எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

செவ்வாய், 19 மே, 2009

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !


பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன், உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது.

இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் தொடர்பாக அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தொலைபேசியில் பேசும் போது பிரபாகரன் கொல்லப்பட்டு போர் முடிவுற்றதாக பேசியிருக்கிறார். நேற்றே இராணுவத் தளபதி பொன்சேகா புலிகளின் கடைசி இடத்தையும் பிடித்துவிட்டதாகவும் தற்போது முழு இலங்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். சிங்களர மக்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆரவாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தலைநகர் கொழும்பில் தாரை தப்பட்டைகளுடன், இனிப்பு வழங்கி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதிபரின் பேச்சிற்குப் பிறகு நாளை தேசிய விடுமுறை அறிவிக்கப்படலாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களினால் இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் உண்மையில் நிம்மதியை இழப்பதன் துவக்கம்தான் என்பதை அவர்கள் இப்போது உணர வாய்ப்பில்லை.

பிரபாகரன் போர்க்களத்திலேயே இல்லை அவர் கிழக்கு மாகாணத்தின் காடுகளுக்கு பெயர்ந்திருக்கக்கூடுமெனவும், இறுதியில் அவர் சில மாதங்களுக்கு முன்னரே மலேசியா அல்லது இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டதாகவும் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. இவை உண்மையா, பொய்யா என்று பார்ப்பதைவிட கள நிலவரம் யதார்த்தமாக உண்மையைச் சொல்கிறது.

முல்லைத்தீவின் முல்லைவாய்க்கால் பகுதியில் கடைசியாக முடக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை வெறும் ஐநூறைத் தாண்டாது என ராணுவமும், சுமார் 2000 போராளிகள், அவர்களது குடும்பத்தினர் 15,000, பொதுமக்கள் சுமார் 25,000பேர் இருப்பதாகவும், மொத்தத்தில் சுமார் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாகவும் புலிகள் கூறிவந்தனர். நேற்று ஞாயிறு மதியம் ஒலிபரப்பப்பட்ட தளபதி சூசையின் தொலைபேசித் தகவலின்படி சுமார் 25,000 மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக தவிக்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை கொடுக்காத பட்சத்தில் விரைவில் இறந்து போவார்கள் என பதறியவாறு சூசை பேசுகிறார். எப்படியாவது செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டு உடன் செயல்படவேண்டுமெனவும் கோருகிறார். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கத்தை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்ட இலங்கை அரசோடு மீண்டும் பேசி உடன்பாடு கொண்டாலும் களநிலவரப்படி நாங்கள் உடனடியாக செயல்பட இயலாது என அச்சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தகைய கையறு நிலையில் தங்கள் துப்பாக்கிகள் இனி சுடாது எனவும், போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாத சர்வதேச சமூகத்தினால் மிகவும் கசப்பான முறையில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதெனவும் புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் நேற்று அறிக்கை விட்டார். உடனடி போர்நிறுத்தத்திற்கு தாங்கள் சம்மதிப்பதாக புலிகள் பலமுறை கூறயிருப்பினும் இலங்கை அரசு அசைந்து கொடுக்கவில்லை. பல ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பக்கூடாது என்பதில்தான் சிங்கள இனவெறி அரசு கருத்தாய் இருந்தது.

கடந்த சில நாட்களில் மட்டும் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுற்றிலும் பிணங்கள் வீசிக்கிடக்க, அடிபட்டோர் அலறியவாறு வீழ்ந்து கிடக்க, இதற்கு மேல் உயிரோடிருக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் பிணங்களோடு படுத்துக் கிடக்க குடிநீரோ, உணவோ, மருந்தோ ஏதுமின்றி ஷெல்லடிகளின் சப்தத்தில் உறைந்து கிடந்தார்கள்.

இதற்குமேல் களநிலவரத்தை புரிந்து கொள்வதற்கு ஆதாரங்களும், புள்ளிவிவர எண்களும் தேவையில்லை. எண்களின் ஆய்வில் தொலைந்து போன வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடாது.

ஜனவரியில் கிளிநொச்சியில் இருந்து மக்கள் புலிகளோடு முல்லைத்தீவு நோக்கி கடும் பயணத்தை தொடர்ந்தார்கள். மொத்தம் மூன்று இலட்சம் மக்கள் இருக்கலாம். இந்த நான்கு மாதப் போரில் தற்போது சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இலங்கை ராணுவ கண்காணிப்பில் திறந்த வெளி முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஊனமுற்ற உடலோடும், துடிப்பை இழந்த மனதோடும் நாட்களை தள்ளுகிறார்கள். தொலைக்காட்சியில் படம் பிடிக்கப்படும் போதுமட்டும் அவர்களுக்கு கொஞ்சம் உணவு கிடைக்கிறது. மற்றபடி கால்வயிற்றுக் கஞ்சியோடு அத்துவான வெளியில் நிலை குலைந்து நிற்கிறார்கள். இந்தப் போர்க்காலத்தில் சுமார் 5000 முதல் 10,000 வரை மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
00
தெரிந்தே மரணத்தை வரவேற்கின்ற அவலத்தில் புலிகள் எப்படி சிக்கினார்கள்? இதனை தாக்குதலுக்கான பின்வாங்குதல் என்று கருதியவர்கள் உண்டு. ஆனால் போரில் மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக இந்தியா, மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு போரை நிறுத்துமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கலாம் என புலிகள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மக்களை இப்படிப் பணயம் வைப்பது பயன்படுத்துவது ராணுவரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியானதா? இந்த மக்கள் யாரும் நிர்ப்பந்தமாக வரவில்லை, இலங்கை ராணுவத்தின் கைகளில் சிக்க விரும்பவில்லை என்பதாலும் அவர்களாகவே மனமுவந்தும்தான் வந்தார்கள் என்றே புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் புலிப்படையில் இருக்கும் போராளிகளது குடும்பத்தினரது கணிசமான எண்ணிக்கையும் இந்த மக்களில் அடக்கம் என்பதும் கூட உண்மைதான். இவர்களில் யாரொருவரை ராணுவம் பிடித்தாலும் புலி என்றே நடத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் மக்களின் நடுவே இருந்தால் இராணுவம் தங்களின் மேல் பாரிய தாக்குதல்கள் நடத்தாது என்று புலிகள் கருதியிருக்க கூடும்.

பொன்சேகாவும், ராஜபக்க்ஷேயும் இதெல்லாம் தூசு என்பது போல மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றதோடு, அதை சுட்டிக்காட்டிய சர்வதேச நாடுகளையும் உதாசீனம் செய்தார்கள். இப்போது இந்த நெருக்கடி தலைகீழாக புலிகளின் மீது பாய்ந்தது. எந்த மக்கள் பாதுகாப்பு என்று நினைத்தார்களோ அந்த மக்கள் ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்த கையறு நிலையில் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளுக்கு இது உடன்பாடில்லை என்றாலும் அதை தடுக்க நினைத்தாலும் யதார்த்தத்தை தீர்மானிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இப்படி மக்கள் தடுத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை புலிகள் மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டார்கள். இருப்பினும் காலம் அதற்குள் வெகுதொலைவு சென்றுவிட்டது.

மக்கள் என்ற சொல் அதன் பாரிய அரசியல் பொருளில் புலிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு போராட்டமும், அதன் எழுச்சியும், ஏற்ற இறக்கமும் மக்களின் உணர்வு நிலையைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டும். இந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் திரட்டப்பட்டிருந்தால் ஐந்து இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஈழத்திற்காக குரல் கொடுத்திருந்தால் எந்தப் பெரிய இராணுவமும் ஒன்றும் செய்திருக்க இயலாது. அதை நேபாளத்தில் கண்டோம்.

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவிக்கமுடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவில்லை. அவர்களது கவனமெல்லாம் ஆயுதங்களின் நவீன இருப்பை கொள்முதல் செய்வதிலேயே இருந்தது. விமானப்படை வைத்த முதல் போராளிக் குழு என்ற பெயரெல்லாம் அவர்களைக் காப்பாற்றவில்லை என்பதை புலிகள் தாமதமாகவேனும் உணர்ந்திருக்கலாம்.

பயணம் நீண்டு போகப் போக புலிகள் பல ஆயுதங்களை விட்டுவிட்டு செல்லவேண்டிய நிலை. எந்த ஆயுதங்களை தமது விடுதலையின் அச்சாணியாக கருதினார்களோ அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. இதன் எதிர் நடவடிக்கையாக ராணுவம் நவீன ஆயுதங்களை வைத்து இழப்புக்களை வகை தொகையில்லாமல் கூட்டியது.
00
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் தேர்தலை ஒட்டி ஆட்சி மாற்றம் வரும், அதை வைத்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை கொண்டுவரலாம் என புலிகள் நம்பியதற்கு இங்கிருக்கும் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கிய காரணமாக இருந்திருக்க கூடும். வைகோ, நெடுமாறன் முதலியோர் இப்படியொரு பிரமையை வளர்க்கும் விதமாக நடந்து கொண்டார்கள். தேர்தலில் ஈழ எதிரி ஜெயாவுடன் கூட்டணி வைத்தது, அவரையே தனிஈழம் தேவையென பிரகடனம் செய்ய வைத்தது, தமிழகத்தில் தொடரும் தீக்குளிப்புகளை வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக புலிகளை நம்பவைத்தது, அதுவே தேர்தலை தீர்மானிக்கும் சக்தியென நம்பியது, காங்கிரசுக்கு மாறாக பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அதன் மூலம் ஈழப்போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்பியது இப்படி பலவற்றை சொல்லலாம்.

சுருங்கக் கூறின் தற்போதைய ஈழப்போரை இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் சில அதிகாரிகள், காங்கிரசின் சோனியா முதலான தனிநபர்கள் நடத்துவதாக கற்பித்துக் கொண்டு ஒரு வகையான லாபி வேலை செய்தால் போர்நிறுத் தத்தை சாதித்து விடலாம் என குறுக்குப் பாதையில் சென்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளை வைத்து தப்பலாம் என நம்புமளவுக்கு புலிகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தார்கள். தமிழகத்திலோ விருப்பு வெறுப்பின்றி உண்மையைப் பேசும் நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

மறுபுறம் புலிகளை அழிப்பதற்கான விரிவான திட்டமும், கால அட்டவணையும், ஆயுதங்களும் இந்தியாவால் சிங்கள அரசுக்கு தரப்பட்டன. அதன்படி தேர்தலுக்கு முன்பு வரை புலிகளை பெருமளவு ஒடுக்குவது, முடிந்த பின் தலைமையை அழிப்பது என்ற திட்டம் இலங்கை ராணுவத்தால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த மேலாதிக்கத்தை அறிந்தததினாலேயே மேலை நாடுகள் ஒப்புக்கு ஈழப்பிரச்சினை குறித்து பேசின. அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தினால்தான் அந்த ஒப்புக்கு சப்பாணி அறிக்கைகளும் வந்தன. மற்றபடி இந்த கண்டனங்களை ராஜபக்ஷே எதிர்கொண்ட முறையிலிருந்தே அதன் பின்னணியையும் நம்பகத் தன்மையைபயும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலைநாடுகள் நிச்சயமாக தலையிடுமென புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மலைபோல நம்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களது உலக அரசியல் கண்ணோட்டமும், ஏகாதிபத்திய கட்டமைப்பில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவது எவ்வளவு சிக்கலானது என்பன போன்ற அரசியல் பார்வையெல்லாம் புலிகளிடமோ, அவர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களாக செயல்பட்ட தமிழக அரசியல் தலைவர்களிடமோ இல்லை.

மற்றபடி பல மேலைநாடுகள் தங்களை பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் காரணங்களை அவர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அந்த நாடுகளின் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் ஊடாகவே தமது விடுதலைப் போராட்டம் வளரமுடியும் என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. மற்ற நாடுகளின் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிப்பதன் ஊடாக ஒடுக்கப்பட்ட இனங்கள், மக்களின் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது என்ற பார்வையும் அவர்களிடம் இல்லை.

சிங்களஆளும் வரக்கத்தை நடுங்கச் செய்வதாக கருதிக்கொண்டு புலிகள் மேற்கொண்ட தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள், புலிகளை பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்துவதற்கு இலங்கை அரசுக்குத்தான் பயன்பட்டது.

ஒவ்வொரு முறையும் தற்கொலைப் போராளியின் உடல் சிதறி குண்டு வெடித்து எதிரி அழியும் போது தங்கள் போர் ஒரு படி முன்னேறுவதாக புலிகள் எண்ணியிருக்கலாம். இந்த நடவடிக்கைகளே தங்களை சர்வதேச சிவில் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தும் என்பதையோ, இக்கட்டான காலத்தில் தமது நியாயமான கோரிக்கையை உதாசீனப்படுத்துவதற்கு இந்த தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை ஒரு துருப்புச்சீட்டு போல பயன்படுத்தப்படும் என்பதையோ அவர்கள் அறியவில்லை. கடந்த காலத்தை பரிசீலிப்பது நமக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளிலிருந்து நிகழ்காலம் தப்பிவிட முடியுமா என்ன?
00
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதன் நியாயத்தை அப்போதே நாங்கள் தமிழகமெங்கும் பேசியிருக்கிறோம். எனினும் தனிநபர்களை அழிப்பதென்பது, விடுதலைப் போராட்டத்தின் போராட்டமுறையாக ஆக முடியாது. ஒரு பண்ணையாரை அழித்தால் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிந்து விடுமென 70களில் நக்சல்பாரி கட்சியினர் இழைத்த தவறைப் போன்றதே இது.

ராஜீவுக்கும் பதில் மன்மோகன்சிங்கும், பிரமேதாசாவுக்கு பதில் ராஜபக்ஷேயும் வந்து அந்த இடத்தை நிரப்பிவிட்டு அடக்குமுறையை தொடரத்தான் செய்கிறார்கள். எனவேதான் தனிநபர்களினூடாக, ஆளும்வர்க்கத்தை புரிந்து கொள்வது தவறு என்கிறோம். இவர்களை இந்த அமைப்பின் பிரதிநிதிகளாக பார்த்திருந்தால் அத்வானியையும், ஜெயலலிதாவையும் நண்பர்களாகக் கருதும் பிழையும் நேர்ந்திருக்காது.

புலிகள் செய்யாத மக்கள் திரள் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ஷே கச்சிதமாக செய்து வருகிறார் அல்லது பயன்படுத்திக் கொள்கிறார். புலிகளை அழிப்பேன் என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெற் ராஜபக்சே, இப்போது போரின் ஒவ்வொரு வெற்றியையும் சிங்கள மக்களின் வெற்றியாக பிரச்சாரம் செய்கிறார்.

ஈழத்தின் துரோகிகளை அழித்த புலிகள் ஈழத்திற்காக உண்மையாக அர்ப்பண உணர்வோடு போராடும் நல்ல தோழமைகளைக் கூட கொன்றார்கள். புரட்சிக்கான தலைமை என்பது வேறுபட்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஆற்றல்களை பொது நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் கலை அல்லது அறிவியல் பற்றியது என்றால் பேராசான் ஸ்டாலின். புலிகளோ தம்மை நேர்மறையில் விமரிசனம் செய்வர்களைக்கூட எதிரிகளாக பார்த்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு அடக்குமுறைக்கு உள்ளான சமூகத்திடமிருந்து எண்ணிறந்த தலைவர்கள் அதாவது புரட்சிக்காக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்ட தலைவர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் ஆயுதங்களின் அபரிதமான நம்பிக்கையில் புதையுண்டு மீளமுடியாமலேயே போயின.

எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளுக்கு அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் அரசியல் ரீதீயாக முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்தது. அதை செயலுத்தியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களின் பல்வேறு சக்திகளை ஒன்று சேர்த்து பலப்படுத்திக் கொள்வதை விடுத்து நவீன ஆயுதங்களை சேகரிப்பதற்கான காலமாக பார்த்தது அடுத்த தவறு. இந்த போர்நிறுத்தத்தை அரசியல் ரீதியில் ஒரு வரம்புக்குட்பட்டு என்றாலும்கூட பயன்படுத்தியிருக்க வேண்டும்.
00
இப்போது மீண்டும் இன்றைய யதார்த்திற்கு வருவோம். தமிழகத்தில் தேர்தல் முடிந்தது. புலிகளும் அவர்களது தமிழக ஆதரவாளர்களும் எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. தேர்தல் முடிவுகள் அவர்கள் விரும்பியபடி அமைந்தாலும் இதில் மாற்றமில்லை என்பது வேறு விசயம். இடையில் புலம்புயர்ந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தால் ஒரு தீர்வு கிடைக்கும் என புலிகள் நம்பினார்கள். அதற்கு தோதாகவே போராட்டங்கள் உண்மையில் வீச்சாக நடந்தன. ஏற்கனவே கூறியதைப் போல ஆசியாவின் முக்கியநாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்தப் போருக்கு குறிப்பாக இந்தியா இன்னும் அதிகமாக காரணமாக இருப்பதாலும், இந்த அங்கீகாரம் அமெரிக்காவின் அனுமதியுடன்தான் நடக்கிறது என்பதாலும் மேலை நாடுகளின் அரசுகள் வெறுமனே மனிதாபிமானக் கண்டனங்களை மட்டும் தெரிவித்தன.

இப்படி எல்லாவகையிலும் ஆதரவை இழந்து நின்ற புலிகள் உயிர் துறக்கும் வரை போராடினார்கள். தாங்கள் எப்படியும் மரிக்கத்தான் போகின்றோம் என்ற கணத்திலும் அவர்கள் சரணடையவில்லை. பல இளைஞர்கள், சிறார்கள் ஒரு நாட்டை கட்டியமைக்க வேண்டிய காலத்தில் போரிட்டு மாண்ட காட்சி நம் நெஞ்சை உலுக்குகிறது.

இந்தியா போருக்கு பின்புலமாக அமைந்தது என்றால் சர்வதேச அரசியல் பின்புலத்தை சீனாவும், இரசியாவும் தந்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தப் பிரச்சினை விவாதிக்க கூடாது என்பதற்கு இருநாடுகளும் தடை விதித்தன. இதன் பின்னணியில் ஏற்கனவே பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டிருந்த புலிகளுக்காக இப்போதும் பரிந்து பேச யாருமில்லை. இப்படி எல்லா அரசியல் புறவய சாதகங்களையும், அகநிலையாக சிங்கள மக்களை இனவெறி ஆதரவோடும், களத்தில் ஆயுதங்களின் வலிமையுடன் இறங்கிய அரசும், இராணுவமும் இந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

இந்த இனவெறியின் கருணையற்ற போரை, பல ஆயிரம்மக்களை கொன்று குவித்த அநீதியை, சிங்கள இனவெறி நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த கனவை நனவாக்கிய வெற்றியை அறிவித்துவிட்டார் ராஜபக்சே. இலங்கை முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது.

ஆனால் இந்த கொண்டாட்டம் விரைவிலேயே முடிவுக்கு வரும். சிங்கள வெறியர்கள் எதிர்பார்த்திருந்த அமைதி நிச்சயம் குலையும். பேரினவாத இராணுவத்தால் குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்வைக் கழித்த அந்த மண்ணிலிருந்து, இது வரை ஈழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்தின் சரி தவறுகளை உள்வாங்கிக் கொண்டு, சிறு தளிர்கள் மெல்ல முளைக்கும். வளரும்.

தன்நாட்டில் தங்களைப் போலவே சம உரிமை கொண்ட அந்த தமிழ் மக்களை அடக்கி ஆண்டுவிட்டோம் என நினைத்திருக்கும் சிங்களப் பேரின வாதத்திற்கு பலியான மக்கள் தங்கள் தவறினை விரைவில் உணர்வார்கள். கிளிநொச்சியும், முல்லைத்தீவும் வீழ்ந்தாலும் இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட அந்த ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை பிரசவிக்கும்.
0000
எமது கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். இப்போது இந்த துயரமான தருணத்தில் அவர் பேச ஆரம்பித்த உடனே அடக்கமுடியாமல் கண்ணீருடன் இந்த தமிழினத்திற்கு ஒரு நல்லகாலம் வராதா என்று குமுறுகிறார். புலம்பெயர்ந்த நாட்டில் தான் நல்ல வாழ்க்கை வாழும்போது தாய்நாட்டில் மக்களும் புலிகளும் இப்படி ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டதை அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. இவ்வளவிற்கும் அவரும் புலிகளால் கைது செய்யப்பட்டு வதை பட்டவர்தான்.

ஆனாலும் களத்தில் இருக்கும் அவர்களை வைத்தே ஈழத்தின் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவும், தமிழக அரசியல்வாதிகளும் செய்திருக்கும் துரோகத்தைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார். அப்போது நான் இந்தியாவின் குடிமகன் என்ற சாபக்கேட்டினால், அந்த சீற்றத்தை ஏற்கிறேன். இந்திய அரசை முடிந்த மட்டும் எதிர்த்தோம். மக்களிடம் அம்பலப்படுத்தினோம். எனினும் இந்த அநீதியை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருடைய அறச்சீற்றத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் துடித்துக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களையும் அவர்களது உணர்ச்சிப் போராட்டத்தையும் புரிந்து கொள்கிறோம். முப்பதாண்டுகளாக பல ஏற்றங்களும் இறக்கங்களும் கண்ட சமரிது. இந்த நாளை, இந்தத் தருணத்தை, இந்தக் கண்ணீரை நாம் கடந்து செல்வோம்.


போர் இன்னும் முடியவில்லை.
நன்றி, வினவு,
வினை செய்!

கருத்துகள் இல்லை: