கியது.

2. மட்டக்களப்பு, திருக்கோணமலைப் பகுதிகளை - கருணா, பிள்ளையன் போன்ற சிங்களவர்களின் கையாள்களின் துணைகொண்டு கைப்பற்றி, அங்கு புலிகள் இயக்கத்தினர் செல்வாக்குப் பெற்ற பகுதிகளைத் தாக்கி, தமிழ் மக்களை வெளியேறச் செய்தது.

2. கிளிநொச்சியையும், முல்லைத் தீவையும் கைப்பற்றி, விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துத் தீரவேண்டும் என்பதற்காக - மணலாறு, முகமாலை, ஓமந்தை, வன்னி நகரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலாட் படையையும், கடற்படையையும் ஏவி விட்டு, அவர்கள் முன்னேறிச் செல்ல வழி வகுப்பதற்காக, வானூர்தி மூலம் தமிழ்ப் பொதுமக்கள் வாழும் ஊர்களின் பேரிலும், புலிகளின் மறைவிடங்களிலும் குண்டு மழை பொழிந்து, இன்றுவரை 3.5 இலக்கம் ஈழத் தமிழ் மக்கள் - பெண்டு பிள்ளை களுடன் காடுகளில் பசி, பட்டினி, நோயுடன் விலங்கு வாழ்வு நடத்திடவும் செய்தது.

இதற்கு ஒரே அடிப்படைக் காரணம் எது?

முப்படைகளைக் கொண்டு இலங்கை அரசு புலிகளின் ஆதிக்கத்திலுள்ள பகுதிகளைத் தாக்குவதுதான். அந்தத் தாக்குதல் நேற்றும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றிட எல்லாம் செய்வது யார்? நம் வாக்கைப் பெற்று, நம் வரிப்பணத்தை வைத்து இந்தியாவை அடக்கி ஆளும் இந்திய அரசுதான் என்பது கல்லுப்போன்ற உண்மையாகும். இந்திய அரசு இலங்கைக்கு உதவாவிட்டால், பாக்கிஸ் தானும், சீனாவும், அமெரிக்காவும் எல்லா உதவிகளையும் செய்யும் என்பது கெட்டியான உண்மை.

இந்நிலையில் அரசியல் தீர்வு வர, இலங்கையிலுள்ள தமிழின அரசியல் தலைவர்களும், தமிழீழ விடுதலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலக மன்றங்களுக்கு "பயங்கரவாதத்தை ஒழித்தல்'' என்கிற பேரால் - தமிழின அழிப்பைச் செய்வது - இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முப்படைத் தாக்குதலின் ஒரே நோக்கம் என்பதை வலிமையாக உணர்த்தவேண்டும். இதற்கு அவர்கள் ஆயத்தமாக வேண்டும். தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதற்கு ஆயத்தமாக வேண்டும்.

காசுமீர் சிக்கலை 61 ஆண்டுகளாகத் தீர்க்க மனமில்லா மல் - துப்பில்லாமல் - அந் நாட்டை அடிமையாக வைத்திருக்கும் இந்திய அரசையும், - பார்ப்பன, இந்தி, மலையாளி உயர் அதிகார வர்க்கத்தினரின் மூளை இடும் ஆலோசனைகளைக் கட்டளை களாக ஏற்று, சொந்த மூளையின்றி நடக்கும் இந்திய அரசின் அமைச்சர்களையும்; தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் தூக்கிப் பிடிக்கும் நிலைப் பாட்டை அப்படியே நம்பும் மூடர்களாக உள்ள இந்திய அமைச்சர்களையும், இந்திய அரசையும் தமிழகத் தமிழரும், இலங்கைத் தமிழரும் இனியும் நம்புவது கொலை யாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கு ஒப்பானதே ஆகும்.

இவர்களை நாமும், இலங்கை வாழ் தமிழர்களும் நம்பினால் இன்னும் ஒரு தலைமுறைக் காலம் இனிமேலும் விடுதலைப் புலிகள் போராடவேண்டும். இந்நெடிய காலத்தில், விடுதலைப் புலிகளில் பலர் கொல்லப்படலாம். ஆனால் கொரில்லாப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை யாராலும் எப்போதும் அழிக்கமுடியாது; அது அழிக்கப்பட நாம் - தமிழ்நாட்டுத் தமிழர் கிஞ்சிற்றும் இடந்தரக் கூடாது. இது 2005இல் நாம் சுட்டிய ஒரு முடிவு. தமிழகத் தமிழர்களும், தமிழக முதல்வரும் இவ் வேண்டுகோளைக் கருத்தில்கொண்டு விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம்.
வணக்கம், நன்றி.

1.12.2008 - வே. ஆனைமுத்து

கருத்துகள் இல்லை: