எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

ஞாயிறு, 13 ஜூன், 2010

சே' குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்ட நாள். சூன் -14


நன்றி: தோழர்.பாமரன்- மீள்பதிவு

ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா இலங்கை பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு பிரேசில் மெக்ஸிகோ -  என பலவற்றைச் சொல்லலாம். அவற்றுள் ஓர் அரிய தேசம்தான் அர்ஜன்டைனா. அங்குதான் குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்டது.

ஆம், அதுதான் அவன் பிறந்த மண்.

அப்போது நாள்காட்டி ஜுன் 14 – 1928 என்று அறிவித்தது.

அவன் வளர்ந்த பொழுதுகளை அருகிருந்து ரசித்தவர்கள் குறும்புக்கு இன்னொரு பெயரும் குவேரா தான் என்று அடித்துச் சொல்வார்கள்.

அவன் வளர வளர குறும்போடு சேர்ந்து கூடவே வளர்ந்தது அவனது அறிவு மட்டுமில்லை அளவிடற்கரிய அவனது மனிதநேயமும்.

ரப்பர் மிதவைகளைத் தூக்கி ஆற்றில் போடுவான். தாவிக் குதித்த பிறகு தொடங்கும் அவனது பயணம் 100 – 150 மைல்கள் என. பத்து பதினைந்து நாட்கள் கழித்தே வீடு வந்து சேருவான்.
இன்றோநாளையோஇறுதி மூச்சையும் விட்டுவிடும் அந்த லுானாஅதையும் விடமாட்டான். அதில் ஏறிக்கொண்டு ஐநூறோ அறுநூறோ மைல்கள் பயணம் செய்த பிறகே அவன் மனம் அமைதிப்படும். போகிற வழியெல்லாம் தென்படும் மக்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் சுமந்த கணக்கிலடங்கா சோகங்களையும் கணக்கிட்டுக் கொண்டே வீடு திரும்புவான்.

அந்த அர்ஜன்டைனா நாடு அவனையும் ஒரு மருத்துவனென்று சான்றளித்தபோது நாட்காட்டி மார்ச் 7, 1953 என்று அறிவித்தது.

மருத்துவரென்றால் பத்தாவது பெயிலாகிவிட்டு போலிப்பத்திரம் தயாரித்து வாழ்ந்த மருத்துவனல்ல.
மருத்துவரென்றால்

எக்ஸ்ரேவுக்கு இத்தனையாகும்,ஸ்கேனிங்குக்கு அத்தனையாகும்
எல்லாம் சேர்த்து மொத்தம் உன் சொத்தில் பாதி கட்டணமாகும்’  என உயிர்வாங்கும் மருத்துவனல்ல.

அவன் உயிர் கொடுக்கும் மருத்துவனாகவே மலர்ந்தான்.

மருந்துப்பைகளைத் தனது தோளில் சுமந்தபடி கொலம்பியா, வெனிசுலா எனும் துார தேசங்களிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச் சென்றான் மருத்துவம் பார்க்க.
கடமைக்கும், வியாபாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த மருத்துவன் அவன்.

இப்படிப் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்ட குவேரா மெக்ஸிகோ நாடு வந்து சேர்ந்தபோதுதான் எதிர்காலம் அவன் எதிர்பாராத வேலைகளை அவனுக்காக வைத்துக் கொண்டு காத்திருப்பது புரிய வந்தது. அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல்வேறு சம்பவங்கள் சங்கமித்த மண்தான் மெக்ஸிகோ.

அங்குதான் அவன் நாற்பதாண்டுகளாய் நகர்த்த முடியாத நாயகனாய் கியூபா நாட்டின் பிரதமராகவும், புரட்சியின் பிதாமகராகவும் வீற்றிருக்கிற பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தான்.

அப்போது நாட்காட்டி ஜுலை 14, 1955 என்று அறிவித்தது.

மருத்துவராய் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட குவேராவும் புரட்சியாளனாய் கியூபா நாட்டிலிருந்து வெளியேறிய பிடல் காஸ்ட்ரோவும் மெக்ஸிகோ நாட்டில் தான் அறிமுகமாகிறார்கள்.
விடிய விடிய நடக்கிறது விவாதங்கள்.

ஆனால், விடிந்த பிறகே விளங்குகிறது பிடலுக்குஅந்த 27 வயது மருத்துவனும் கியூபா நாட்டு விடுதலைக்காக வீர சபதமேற்று தன்னோடு பயணப்பட்டுவிட்டான் என்பது.

கப்பலில் பயணப்பட்டவர்கள் கரை இறங்கியபோது எதிர்கொண்டு அழைத்தது ஏவுகணைகளும்
எதிரிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும்தான்.

தப்பித் பிழைத்த அவர்களை தாவி அணைத்துக் கொள்கிறது கியூபக்காடுகளும் மலை முகடுகளும்.
அப்போதுதான் இனி தன் தோள்கள் சுமக்க வேண்டியது மருந்துப் பையை அல்ல. படைகளைச் சிதற அடிக்கும் துப்பாக்கியை’  என உணர்கிறான்.

படை மருத்துவன் படைத் தளபதியாய் பரிணாமம் பெற்ற நாற்பத்தி எட்டே மாதங்களில் பறந்தோடுகிறான் எதிரி.

விடுதலை கீதம் கியூப மண்ணில் இசைப்படும்போது

பிப்ரவரி 16, 1959 என்று அறிவிக்கிறது நாட்காட்டி

அதிபராகிறார் பிடல்.
எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்த அந்த இளைஞனுக்கு நன்றி செலுத்துகிறது நாடே. அவனை வாழ்த்தும் விதமாக கியூபா மக்கள் சே என்று செல்லப் பெயர் சூட்டி குதூகலிக்கிறார்கள்.

குவேரா எனும் பெயரோடு சேவும் சேர்ந்து கொள்ள சேகுவேரா என புதுப்பெயர் பெறுகிறான் அந்த இளைஞன். அந்நிய மண்ணில் பிறந்திருந்தாலும் தங்களுடையதை கண்ணியமிக்க மண்ணாக்கிக் காட்டிய இளைஞனை கியூப நாட்டினுடைய தேசிய வங்கியின் தலைவராக்குகின்றனர்.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

அந்நாட்டின் ருபாய் நோட்டுக்களில் சேஎனும் தனது செல்லப் பெயரை கையெழுத்தாக இடுகிறார் சேகுவேரா. அடுத்து அந்நாட்டின் தொழில்துறை தலைவராக்குகின்றனர் குவேராவை.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

புதிய பொறுப்பேற்றுக் கொண்டவுடன் உள்ளுர் தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக அந்நிய நாட்டு கொள்ளை நிறுவனங்களுக்கு அழகிய பூட்டுகளை அனுப்பி வைக்கிறார் சேகுவேரா.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து அநேக சீர்த்திருத்தங்கள்,அதற்கிடையே திடீர் திடீர் தலைமறைவு.
இதுதான் சேகுவேராவின் தொட்டில் பழக்கம்.
முதல் முறையாக அவர் தலைமறைவானபோது

சேகுவேராவின் கதையை முடித்துவிட்டார் பிடல் காஸ்ட்ரோ  என முதல் பக்க தலைப்புச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.

மீண்டும் வருவார் சேகுவேரா.

நாட்டின் எல்லையிலிருக்கும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களோடு அத்தனை நாளும் பணியாற்றிவிட்டு.  மறுபடியும் தலைமறைவு.

கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்’  என அலறும் முதல் பக்கச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.

மீண்டும் வருவார் சேகுவேரா.

சுரங்கத் தொழிலாளர்களின் தோழனாகச் சில காலம் பணிபுரிந்து விட்டு. மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

திடீரென ஒருநாள் மீண்டும் தலைமறைவு.

ஆனால் இந்த முறை தனது தோழன் பிடலுக்கு ஒரு நெஞ்சுருகும் மடல் ஒன்றை காணிக்கையாக்கிவிட்டு காணாமல் போகிறார்.

அயோக்கியர்களால் அல்லல் படும் இன்னொரு தேசத்திற்கு எனது தோள்கள் தேவைப்படுகிறதாம். எனவே பயணப்படுகிறேன். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் நம் கியூப மக்களை.
வெற்றி நமதேஎன்கிறது அக்கடிதம்.

தொழில் அமைச்சர் பதவியோதேசிய வங்கியின் தலைவர் பதவியோ எதுவுமே அவருக்குப் பொருட்டில்லை. விடுதலைக்கு ஏங்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக போராடுவதே அவர் நேசித்த பெரிய பதவி.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.

அங்குள்ள உழைக்கும் மக்களது உன்னதப் போராட்டத்தில் சேகுவேரா தன்னையும் இணைத்துக் கொள்ளும்போது

நாட்காட்டி நவம்பர் 4, 1966 என்று அறிவிக்கிறது.

இங்குள்ள போராட்டக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது இத்தனை வித்தைகள்’  என விவரம் புரியாமல் வியக்கிறது பொலிவிய அரசு.  ஆனால்

ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

போராளிகளின் விதவிதமான தாக்குதல்கள் தொடரத்தொடர தலைசுற்றுகிறது பொலிவியப் படைகளுக்கு.  ஆனால்

ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அலறுகிறது அரசு தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல். உற்று நோக்கிக்கொண்டிருந்த அது அருகில் வந்து ஆறுதல் சொல்கிறது. அந்த அற்புதமான வீரனை வீழ்த்த ஆயுதமும் கொடுக்கிறது.

கியூபா மலைகளில் துவங்கிய யுத்தம் பொலிவியக் காடுகளில் தொடர்கிறது.
உறுத்தலோடு உற்று நோக்கிக் கொண்டிருந்த அது மெல்ல மெல்ல அந்த மாமனிதனை நெருங்குகிறது.

ஒரு அதிகாலைப் பொழுதில் பெரும்படையோடு அந்தப் புரட்சிக்காரன் ஆஸ்த்துமா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வேளையில் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது அது.

சேகுவேரா கைதான செய்தி எப்படியோ கசிந்துவிடஎட்டுத்திக்கும் செய்தி பறக்கிறது. அவரை விடுவிக்க கோரி மாபெரும் அறிஞர்களும், லட்சக்கணக்கான மக்களும் பங்கு கொண்ட பேரணி லண்டனில் நடக்கிறது.

சேகுவேராவை எதுவும் செய்துவிட வேண்டாம்’  என எழுந்த லட்சக்கணக்கானவர்களின் குரல்களை ஏளனம் செய்தபடி அதுதனது துப்பாக்கியின் திசையை சேகுவேராவை நோக்கி திருப்புகிறது.

துப்பாக்கியின் விசையை அழுத்தப்போகும் வேளையில்
ஒரு நிமிடம்…’ என்கிறார் சேகுவேரா.

சுடுவதை தாமதிக்கிறது அது.


இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்ட வேளையில் அந்த இனியவனின் இதயத்திலிருந்து எழுந்த இறுதி வரிகள் இதுதான்

எனது தோழன் பிடலிடம் சொல்

எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்.

என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்.

உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.

குரூரத்துடன் அது விசையைத் தட்டுகிறது.
அந்த மாவீரன் பொலிவிய மண்ணில் வீழ்கிறான்.

அப்போது நாட்காட்டி அக்டோபர் 9, 1967 என அறிவிக்கிறது.

எது அந்த அது’?உலக மக்களின் கூக்குரலை உதாசீனப்படுத்திய அதுஎது?
அதுதான்: அமெரிக்கா.
மற்றும் அதனுடைய உளவுக்கும்பல்.

அன்புத்தோழி,
அம்மாவீரன் இறந்து முப்பது ஆண்டுகள் கழித்து இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இத்தனை ஆண்டுகளாக சிக்காமலிருந்த அப்புரட்சியாளனது எலும்புக்கூடு கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டது.

தனது தோழனின் எலும்புக்கூட்டை இன்றைக்கும் கியூபாவினது பிரதமராக இருக்கின்ற பிடல் காஸ்ட்ரோ பெற்றுக்கொண்டு சேகுவேராவின் மகளிடம் ஒப்படைத்தபோது அவர் சொன்னது:

மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கிறார்
இனிய தோழி,
இங்கு சாதிச் சண்டைகளிலும்,மதப் பாகுபாடுகளிலும்,எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற மனிதர்கள்தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க

நமது புரட்சியாளனோ  எந்த மண்ணிலோ பிறந்து
எந்த மண்ணிலோ போராடி  எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.

ஆம் தோழி,நமது சேகுவேரா வாழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர், வீழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர்.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை

விதைக்கப்படுகிறார்கள்.

(இன்று மாவீரன் சே இம்மண்ணில் விதைக்கப்பட்ட நாள்)

நாங்கள் அடிப்படையில் மார்க்சியவாதிகள். உலகத்தின் நிகழ்வுகளையும், சம்பவங்களையும், சமூக அமைப்பையும் மார்க்சிய பார்வை கொண்டு பார்க்கவில்லை என்றால், எந்த ஒரு மனிதனும் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. பெரியாரியலாளர்.வே.ஆனைமுத்து

இந்தியாவில் இந்தி தேசிய மொழி என்பது தவறு!

-
வே. ஆனைமுத்து

நேர்காணல்: பாலு சத்யா
அய்யா ஆனைமுத்து, ‘வாழும் பெரியார்என்று அழைக்கப்படுபவர். பெரம்பலூருக்கு அருகே இருக்கும் முருக்கன்குடி என்ற சிற்றுரில் வேம்பாயி - பச்சையம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக 21.06.1925-ல் பிறந்தார். 1944-ல் வேலூரில் தந்தை பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு சுயமரியாதைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டார். தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் பணியில் இன்றுவரை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறள் மலர்’, ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். திராவிடர் கழகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர், 1975-ல் அதிலிருந்து வெளியேறினார். தோழர்களுடன் இணைந்து பெரியார் சம உரிமைக் கழகம்என்ற இயக்கத்தை 1976-ல் தொடங்கினார். 1978ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக மிகத் தீவிரமாக போராடினார். அப்போதைய குடியரசு தலைவர் சஞ்சீவரெட்டியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தார். உ.பி.யில் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பீகாரில் முதன் முறையாக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டிலும் 1979-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித ஒதுக்கீடு கிடைத்தது குறிப்பிடத்தக்க ஒன்று. 1988ஆம் ஆண்டு, பெரியார் சம உரிமைக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து’, ‘தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாசார இட ஒதுக்கீடு செய்!ஆகிய நூல்களை எழுதியவர். பெரியார் - ஈ.வெ. ரா. சிந்தனைகள்என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை நன்கு விரிவாக்கம் செய்து, சமீபத்தில் இருபது தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 
கேள்வி: இந்த வயதிலும் உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் உந்து சக்தி எது?
ஆனைமுத்து: எனக்குப் பிடித்தமான பணி, பெரியாரைப் பற்றிப் படிப்பது, எழுதுவது, ஆராய்ச்சி செய்வது. அந்த விஷயங்களை ஊராருக்குச் சொல்லுவது. இந்தப் பணியில் நான் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபத்தைந்து முதல் ஈடுபட்டிருக்கிறேன். அந்தக் குறிப்பிட்ட பணியில் எனக்கு அளவு கடந்த ஆர்வம் இருப்பதால், அது முடிகிற வரையில் பல இடங்களுக்குப் போவது தவிர்க்க முடியாதது, பலபேரைப் பேட்டி காணுவது தவிர்க்க முடியாதது, பல ஆவணங்களை பதிவு செய்வது தவிர்க்க முடியாதது. நூலகங்களுக்குப் போவதும் இன்றியமையாதது. ஆகையால் நான் ஓய்வைத் தேடுவதே இல்லை. ஓய்வில்லாமல் அலைந்தால்தான் எனக்கு வேண்டிய தரவுகளை, பல மட்டங்களில் நான் திரட்டிக்கொள்ள முடியும். அதற்கு வயது ஒன்றும் தடையாக இல்லை. ஏனென்றால், எனக்குக் கண் பார்வை நன்றாக இருக்கிறது. நினைவாற்றல் நன்றாக இருக்கிறது. பயணம் போவதற்கும் ஒன்றும் தடையில்லை. ஆகையால், நான் எடுத்துக்கொண்ட வேலையை முப்பத்தைந்து ஆண்டுகளாக விடாமல் செய்துகொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். அது முற்றுப் பெறுகிற வரைக்கும், எனக்கு எத்தனை வயதானாலும் அப்படித்தான் இருப்பேன். இதுதான் என் உந்து சக்தி. பெரியாரை முழுமையாக உலகத்துக்குக் காட்டவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். 
கேள்வி: தற்போது பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளை இருபது தொகுதிகளாகத் தொகுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?
ஆனைமுத்து: பெரியாருடைய எழுத்துகள் எல்லாம் 1925-ல் இருந்து எழுதப்பட்ட எழுத்துகள்தான். அன்றைக்கு அந்த முதல் ஓராண்டில் அவரால் எழுதப்பட்ட எழுத்து, அவரிடமும் இல்லை, பெரியார் நூலகத்திலும் இல்லை, எங்களிடமும் இல்லை. அது இருக்கற இடம் அப்போ எனக்குத் தெரியாது. அது தெரியாமலே, 1925-ல் பெரியார் எழுதிய, பேசியவற்றையெல்லாம் விட்டுவிட்டு, 1926-ல் இருந்து தொகுக்க ஆரம்பித்தேன். அவர் இறக்கும்வரை என்ன பேசினாரோ, எழுதினாரோ அவற்றில் இன்றியமையாதவை என்று கருதப்படுகிற கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தொகுத்தேன். சொன்னவற்றையே மறுபடியும் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தால், அதை மறுபடியும் சேர்க்காமல் விட்டுவிட்டு தொகுத்தேன். இதை பெரியாரே சொல்லியிருந்தார். நான் ஒரே செய்தியைப் பேசியிருப்பேன். ஒரே செய்தியை எழுதியிருப்பேன். அது வந்துடாம பாத்துக்கங்க!ன்னு சொல்லியிருந்தார். அதில் நான் எச்சரிக்கையாக இருந்தேன். 1926 முதல் 1973 வரை, நாற்பத்தேழாண்டு காலம் அவருடைய பேச்சு, எழுத்தில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் நான் இரண்டாண்டுகளாக தொகுத்துவிட்டேன். அந்த ஆவணங்கள் முழுவதும் திருச்சியில், பெரியார் மாளிகையில் இருந்தன. அவரே அது முழுவதையும் எடுத்துக்கொண்டு போவதற்கு எனக்கு அனுமதி கொடுத்துவிட்டார். நானும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். என் வீடும் திருச்சி, பெரியார் குடியிருந்ததும் திருச்சி. அவர் புத்தூரில் குடியிருந்தார். நான் நகர ரயில்வே ஸ்டேஷன் அருகே குடியிருந்தேன். என்னுடைய ஓய்வு நேரம், தூக்க நேரம் எல்லாம் போக நான் படிப்பேன். நான் படித்து வைத்ததைக் குறித்து வைப்பேன். அதை இன்னொருவர் சரி பார்ப்பார். அதை நான்கு பேர் எடுத்து எழுதுவார்கள். அப்போதெல்லாம் கணினி கிடையாது. ஜெராக்ஸ் கிடையாது. அப்போது படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்கள் நான்கு பேரை, ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்தேன். அவர்கள் எடுத்து எழுதுவதற்கு ஏற்பாடு செய்தேன். அவர்கள் ஏறக்குறைய இருபது மாதங்கள் எழுதினார்கள். ஹிந்துஒரு பக்க அளவு இருக்கிறதல்லவா? அதற்கு சிங்கிள் டெமிஎன்று பெயர். அந்த சிங்கிள் டெமி சைஸில் 3,222 பக்கம் எடுத்து எழுதினேன். நான் படித்ததில், கழித்தது போக. மொத்தம் 5,000 பக்கங்கள் வர்றது மாதிரி படித்தேன். அதில் ரெப்பெட்டிஷனாக வருவதையெல்லாம், நானே திரும்பத் திரும்பப் படித்துக் கழித்துவிட்டேன். ஃபைனல் என்று தேறியது 3,222 பக்கங்கள். அந்த, எழுதப்பட்ட கையெழுத்துப் படியை பெரியாரிடமே கிட்டத் தட்ட பத்து மாதங்கள் கொடுத்து வைத்திருந்தேன். அவர் தானாகவும் படிப்பார். என்னைப் படிக்கச் சொல்லியும் கேட்பார். சில தோழர்களைப் படிக்கச் சொல்லியும் கேட்பார். படித்துவிட்டு, ஏறக்குறைய ஐநூறு இடங்களில் கையெழுத்துப் போட்டார். வேக வேகமாகக் கையெழுத்துப் போடுவார். இதெல்லாம் நான் முதல் பதிப்பு கொண்டுவரும்போது ஏற்பட்ட அனுபவங்கள். 
கேள்வி: முதலில் இந்த தொகுப்புப் பணியைச் செய்யும்போதே அவருடைய சில கட்டுரைகள், சொற்பொழிவுகள் எல்லாம் கிடைக்கவில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள் இல்லையா? அவை எல்லாம் கிடைத்துவிட்டனவா?
ஆனைமுத்து: 1973-ல் பெரியார் இறந்தார். சென்னை மண்ணடியில், மறைமலை அடிகள் நூல் நிலையம் ஒன்று இருக்கிறது. 1974, நவம்பரில் அங்கே போய் உட்கார்ந்து விடுபட்டுப் போனவற்றையெல்லாம் முழுதாகப் படித்து கையில் நானே எழுதிக் கொண்டேன். ஆனால், அத்தனையையும் என்னால் முழுதாக எழுத முடியவில்லை. எனக்குக் கிடைக்காத தகவல்கள் கிடைத்துவிட்டன. மறுபடியும், அவற்றை வேறொருவரிடம் வாங்கி 2001-ம் ஆண்டுதான் முழுதாக ஜெராக்ஸ் பண்ணினேன். ஏனென்றால், பெரியார் இறந்த பிற்பாடு பெரியார் எனக்கு எதையெல்லாம் கொடுத்தாரோ அவை எல்லாவற்றையும் திருப்பி வாங்கிவிட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை. ஆதாரம் என்று ஒன்றுகூட என்னிடம் கிடையாது. கையில இருந்த எல்லாமே 1975 கடைசியில் போய்விட்டது. அப்புறம் நான் என் தேடலை ஆரம்பித்தேன். அங்கங்கே போகிற இடங்களில் ஏதாவது ரெண்டு வால்யூம், ஒரு வால்யூம், அரை வால்யூம் என்று கிடைக்கிற பெரியாரின் சிந்தனைகளை அருப்புக்கோட்டையில் இருந்து பல ஊர்களில் திரட்டிக்கொண்டு இருந்தேன். அது சம்பந்தமாக காமராஜரையும் பார்த்தேன். இது தொடர்பாக இரண்டாவதாகப் நான் பார்க்கப் போனது காமராஜரைத்தான். சுதேசமித்திரன்பத்திரிகையில் பெரியாருடைய சொற்பொழிவுகள், பயண அனுபவங்கள், வைக்கம் போராட்டம் குறித்த பேச்சு எல்லாம் வந்திருக்கின்றன. அதை டெல்லியில் படித்திருந்தேன். ஆனால், அந்தப் பத்திரிகை கை வசம் இல்லை. காமராஜர் இறந்தது 2.10.1975-ல். 30.9.1975, மாலை நான்கரை மணிக்கு நானும் பஞ்சாயத்து செய்திஆசிரியர் கு. கோவிந்தராஜுலுவும் காமராஜரைப் பார்த்தோம். முக்கால் மணி நேரம் பேசினோம். அதாவது, காமராஜர் இறப்பதற்கு நாற்பத்தி எட்டு மணி நேரத்துக்கு முன்னால். அப்போது அவர் உடம்பு நொந்து போயிருந்தது. என்னை அவர் தம்பி!என்றுதான் அழைப்பார். அவரை நான் ஆண்டுக்கு இரண்டு முறை பார்ப்பேன். கோட்டையில் ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். 1966-ல். 

என்ன தம்பி?’ என்று கேட்டார். அய்யாவைப் பத்தி உங்க வார்த்தையில கேட்டு பதிவு செய்ய வந்திருக்கேன்யான்னு சொன்னேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை, இல்லையா? அதனால் சொன்னார். ஒரு பத்து நாள் கழிச்சு வா! நான் நிறையா சொல்லணும். சொல்றேன்அப்பிடின்னார். நானும் சரிங்கஎன்று சொல்லிவிட்டேன். அவரால் அதிகம் வேகமாகப் பேச முடியவில்லை. அப்புற்ம் கொஞ்சம் நேரம் கழித்து நானாகக் கேட்டேன். உங்க காங்கிரஸ் கமிட்டி ஆபீஸ்ல சுதேசமித்திரன்இருக்கும் இல்லைங்கய்யா! அதைக் கொஞ்சம் குடுக்கச் சொல்லுங்களேன்!னு சொன்னேன். அது எங்க இருக்கும்? அது... ஆகஸ்ட் கலவரத்துல எல்லாத்தையும் வெள்ளைக்காரன் தூக்கிட்டுப் போயிட்டான். அங்க ஒண்ணும் இல்லஎன்று சொல்லிவிட்டார். அது உண்மை. அப்புறம் அவர் எதுவும் சொல்லவில்லை. அப்புறம் நான் யோசித்துக் கேட்டேன். அருப்புக்கோட்டையில முத்து நாடார் வீட்ல இருக்குமாங்கய்யா?’ என்று கேட்டேன். ஆங்... ஆமா, ஆமா. அவங்க ரெண்டு பேரும் தோஸ்து. அங்க இருக்கும். அங்க போ!என்று சொன்னார். முத்து நாடார், பெரியாரோடு காங்கிரஸில் இருந்தவர். பெரியாரோடு சுதந்தரா இயக்கத்தில் இருந்தவர். பெரியார் இறக்கும் வரை பெரியாரோடு இருந்தவர். அந்த அருப்புக்கொட்டை முத்து நாடார்ஒரு பத்திரிகை நடத்தினார். அது பெரியார் பத்திரிகைக்கு ஆறாண்டு முற்பட்ட பத்திரிகை.
கேள்வி: அது என்ன பத்திரிகை?
ஆனைமுத்து: நாடார் குல மித்திரன்.அது ஒரு வாரப் பத்திரிகை. அதை 1919-ல் ஆரம்பித்திருந்தார். அதனால் அங்கே போய் கேட்டால் தகவல்கள் கிடைக்கும் என்று சொன்னார் காமராஜர். அப்போ முத்து நாடாரோட மகன், சின்னவர் உயிரோடு இருந்தார். இப்போதுதான் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இறந்தார். நான் நேராக அவர் வீட்டுக்குப் போய்விட்டேன். இரண்டு நாள் தங்கியிருந்தேன். முடிந்தவரை பார்த்தேன். அப்போ ஜெராக்ஸெல்லாம் கிடையாது. ஒரு நாற்பது பக்க நோட்டில் சில குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். நாடாருடைய மகனும் அப்போது பெரியார் கட்சியில் இருந்தார். அந்த மாவட்டத்தினுடைய தி.க. தலைவர் அவர். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். மிகவும் அனுசரணையாக இருந்தார். அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கி பெரியார் சிந்தனைகளைப் படித்தேன். அப்போ நான் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். சிந்தனையாளன்.அதனால் அதிக நாள் தங்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். மறுபடி, 1987-ல் போனேன். எம்.ஜி.ஆர். இறந்த தினத்தன்று நான் அருப்புக் கோட்டையில் அவர்கள் வீட்டில் இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் பத்து நாட்கள் தங்கிப் படித்தேன். அப்போ ஜெராக்ஸ் இருந்தது. எல்லா ஆவணங்களையும் மதுரைக்குக் கொண்டு வந்து, என்னிடம் எவ்வளவு பணம் இருந்ததோ, அதற்கு ஏற்றதுபோல் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு எனக்கு நிறைய தரவுகள் கிடைத்தன. ஆனால், எனக்குக் கிடைத்த முதல் தரவு அவர்களிடம் கிடைத்ததுதான். இப்படி தேடிக்கொண்டே இருந்தேன். 
கேள்வி: அப்படியானால் கிட்டத்தட்ட பெரியாரின் எல்லா சிந்தனைகளையும் தொகுத்துவிட்டீர்கள், இல்லையா?
ஆனைமுத்து: இல்லை. எனக்கு வசதி கிடையாது. வயதாகிவிட்டது. வாகன வசதி கிடையாது. பொருள் வசதி கிடையாது. கூட வருவதற்கு ஆட்கள் இல்லை. நான் நிறைய இடத்துக்குப் போகவேண்டி இருந்தது. இன்னும்கூட நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. 
கேள்வி: இன்னும் தொகுப்பில் சேர்க்கவேண்டியது நிறைய இருக்கின்றன என்று சொல்கிறீர்களா?
ஆனைமுத்து: நிச்சயமா. இப்போது நான் தொகுத்தவற்றிலேயே பெரியாரின் எல்லா சிந்தனைகளையும் பயன்படுத்திவிடவில்லை. இப்போது நான் என்ன வெளியிட்டிருக்கிறேனோ, அதைப் போல இரண்டு மடங்கு வெளியிட என்னிடமே செய்திகளும் தகவல்களும் இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் இனிமேல் எனக்கு வயது இல்லை. நேரமும் இல்லை. இதுதான் இந்தத் தொகுப்பினுடைய சுருக்கமான அனுபவம், வரலாறு. 
கேள்வி: திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் குடியரசு கட்டுரை தொகுப்புகளுக்கும் உங்களுடைய தொகுப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? 
ஆனமுத்து: எந்த அமைப்பு குடியரசுஎன்கிற பெயரால் வெளியிட்டு இருந்தாலோ, ‘பெரியார் எழுத்தும் பேச்சும்என்கிற பெயரால் வெளியிட்டு இருந்தாலோ பெரிய வேறுபாடு என்ன என்று கேட்டால், காலத்தை மையமாக வைத்து கட்டுரைகளையோ, பேச்சையோ அப்படியே மொத்தமாக தொகுத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்ற தொகுப்புகளில். காலத்தை மட்டும் மையமாக வைத்து, பொருள்வாரியாகப் பிரிக்காமல், மொத்தமாக அச்சடித்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். என் தொகுப்பில் முதல் வேறுபாடு என்னவென்றால், நான் காலத்தை மையமாக வைத்திருக்கிறேன். ஆனால், படிக்கும்போதே பொருள்வாரியாக முழுக்கப் பிரித்துவிட்டேன். ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே, இந்தக் கட்டுரை எந்தப் பொருளைப் பற்றி முதன்மையாகப் பேசுகிறது, எந்தத் தலைப்பில் வருகிறது என்று சப்ஜெக்ட்வைஸாக பிரித்துவிட்டேன். க்ரோனலாஜிக்கல் ஆர்டர் இஸ் தேர். கால வரிசை அப்படியே இருக்கிறது. ஆனால், அந்தக் கால வரிசைப்படி மொத்தமாக அச்சிடாமல், முதலில் பொருள்வாரியாகப் பிரித்ததுதான் என்னுடைய வித்தியாசம். அப்படி கிட்டத்தட்ட 70 வெவ்வேறு சப்ஜெக்டுகள் வருகின்றன. பெண்ணுரிமைஎன்றால் அதைக் கால வரிசைப்படுத்தியிருக்கிறேன். தீண்டாமைஎன்றால் அதைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். ஜாதி ஒழிப்புஎன்றால் அதைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். மத எதிர்ப்புஎன்றால் அதைக் காலவரிசைப்படுத்தி இருக்கிறேன். இப்படி எல்லாவற்றையும் பொருள்வாரியாகப் பிரித்து அவற்றைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். இது முதல் வேறுபாடு. 
இரண்டாவது, அந்த குடியரசுதொகுப்பு என்று பெயர் வைத்ததால், ‘குடியரசைத் தவிர வேறு இடத்துக்குப் போவதற்கு அங்கு வாய்ப்பில்லை. நான் அப்படி பெயர் வைக்கவில்லை. பெரியாருடைய சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் என்பதால், ‘குடியரசுபத்திரிகையில் வெளியானவை, ‘குடியரசுக்கு முன்னால் வந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் தொகுத்தேன். இந்தப் பதிப்பில் நான் தொகுத்ததில், முதன்மையாக, முதல் கட்டுரை 1922-ட் ஆண்டு அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதி பெரியார் கொடுத்த பேட்டி இடம்பெற்றிருக்கிறது. அதுதான் ஃபர்ஸ்ட் ஸ்பீச் இன் பிளாக் அண்ட் ஒயிட். என் ஆய்வுக்கு உட்பட்ட வரையில், முதன் முதல் அச்சில் பதிப்பாகி வெளி வந்தது இந்தப் பேட்டிதான். அந்தப் பேட்டியும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பேட்டி. 
அது என்ன பேட்டி என்றால், அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் பாளையம்பட்டி என்ற ஓர் ஊர் இருக்கிறது. அங்கே தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடந்தது. பெரியார் காங்கிரஸ் கட்சியின் செக்ரட்டரி. மாநாடு முடிந்ததும் வரவு, செலவு கணக்கைக் கேட்பதற்காக அங்கே பெரியார் தங்கியிருந்தார். மாலையில் மாநாடு முடிந்ததும் இளைஞர்கள் பத்துபேர் அவரை பேட்டிகாண வருகிறார்கள். அவர்கள் யார் என்றால், அருப்புக்கோட்டை நாடார் வாலிபர்கள். அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால், ‘நாங்கள் நாடார்கள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழையக்கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் காங்கிரஸில் காந்தி தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபடுகிறார் என்று சொல்கிறீர்கள். இங்கே தீண்டாமையை ஒழிக்க உங்கள் கட்சி பாடுபடுமா?’ என்று கேட்கிறார்கள். கட்டாயம் பாடுபடும்என்று சொல்லிவிட்டு பெரியார், தீண்டாமை தன்னை எப்படி பாதித்தது என்பதை விளக்குகிறார். அவர் சொல்கிறார்: நான் போன மாசம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போனேன். நான் என்னுடைய வழக்கமான உடை, சட்டை, தலைப்பாகையோட போயிருந்தேன். வாசப்படிகிட்ட போனவுடனே அங்க இருக்குற காவல்காரன், ‘செருப்பை வெளிய விடணும்யா! சட்டை, தலைப்பாகை எல்லாம் கழட்டி இங்க வச்சிடணும். இடுப்பு வேஷ்டியோடதான் போகணும்அப்பிடின்னு சொன்னான். ஏம்ப்பா அப்பிடி?’ன்னு கேட்டேன். பக்தர்கள்லாம் அப்பிடித்தான் போகணும்னு அவன் சொல்லிப்புட்டான். நானும் அதே மாதிரி போனேன். உள்ள போய் பார்த்தா, சாமி இருக்கற இடத்துல பூட்ஸோட, வார்ப்பட்டையோட, தொப்பியோட போலீஸ்காரன் நின்னுக்கிட்டு இருந்தான். இது ஒண்ணுக்கொண்ணு முரண் தான். அதான் இந்து மதம். நான் வேற ஜாதி. எனக்கே அந்த நிலைமைதான் இருக்கு. இது அவமானம். கட்டாயம் நான் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவேன்.இப்படிச் சொன்னார் பெரியார். 
அடுத்த இரண்டு மாதத்தில், திருப்பூர்ல தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. அதுல வாசுதேவ அய்யர் தலைமை தாங்கியிருக்கிறார். ராஜகோபாலாச்சாரியார், ஸ்ரீநிவாச ஐயங்கார், பெரியார் எல்லோரும் பேசுகிறார்கள். அந்த மாநாட்டில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுட்டு வர்றார் பெரியார். நாடார்கள் தீண்டப்படாதவங்களா கருதப்படறாங்க. அது அக்கிரமம். நம்ப காங்கிரஸ் கட்சி அதுக்குப் பாடுபடணும்அப்பிடிங்கறார். அப்போது பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘இது மதவிஷயம், நம்ப கட்சி அரசியல் கட்சி. நாம்ப இதுல தலையிடக்கூடாது. இது நமக்கு அப்பாற்பட்ட விஷயம்என்று சொல்லி ஆட்சேபம் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். திறந்த மாநாட்டில், திருப்பூரில் இது நடக்கிறது. பெரியாருக்குக் கோபம் தாங்கவில்லை. மாலையில் திருப்பூரிலேயே தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். அதில் பெரியார் பேசுகிறார். தீண்டாமை நம்ப நாட்டுல மட்டும்தான் இருக்கு. அது இயற்கைக்கு விரோதமானது. அது சாஸ்திரப்படி இருக்குது. ராமாயணப்படி, ஆன்மிகப்படி இருக்குது. அதைப் போக்கணும்னு சொன்னா, அது நமக்கு சம்பந்தப்பட்டது இல்லைன்னு சொல்றாங்க. நாம்ப ராமாயணத்தைக் கொளுத்தணும். மனுஸ்மிருதியைக் கொளுத்தணும்அப்பிடின்னு காங்கிரஸ் பொதுக்கூட்டத்துல பேசறார். அதுதான் அவரோட வாழ்நாள்ல முதல் பேச்சு. அதாவது ராமாயணத்தையும், மனுஸ்மிருதியையும் கொளுத்தணும்னு சொன்ன பேச்சு. கூட்டம் முடிந்து ஒரே கார்ல ராஜாஜியும் பெரியாரும் வருகிறார்கள். அவர் சேலத்துக்குப் போக வேண்டும். இவர் ஈரோட்டுக்குப் போக வேண்டும். வரும்போது, ‘நாய்க்கரே! இன்னிக்கி டோஸ் ரொம்ப ஸ்ட்ராங்என்று சொல்லியிருக்கிறார் ராஜாஜி. உடனே பெரியார் கிண்டலாக, ‘இந்த மடப்பசங்களுக்கு இது என்ன ஸ்ட்ராங்க்? இதைப் போல இன்னும் டபுஸ் ஸ்ட்ராங்க் குடுக்கணும்என்று சொல்லியிருக்கிறார். ராஜாஜி வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டார். அதுதான் பெரியாருக்கு ஏற்பட்ட முதல் எதிர்ப்பு, பார்ப்பனர் தரப்பிலிருந்து. இவ்வளவு எல்லாம் பேசறோம், சுதந்திரம் கேக்கறோம், சுயராஜ்ஜியம் கேக்கறோம். நம்பளுக்குள்ள ஒருத்தனை தீண்டப்படாதவன்னு சொன்னா அதுக்கு இவங்க பாடுபடக்கூடாதா?’ என்கிற கோபம் அவருக்கு தன்னைமீறி வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, ரொம்பத் தீவிரமாக சிந்திக்கிறார். அப்போ அவர் ஈரோட்டில் இருந்த ஒரு கோயிலுக்கு தர்மகர்த்தா. அங்கே எப்படி பறையர்களை உள்ளே கொண்டு போவது என்று திட்டம் போடுகிறார். ஏற்கெனவே சேது நாயக்கர் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. 
அந்த நேரத்தில்தான் வைக்கத்தில் போராட்டம் நடக்கிறது. அது 1924, மார்ச் மாதம், 30-ம் தேதி ஆரம்பித்தது. அப்போ பெரியார் ஒரு பிரசார பயணத்தில் இருந்தார். இந்தப் போராட்டத்தை கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் பெரிய பெரிய படிப்பாளிகள். பாரத் லா படித்தவர்கள். வக்கீலுக்குப் படித்தவர்கள். முக்கிய தலைவர்கள் பத்தொன்பது பேரையும் மூன்றே நாட்களில் கைது செய்துவிட்டார்கள். போராடுறதுக்கு ஆளே இல்லை. தலைவர்கலை அரெஸ்ட் செய்ததும் பாமர மக்கள் எல்லோரும் பயந்துவிட்டார்கள். யாரும் போராட்டத்துக்கு வரவில்லை. அப்போ கமிட்டி தலைவர்களில் முக்கியமான ஒருவரான ஜார்ஜ் ஜோசப் என்கிற ஒருவர் ஜெயிலுக்குள் இருந்தார். கொரூர் நீலகண்ட நம்பூதிரி பாட் என்று ஒரு பார்ப்பனர், அவர் மட்டும் வெளியே இருந்தார். அவர் தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ளவர். அவருக்கு பெரியாரை நன்கு தெரியும். கேரளாவில் இருந்து பெரியாருக்கு தந்தி மேல் தந்தி அனுப்புகிறார்கள். ஸ்டார்ட் இம்மீடியட்லிஎன்று. அப்போது பெரியார், திண்டுக்கல்லில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்குக் கொடுத்த தந்தி, ஈரோட்டுக்கு போய் ரீ டைரக்ட் ஆகி வந்தது. உடனே அவர் கிளம்பி ஈரோட்டுக்கு வருகிறார். ஏப்ரல் 12-ம் தேதி, ‘நீங்கள் உடனே புறப்படாவிட்டால், போராட்டம் தோற்றுப் போகும்என்று தந்தி வந்திருக்கிறது. அப்போது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். உடனே அவர், ராஜாகோபாலாச்சாரிக்கு ஒரு லெட்டர் எழுதி வைக்கிறார். நான் போராட்டத்துக்குப் போறேன். நான் வர்ற வரைக்கும் நீங்க பார்த்துக்கங்க!என்று எழுதி வைத்துவிட்டு, ‘சுதேசமித்திரன்போன்ற பத்திரிகைகளுக்கு எல்லாம் அறிக்கை கொடுத்துவிட்டு, தனியாகப் புறப்பட்டுப் போகிறார். அவர் போகிறார் என்று கேள்விப்பட்டதும், ஆங்காங்கே இருந்து ஆட்கள் புறப்பட்டு வந்தார்கள். 
கேரளாவில் போய் இறங்கும்போது, ராஜாவே ஆள் வச்சு அவரை வரவேற்கிறான். இவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, வெகுளித்தனமாகவே, இவர் ஒன்றும் திமிர்த்தனமாக இல்லை. அவரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் உள்பட பெரிய மனிதர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஏன் பெரியாரை ராஜா வரவேற்கச் சொன்னார் என்றால், பெரியாருக்கு ஈரோட்டில் பழைய வீடு, ‘சிங்க மெத்தை வீடுஎன்று சொல்வார்கள், அப்புறம் சத்திரம்என்று ஒன்றைச் சொல்வார்கள். இரண்டும் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. திருவாங்கூர் ராஜாவோ, அவரைச் சேர்ந்தவர்களோ யார் வந்தாலும், ரயிலில் இருந்து இறங்கி, அங்கே தங்கிவிட்டுத்தான் டெல்லிக்குப் போவார்கள். இந்த சம்பவத்துக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால்கூட ராஜா இங்கே வந்திருக்கிறார். அவருடன் அந்த போலீஸ் ஆபீஸரும் வந்திருக்கிறான். பட்டாளமே வந்திருக்கிறது. அவர்களை எல்லாம் பெரியார் நன்கு உபசரித்திருக்கிறார். அவர்களுக்கு இவரை நன்கு தெரியும். அதனால், அவர்கள் சொன்னார்கள், ‘ராஜா உங்களை உபசரிக்கச் சொன்னார்என்று. பெரியார், ‘இல்ல, நான் அவரை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். ரொம்ப நன்றி. நீங்க போய்ட்டு வாங்க!என்று சொல்லிவிட்டார். 
அதற்குப் பிறகு இவர் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்குப் போகிறார். எதிர்த்துக் கடுமையாகப் போராடுகிறார். பேசுகிறார். பெரியார் பேச்சைக் கேட்ட ஒருவர், என்னிடம் நடித்தே காண்பித்திருக்கிறார். 1978-ல். அப்போது நான் அங்கே போயிருந்தபோது, அவருக்கு எழுபத்தெட்டு வயது. நம் ஊரில் அவர் மந்திரியாக இருந்தவர். வக்கீலுக்குப் படித்தவர். அவர் பெரியார் எப்படிப் பேசினார் என்பதை நடித்தே காட்டினார். அவர் லா காலேஜுக்குப் போய்விட்டு வருகிறார். அங்கே படகுத்துறை என்று ஒன்று இருக்கிறது. அங்கேதான் அய்யா பேசுவாராம். தலைப்பாகை கட்டிக்கொண்டு, கையை வீசிக்கொண்டு, பேசுவாராம். அந்த சாமியின் பெயர் வைக்கத்தப்பன்.அதாவது, ‘வைக்கம் மகாதேவன்என்று பெயர். பாமர ஜனங்கள் அதை வைக்கத்தப்பன்!என்று அழைப்பார்கள். பெரியார், ‘வைக்கத்தப்பனை தூக்கி குப்புறப்போட்டு, துவைச்சு எடுங்கடா!என்று பேசியிருக்கிறார். ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம். கிளர்ச்சி உண்டாகியது. எழுச்சி ஏற்பட்டது. நம்மளைத் தொடக்கூடாதுங்கற சாமி நமக்கு வேணாம். தூக்கிப் போட்டு துவை!இந்தப் பேச்சை இளைஞர்கள் கேட்டவுடன், உற்சாகம் உண்டாகிவிட்டது. 
கேள்வி: பெரியாரை கைது செய்யவில்லை. 
ஆனைமுத்து: பெரியாரை அரெஸ்ட் செய்துவிட்டார்கள். அப்போது, எம்பெருமாள் நாயுடு என்று ஒருவர் இருந்தார். அவரும் லண்டனில் படித்தவர். டாக்டர். அவருக்கு நாகர்கோவில். அவர் பெண்டாட்டியோட போராட்டத்துக்கு வந்துவிட்டார். இவருடைய மனைவி, நாகம்மை வந்துவிட்டார். பெரியார் அரெஸ்ட் ஆனவுடன், அவர்கள் எல்லா ஊருக்கும் போய், ஆண்களையும் பெண்களையும் அழைத்து வந்து போராட்டம் செய்கிறார். அவர்களையும் கைது செய்கிறார்கள். அப்போது ஆளே இல்லை. பற்றாக்குறை. அப்போது, ஈழவர்கள் அங்கே பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள். நம் ஊரில் நாடார்களை இரண்டுவிதமாகச் சொல்வார்கள். நாடார்!என்று சொல்வார்கள். பனைமரம் ஏறுகிறவர்களை சாணான்என்று சொல்வார்கள். அங்கே கேரளாவில் நாடார்என்றும் சொல்லுவார்கள். பனைமரம் ஏறுகிறவர்களை தீயர்என்று சொல்வார்கள். பெரியார் ஈழவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதுதான் ஒரு பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கதான் பெரிய எண்ணிக்கையில இங்க இருக்கீங்க. நீங்க கொஞ்சம் வசதியா இருக்கீங்க. ஏதோ கொஞ்சம் நிலம், கிலம் வச்சிருக்கீங்க. ஆனா, உங்களை யாரும் தீண்டமாட்டேங்கிறாங்க. தெருவுல நடக்காதே!ங்கிறாங்க. கோயிலுக்குள்ள போகாதே!ங்கிறாங்க. உங்களுக்கு ரோஷம் கிடையாதா? நீங்க ஆளுக்கு ஒரு படி அரிசி கொண்டு வரலாம்ல? நாலு தேங்காய் கொண்டு வரலாம்ல? வீட்டுக்கு ஒரு ஆள் வரலாம்ல?’ என்று அறிக்கை விடுகிறார். அது கேரளாவில் எல்லா பேப்பரிலும் வந்தது. தமிழ்நாட்டில், ‘ஹிந்துபத்திரிகையில் முழுதாக அப்படியே போட்டார்கள். 
அங்கே நாராயணகுரு என்று ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய ஆசிரமம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமம்தான் சத்தியாகிரக ஆசிரமம். அங்கே ஈழவர்கள், அரிசி, தேங்காய், ஏலம், வாழைப்பழம், நேந்திரங்காய்... என்று எக்கச்சக்கமாகக் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். பிறகு, தினம் பத்துபேர் போராட்டத்துக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். 
கேள்வி: அந்த போராட்ட வடிவம் எப்படி இருந்தது?
ஆனைமுத்து: ஒரு பறையன், ஒரு புலையன், ஒரு நாடான். மூன்று பேரும் இந்த ஜாதியில் இல்லாத யாரோடாவது ஜோடி போட்டுக்கொண்டு போவார்கள். நாகம்மாள் என்ன பண்ணுவார்கள் என்றால், கோவிந்தன் சாணார் என்று ஒருவர். அவரின் மனைவி நாகம்மாளுக்கு ஜோடி. அந்தப் பெண் இழுத்துக்கொண்டே போவார். அங்கே கோயிலுக்குப் போனவுடன், போலீஸ்காரன் சொல்லுவான்: அந்த அம்மா சாணாத்தி! விட முடியாதுஎன்று. இல்லை இவங்களோடதான் போவேன்! என்பார் நாகம்மாள். உடனே கைது செய்துவிடுவார்கள். இப்படி இடைவிடாத போராட்டம். 
ஒரு தடவை, மழை பெய்து, தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டது, கோயிலைச் சுற்றி. போராட்டம் எதற்கு? கோயிலைச் சுற்றி இருக்கிற நான்கு தெருக்களிலும் நடக்கக்கூடாது. அதற்குத்தானே! இது கோயிலுக்குள் போகிற போராட்டம் இல்லை. தெருவிலேயே நடக்கக்கூடாது என்பதற்கான போராட்டம். தெரு, நல்ல அகலமான தெரு. உயரமான மதில்கள். அந்த வெள்ளத்தில், அந்தத் தெருவில் தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டது. சத்தியாகிரகம் பண்ணப் போன ஒரு பையன், முழுகி செத்தே போய்விட்டான். அந்த வெள்ளத்திலும் மூணு மூணு மணி நேரம் தெருவில், கழுத்தளவு தண்ணீரில் நிற்பது. அதற்குப் பிறகு இன்னொருவர் போய் நின்றுகொண்டு ஏற்கெனவே நின்றவரை மாற்றிவிடுவார். இப்படித் தொடர்ந்தது போராட்டம். 
நாயர், பார்ப்பான், வெள்ளாளன் இவர்கள்தான் அங்கே மேல்ஜாதிக்காரர்கள். நம் எம்.ஜி.ஆர். இருக்கிறாரே அவர் நாயர். மேனன், நாயர் இருவரும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இவர்கள், தாங்கள் பார்ப்பானுக்குப் பிறந்தவர்களாகவே நினைப்பவர்கள். பார்ப்பானுக்கு அடுத்த ஜாதி என்று நினைப்பவர்கள். அடுத்து வெள்ளாளர். இந்த மூன்று ஜாதிக்காரர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு, படை திரட்டிக்கொண்டு பெரியாருக்கு எதிராக வர ஆரம்பித்தார்கள். கோயில்கிட்டயே சண்டை, அடிதடி நடந்தது. ஒரு பார்ப்பாரப் பையன் பெரியார் போராட்டத்துக்கு ஆதரவாக வந்தான். அவனை, பார்ப்பனர்களே பிடித்து அடித்து, மூஞ்சியைத் தரையில் வைத்துத் தேய்த்து, அவனுக்குக் கண்ணு இரண்டு போய், பார்வை கெட்டது. மூச்சே விட முடியாமல் போய்விட்டது. அப்புறம் அவனை இழுத்துக்கொண்டு போய், மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவ்வளவு கொடுமை செய்தார்கள். அடித்தார்கள், கல்லால் அடித்தார்கள். 
இரண்டாவது தடவையும் பெரியாரை கைது செய்துவிட்டு, பிறகு வெளியே விட்டார்கள். அப்படி விடும்போது, ‘நீங்கள் இந்த மாகாணத்தைவிட்டே வெளியே போகவேண்டும்!என்று சொன்னார்கள். அவர், ‘வெளியேற முடியாது! என்னவேணும்னாலும் பண்ணிக்கொள்ளுங்கள்!என்று சொல்லிவிட்டார். ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்புறம்தான் பேச்சுவார்த்தை நடந்தது. 
பெரியார் ஜெயிலில் இருக்கும்போதே, ராஜா செத்துப் போய்விட்டான். அவனுக்கு வயசாகிவிட்டது, செத்துவிட்டான். ஆனால், இவர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், இல்லையா? இவர்களுக்கு அவன் பாஷையில் எதிரிகள்என்று பெயர். அதனால், ராஜாதரப்பில் சத்துரு சம்ஹார யாகம்பண்ணினாங்க. இவர்களை சாகடிப்பதற்கு. அந்த யாகம் நடப்பதற்குள் ராஜா செத்துப் போய்விட்டான். இரவில் சங்கு ஊதப்படுகிறது. பெரியார் முழித்துக்கொண்டிருந்தார். காவல்காரனைக் கூப்பிட்டு, ‘என்னப்பா சங்கு ஊதுது?’ என்று கேட்டார். ராஜா திருநாடு எய்துவிட்டார்!என்று சொன்னான் காவல்காரன். பெரியவர்களை செத்துப் போயிட்டாங்கஎன்று சொல்லக்கூடாது இல்லையா? அது மாதிரி. அப்படியா?’ என்று கேட்டார் பெரியார். ராஜா இறந்ததால், இவர்களை விடுதலை செய்தார்கள். விடுதலையானதும் பெரியார், கோவை அய்யா முத்து, எம்பெருமாள் நாயுடு மூவரையும் மாகாணத்தைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள். மூன்று பேருமே, வெளியேற முடியாது என்று மறுத்துவிட்டார்கள். மூவருமே தமிழ்நாட்டுக்காரர்கள். உடனே, அவர்களுக்குத் தமிழ்நாட்டுக்காரர்கள் மேல் மிகவும் மரியாதை வந்துவிட்டது. பிறகு, கீழே இறங்கிவந்து பேசினார்கள். காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வந்தார். ராணியைப் பார்க்கிறார். ராணி, ‘இப்போ ரோட்ல விடுறேன். உடனே, கோயிலுக்குப் போகணும்னு அவங்க சொன்னா, அப்புறம் என்ன பண்றது?’ என்று காந்தியிடம் கேட்டார்கள். 
அப்போது பெரியார் வேறொரு இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னார் காந்தி. என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். பெரியார், ‘எனக்கு கோயிலுக்குள்ள போகறதுதான் என் நோக்கம். கண்டிப்பா போவேன். ஆனா, இப்போ போக மாட்டேன். இப்போ ரோட்ல நடக்க விடணும்என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும், ‘சரிஎன்றார்கள். 1925-ஆம் வருடம் நவம்பர் மாதம்தான் இந்த அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட ஒருவருட காலப் போராட்டம். 
இதில் இடையில் ஒரு நாள், நாகம்மாள் என்ன செய்தார்கள் என்றால், இரண்டு, மூன்று பெண்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள்ளேயே போய்விட்டார். அப்போது, பெரியார் ஆசிரமத்தில் இருந்தார். அந்தக் கோயில்ல படைக்கிற பாப்பான் ஓடியாந்தான் ஆசிரமத்துக்கு. நாயக்கரே! ஜாக்கிரதை! உன் பொண்டாட்டியை அடக்கி வை! பொம்மனாட்டி ரோட்லயே நடக்கக்கூடாதுன்னுட்டான். அவ சாமிகிட்டயே வந்துட்டா!என்று திட்டியிருக்கிறான். அதை யாரும் சட்டை செய்யவில்லை. இப்படி தைரியமாகப் போராட்டம் செய்தார்கள். 
கேள்வி: பெரியார் தொகுப்பை தயாரிக்கும்போது, திராவிடர் கழகத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?
ஆனைமுத்து: அப்படி எதிர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், நான் மேற்கொண்ட தொகுப்பை படித்து, மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு, கையெழுத்துப் போட்டபோது, எங்களுக்கு பதிப்புரிமை உண்டு!என்று எழுதிவிட்டார். அது அவர்களுக்கே தெரியும். அவர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது. ஈ.வெ.ரா. சிந்தனைகள்என்னுடைய பெயரில் வெளியாவதை வேறு யாருமே தடுக்க முடியாது. அய்யாவே அனுமதி கொடுத்துவிட்டார். 
கேள்வி: அவருடைய முழுமையான ஒட்டுமொத்த படைப்புகளுக்கான உரிமை உங்களிடம் இல்லை, அப்படித்தானே!
ஆனைமுத்து: அப்படியல்ல. நான் எதை வேண்டுமானாலும் தொகுப்பேன். நூலின் பெயர், ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்.உள்ளடக்கம், ‘சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்.நான் எப்போது வேண்டுமானாலும் தொகுத்து, எதை வேண்டுமானாலும் வெளியிடுவேன். அந்த உரிமையை நாங்கள் வாங்கியிருக்கிறோம். நாங்கள் பெரியாரின் கட்டுரைகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிடுவதை யாரும் சட்டப்படி தடுக்க முடியாது. 
கேள்வி: பெரியாரின் உடைமைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் வராமல் தடுக்கலாம், இல்லையா?
ஆனைமுத்து: அதை நாங்கள் வரவேற்கிறோம். 
கேள்வி: அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்களா? ஆனைமுத்து: நாங்கள் நாட்டுடைமை ஆக்கவெண்டும் என்று எப்போது சொல்லிவிட்டோம். எப்போது கூட்டம் போட்டாலும் நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று சொல்கிறோம். இந்த மாதிரியான பிரச்னைகள் வரும்போது நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று எழுதுகிறோம். அப்படி நாட்டுடைமை ஆக்கப்படுவதில் கௌரவமும் படுகிறோம். எங்களுக்கும் ஓர் உரிமை இருக்கிறதல்லவா? எங்கள் வெளியீடு நாட்டுடைமை ஆக்கப்படும்போது, எங்களுக்கும் உரிமை இருக்கிறது. 
கேள்வி: பெரியாருக்குப் பிறகு அவரளவுக்குத் தீவிரமாக யாரும் நாத்திகவாதம் பரப்பாதது ஏன்? இந்த விஷயத்தில் தி.மு.க.வை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
ஆனைமுத்து: பொதுவாக, பெரியாருக்குப் பிறகு நாத்திகத்தை யாரும் பரப்பவில்லை என்பது சரியான கருத்து இல்லை. பெரியார் காலத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி என்கிற தன்மையில் அது நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட கட்சி அல்ல. ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அதிகாரபூர்வமான கொள்கை. கலைஞர் நாத்திகர், பேராசிரியர் நாத்திகர், நாவலர் நாத்திகர். அதோடு சரி. அவர்கள் நாத்திகர்களாக இருப்பதால், அந்தக் கட்சி நாத்திகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அதை அவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பொருத்தமற்றது. ஏனென்றால், அதன் நிறுவனர் அண்ணா. இல்லையா? அவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்று சொல்லித்தான் கட்சி ஆரம்பித்தார். அவர் நாத்திகரா, இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கட்சி நாத்திகக் கட்சி கிடையாது. 
உதாரணமாக, காங்கிரஸ். அது பகுத்தறிவுவாதக் கட்சியே அல்ல. ஆனால், நேரு மட்டும் பகுத்தறிவுவாதி, இல்லையா? ‘ஏன் காங்கிரஸ் பகுத்தறிவாக இல்லை?’ என்று கேட்கக் கூடாது. அது பொருத்தமற்ற கேள்வி. 
கேள்வி: பெரியாருடன் பழகிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!
ஆனைமுத்து: அவரிடம் மிகவும் பாராட்டப்படவேண்டிய தன்மை என்னவென்றால், காலை எட்டு மணிக்குப் பிறகு, மாலை ஏழு மணிவரை, (இடையில் பிற்பகல் ஒன்றிலிருந்து மூன்று போக) யார் வேண்டுமானாலும், எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், சிறுவர்கள், பெரியவர்கள், அறிஞர்கள்... யார் வேண்டுமானாலும் அவரைப் பார்க்கலாம். யார் போனாலும், வயது, படிப்பு, உடை ... எந்த வேறுபாடும் கருதாமல், உட்கார வைத்து அருமையாகப் பேசுவார். ஐயம் கேட்டால், பதில் சொல்வார். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இது, முதலில் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி. அவர் சாகிறவரை அப்படித்தான் இருந்தார். அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் யாரும் வாங்கியது கிடையாது. அண்ணா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார். அவர் முதலமைச்சராக வரப்போகிற நேரத்தில். ஆனால், மற்ற யாரும் அப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதில்லை. அவர்கள் பாட்டுக்கு வருவார்கள். கதவு திறந்தே கிடக்கும். எங்களுக்கு முன்னால் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டும். அவ்வளவுதான். இது மிகப் பெரிய செய்தி. 
இரண்டாவது, ஒரு தொண்டனோ, ஒரு அறிவாளியோ அல்லது தனக்கு சம்பந்தமில்லாதவர்களோ, தான் பேசுகிற விஷயத்தைப் பற்றி கொஞ்சம் மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதற்காக வருத்தப்படமாட்டார். அதை வரவேற்று, அவரிடம் தவறு இருந்தால் அதைத் திருத்திக்கொள்வார். திருத்திக்கொண்டு, உடனே அதைப் பதிவு செய்வார். யார் சொன்னார்கள், இதைப் போய் நாம் பதிவு செய்கிறோமே என்றெல்லாம் பார்க்க மாட்டார். 
மூன்றாவது, கடைசி வரையில் தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது இந்து மதத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள், இழிஜாதி மக்கள் நிலையை ஒழிக்க வேண்டும். அதற்குக் கடைசி வரைக்கும் பாடுபடவேண்டும். அவர்களை அந்த ஜாதி இழிவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்து மதத்தில்தான் இது இருக்கிறது. 
நான்காவது, எல்லா அடிமைத்தனமும் நீங்கவேண்டும் என்பது போலவே, மக்கள் கூட்டத்தில் பாதி பெண்களாக இருக்கிறவர்களுக்கு, ‘கல்வி கொடு! வேலை கொடு! சொத்து கொடுஎன்றெல்லாம் எல்லா தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். ஆனால், உலகத்திலேயே (8.3.1970) இந்திய அரசிடம், இந்திராகாந்தியிடம் இணை அமைச்சராக இருந்த, குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டு அமைச்சர், டாக்டர் சந்திரசேகரிடம் பெண்ணுக்கு எல்லா விடுதலையும் வேண்டும். எதை எடுத்தாலும் ஐம்பது விழுக்காடு கொடு!என்று சொன்ன முதல் தலைவரும், ஒரே தலைவரும் அவர்தான். சாவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால். எந்தத் தலைவர் எதைச் சொல்லியிருந்தாலும், இதை எந்தத் தலைவரும் சொல்லவில்லை. பெண்விடுதலையைப் பற்றி சிந்திப்பதில் ஈடு இணையற்றவர் அவர். 
கேள்வி: இதெல்லாம் பெரியாருடைய நல்ல பக்கங்கள். அவருடைய சிறந்த பக்கங்களைச் சொல்கிறீர்கள். இவை எல்லாம் அவருடைய கொள்கை, அந்த தன்மை சார்ந்தவை. அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரத்யேக அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!
ஆனைமுத்து: நான் அவரிடம் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கவேண்டும்என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டார். அவர், மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆரம்பித்தார். 1929-ல் ஆரம்பித்தார். இடையில் மறுபடியும் 1942-ல் ஆரம்பித்தார். 1949-ல் முடித்துவிட்டார். பிறகு, விட்டுவிட்டார். மறுபடியும் ஆரம்பிக்கணும்!என்று சொன்னவன் நான் தான். 1964-ல் சொன்னேன். அப்போ அந்தப் பொறுப்பை நீயே எடுத்து நடத்து!என்று சொல்லி, அறிக்கை விட்டு, மாணவர்களுக்கு சாப்பாட்டுக்கு வேண்டிய பண்டமெல்லாம் வாங்கிக் கொடுத்து, அதை ஒரு ஸ்டோர் ரூமில் வைத்து, அந்த சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். நீ நடத்து!என்று. முதன்முதலாக, அவர் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பு அதுதான். அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த இடத்துக்கு பெரியார் மாளிகைஎன்று பெயர். அது புத்தூரில் இருந்தது. இன்னொரு இல்லத்துக்கு பெரியார் இல்லம்என்று பெயர். அது, தென்னூரில் இருக்கிறது. அது பெரியார் மாளிகையைவிட இரண்டு மடங்கு பெரியது. அதை நான் வாடகைக்கு எடுத்திருந்தேன். என்னுடைய சொந்த தொழில் டுட்டோரியல் கல்லூரி நடத்துவது. நிறைய மாணவர்கள் சேர்ந்தவுடன் எனக்கு இடம் போதவில்லை. அதை நான் வாடகைக்கே எடுத்திருந்தேன். நான் மேலே கிளாஸ் எடுத்துக்கொண்டிருப்பேன், நூறு பேருக்கு. பெரியார், கீழே வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார், முப்பது பேருக்கு. 1964-ல் ஆரம்பித்த அந்த வகுப்புகள், அவர் சாகிற வரை தொடர்ந்தன. நானும் அவரும் மாகாணம் முழுக்கப் போய் வகுப்புகள் எடுப்போம். 
அதே போல 1962 தேர்தல், 1967 தேர்தல். இரண்டு தேர்தல் பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டார். எல்லாரையும் கூப்பிட்டு நான் சொல்கிறபடிதான் செய்யணும் என்று அறிக்கையும் விட்டார். ஏனென்றால், அவருக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கை. தேர்தல் என்றால், கட்டுப்பாடாக வேலை செய்யவேண்டும். எதிரியிடம் விலை போய்விடக்கூடாது. தேர்தல்லயும் பணம் செலவு பண்ணிவிடக்கூடாது. நாங்கள் கெட்ட பெயர் வாங்கிவிடக்கூடாது. அந்தத் தேர்தலில் மிக அருமையாக வேலை செய்து, தேர்தல் முடிந்தவுடன், அந்தத் தேர்தலில் நின்ற அபேட்சகருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன் நான். அவன் போய் அய்யாவிடமே சொல்லிவிட்டான். உங்க கட்சிக்காரன் ஒருத்தன் தான் வேலை செஞ்சான், ஒழுங்கா. மிச்சம் இருக்குற பணத்தைக் கொண்டுவந்து குடுத்தான்யாஎன்று. பெரியார் மிகவும் மனம் திறந்து பாராட்டினார். 
இந்தத் தொகுப்பு வேலையை ஒப்படைக்கிறபோது, ஒரு முன்னூறு தலைப்புகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரிசையாக எழுதி, அய்யாவிடம் கொண்டுபோய் காட்டினேன். அவர் ஒருமணி நேரம் பார்த்தார். இதுலயே அடக்கிப்புடுவியா?’ என்று கேட்டார். அதற்குப் பிறகு நான் ஒரு மாதம் அவரிடம் போகவில்லை. உட்கார்ந்து, ஆயிரம் தலைப்புகளை யோசித்தேன். அதைக் கொண்டுபோய் காட்டினேன். இரண்டு, மூன்று மணி நேரம் படித்துப் பார்த்தார். நல்லாருக்கு, நல்லாருக்கு. செய்!என்று சொன்னார். அப்போ நான் செயலாளர், தொகுப்பாளர். கோபால் பொருளாளர். அவர் கிட்ட இருந்து கேட்கிறார். சந்தேகம் இருந்தா வந்து கேட்டுக்கறோம்யா!என்று. உடனே பெரியார் சொன்னார். எல்லாம் அவருக்குத் தெரியும். பண்ணுவாரு. போங்க! செய்ங்க!என்று சொல்லிவிட்டார். அது அவர் என் பெயரில் வைத்திருந்த ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை. 
கடைசியாக, 1973 செப்டம்பெரில் அவருக்கும் எனக்கும் ஒரு பிரச்னையைப் பற்றி ஒரு நீண்ட வாக்குவாதம். நாம இந்து மதத்தைவிட்டு வெளியேறவேண்டும்என்பது அவருடைய கோரிக்கை. நாம் வெளியேற முடியாதுஎன்பது என் கருத்து. நான் கேட்டேன்: அய்யா! வெளியேறணும்னு சொல்றீங்களே! வெளியேறிய பிறகு, உங்களுக்கு என்ன பெயர்?’ ‘பகுத்தறிவாளன்னு நான் வச்சுக்குவேன்என்றார் அவர். இப்படியே பேசிக்கொண்டோம் நாங்கள் இருவரும். ஆனா, பகுத்தறிவாளன்னு சொன்னாக்கூட இந்து இல்லைன்னு யார் சொன்னா உங்களுக்கு?’ என்றேன் நான். அப்படி இல்லியா?’ என்றார் அவர். இல்லியே! பகுத்தறிவாளன்னு சொன்னாலும் அப்புறமும் இந்துதான்.என்றேன் நான். அப்போ, நாத்திகன்னு சொல்லிட்டா?’ - பெரியார். நீங்க நாத்திகன்னு சொல்லிட்டாலும், அப்பவும் நீங்கள் இந்துதான்.’ - இது நான். 
உடனே பெரியார், ‘நான் நாத்திகன்னு சொல்லி, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவுல நோட்டிஃபை பண்ணிட்டா?’ என்றார். அய்யா! நீங்க நெத்தியில நாத்திகன்ன்னு பச்சை குத்திக்கிட்டாலும், அப்போதும் இந்துவாகப் பிறந்த நீங்கள் இந்து மதத்தைவிட்டு மாறாத வரையில் நீங்கள் இந்துதான். அதை நீங்கள் மாற்றவே முடியாது. பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிக் கவலை இல்லைஎன்று சொன்னேன். சட்டத்துல அப்படி இருக்கிறதா?’ என்று கேட்டார். ஆமாஎன்று நான் பதில் சொன்னேன். நீங்கள் சிலையை உடைத்தாலும் இந்துதான். பார்ப்பானை உதைச்சாலும் இந்துதான். அடிச்சாலும் இந்துதான். வாடா, போடான்னு சொன்னாலும் இந்துதான்.இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை. உங்களுக்குச் சொல்கிறேன். பார்ப்பானை அடித்துவிடுகிறீர்கள். கோயில்ல ஏதோ ஒரு சாமியை உடைத்துவிடுகிறீர்கள். அதுக்கு வயலேஷன்னு பேரு. இருக்கிற உரிமைகளை மீறிவிட்டால்கூட, மீறிய பிறகும் நீங்கள் இந்துதான். 
உதாரணமாக, உங்கள் அப்பா இருக்கிறார். நீங்கள் உங்கள் அப்பாவை மதிக்கவில்லை. அடிக்கிறீர்கள், உதைக்கிறீர்கள், திட்டுகிறீர்கள். அப்பாவை மீறி நடக்கிறீர்கள். அப்போதும் மகன் இல்லை என்று ஆகிவிடுமா? மகன், மகன் தானே. என்னை திட்டுறான், அடிக்கிறான். உதைக்கிறான். குடிக்கிறான். அவனுக்கு சொத்து குடுக்க முடியாதுஎன்று சொல்ல முடியுமா? முடியாது. கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவன் என்னவாக இருந்தாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகையால், ஒன்ஸ் பார்ன் எ ஹிந்து, யு டை ஆஸ் எ ஹிந்து. வாட் எவர் யு கால் யுவர் செல்ஃப். 
அப்போது பெரியார் கேட்டார்: முஸ்லீமா மாறிட்டா?’ நான் உடனே சொன்னேன்: நீங்க 1924-லருந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எத்தனைபேரு மாறினான்? ஏன் மாறலை? அது இயற்கை இல்லை. செயற்கை. பொறந்த மதத்தைவிட்டு எவனும் போக மாட்டான்யா!என்று சொன்னேன். உடனே அவர், ‘கிறித்தவனா மாறிட்டா?’ என்று கேட்டார். நான் சொன்னேன்: நம்ம ஊர்லல்லாம் பாப்பார கிறித்தவன், ரெட்டியார் கிறித்தவன், வெள்ளாளா கிறித்தவன், படையாச்சி கிறித்தவன்னு நிறையா பேரு இருக்காங்களே!எங்க ஊர்ல ஒரு தொகுதியில படையாச்சி கிறித்தவன் தேர்தல்ல நின்னாதான் ஜெயிக்க முடியும். அவ்வளவு கிறித்தவன் இருக்கான். அவங்களல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால கிறித்தவர்களா மாறினவங்க. அதனால, ‘இங்க எல்லாவித ஜாதியிலயும் கிறித்தவங்க இருக்காங்கய்யா!என்று சொன்னேன். ஆமாம்ப்பா. இப்பதான்ப்பா புரியுதுஎன்று சொல்லிவிட்டு, என்ன சொன்னார் என்றால், ‘இவ்வளவையும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் பூரா சொல்லிடணும்என்றார். அதுக்காக ஒரு பயணம். நாங்கள் இரண்டு பேர் மட்டும் போகிற மாதிரி, பேசுகிற மாதிரி. அந்தப் பயணம், 1973, நவம்பர் 18-ல் இருந்து, 28 வரைக்கும் நடந்தது. பெரியார் இறப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்னால், நாங்கள் இரண்டுபேர் மட்டுமே போகிற பயணம். அப்போது எல்லோரும் புறக்கணித்துவிட்டார்கள், அந்தப் பயணத்தை. 
அந்தப் பயணத்தில் அவருக்கு உடம்பு மிகவும் கெட்டுப் போனது. ஏனென்றால், கன்னியாகுமரியில் கூட்டம். அதற்கு அடுத்து திருச்சியில் கூட்டம். அந்த கடைசி பயணம் முழுக்க பெரியார் அம்பாசிடர் காரில் வந்தார். அது அவருடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. வேனில், இரண்டடி அகலமுள்ள, அவர் மட்டும் படுத்துக்கொள்வதற்கு தோதான படுக்கை இருந்தது. அவர் மட்டும் படுத்துக்கொள்வார். நாங்கள் எல்லோரும் பின்னால் இருக்கும் சீட்டில் படுத்துக்கொள்வோம். மணியம்மாள் பின்னால் இருக்கும் சீட்டில் படுத்துக்கொள்வார். நாங்கள் எதிர்சீட்டில் படுத்துக்கொள்வோம். அப்போது, அவர் அந்த வேனில் பயணம் செய்வதை விடவேண்டி நிர்பந்திக்கப்பட்டார். அம்பாசிடரில் பயணம் போனதில், அவருக்கு பதினோரு வயதிலிருந்து குடல் இறக்கம், அது நன்கு முற்றிவிட்டது. அது ரொம்பக் கொடுமையானது. அவர் என்னை நம்பிப் பல செய்திகளை எல்லாம் ஒப்படைத்தார். நான் சொன்ன பல கருத்துகளை, ஒரு தொண்டன் சொல்கிறானே என்று பார்க்காமல், ஏற்றுக் கொண்டார். அது அவருடைய பெருந்தன்மை. 
கேள்வி: பெரியாரின் நாத்திகவாதம் குறித்து அறிந்த அளவுக்கு அவரது அரசியல், சமூக புரட்சிகர சிந்தனைகள் அறியப்படவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஏற்பாடு என்று நீங்கள் நினைக்கிறீகளா?
ஆனைமுத்து: இதில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. முதல் பக்கத்தில், அவருடைய தொண்டர்களே, ‘பெரியார் இயக்கம் அரசியல் இயக்கம் அல்லஎன்று தவறுதலாக நினைக்கிறார்கள். இது முதல் பிழை. அவர் வாழ்ந்த போதும், அவர் வாழ்வுக்குப் பிறகும் நம் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் அல்ல என்று நினைக்கிறார்கள். இது பிழை என்பதுகூட, ஒரு மூடத்தனம். இதை எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், ‘திராவிட நாடு திராவிடருக்கே!என்று 1932-ல் கேட்டார். 1956-ல் தமிழ்நாடு தமிழர்களுக்கே!என்றார். முழுச்சுதந்திர தமிழ்நாடு. தமிழ்நாடு வாங்குவது எதற்கு? தமிழ்நாடு வாங்கி, நான் தனியாக என் நாட்டை ஆளவேண்டும் என்பது அவசியம் இல்லையா? அதைப் புரிந்துகொள்கிற திராணி, 2010-லும் பெரியார் தொண்டர்களுக்கு இல்லை. இது மிக வேதனையான, வருத்தப்படத்தக்க செய்தி. அவருடைய மறுபக்கத்தைப் பார்த்தால், அவர் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை சாடினார். சமூகத்தில் பெரிய ஜாதி. எல்லா உத்தியோகத்திலும் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு அவர்கள். நமக்கு பியூன் உத்தியோகம், அட்டெண்டர் உத்தியோகம், கிளார்க் உத்தியோகம். தேர்ட் கிரேடு உத்தியோகம்தான். அவர்களுக்கு செகண்ட் கிரேடு, ஃபர்ஸ்ட் கிரேடு. எல்லாத் துறையிலும். நீதி, நிர்வாகம், பட்டாளம் வரைக்கும். இந்த பார்ப்பான ஆதிக்கத்தை அவர் எதிர்க்கிறார் என்பதை விட்டுவிட்டு, பார்ப்பானை எதிர்க்கிறார், பிராமண துவேஷி என்கிற பிரசாரத்தை தேசியவாதிகள், , பொதுவுடைமைவாதிகள், பார்ப்பன பத்திரிகையாளர்கள் இந்த மூன்றுதரப்பாரும் கட்டுப்பாடாக பரப்பினார்கள். ஏனென்றால், இந்த மூன்று தரப்பிலும் தலைமை பார்ப்பான் தான். இது ஊடகங்களும், தேசியக் கட்சியில் இருந்த பார்ப்பனர்களும் செய்த விஷமப் பிரசாரம், பொய்ப் பிரச்சாரம். அவர் நாத்திகர் என்பது வேறு. நாத்திகர்தான். அதற்கு பதிலாக, அவர் பார்ப்பன எதிரி, பார்ப்பன வெறுப்பாளர், பிராமண துவேஷி என்பது பொய். பெரியார் பிராமண ஆதிக்க ஒழிப்பாளர். அதைக் கட்டாயம் ஒழிக்கவேண்டும். 
வெள்ளைக்காரன், ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு, பத்தாயிரம் வெள்ளைக்காரர்கள் வந்து, முப்பத்தாறுகோடி மக்களை ஆண்டால் அது அடிமைத்தனம் இல்லையா? அப்போ, நாங்கள் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம். இருபது லட்சம் பார்ப்பான் இருந்துகொண்டு நான் ஒசந்த ஜாதி! நான் தான் ஒசந்த ஜாதிஎன்று சொன்னால்...? இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், யார் என்ன செய்வது? அகம்பாவத்தைவிடாதது முதலில் பார்ப்பான் தவறு. தமிழன் என்பவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் பார்ப்பனீயத்துக்கு அடிமை ஆகிவிட்டான். அது தமிழன் தப்பு. தப்பாக இருக்கிறவன், தப்பாகப் பார்க்கிறான். தப்பாக யோசிக்கிறான். 
கேள்வி: திராவிட நாடு கோரிக்கை ஒரு கட்டத்தில் மாநில சுயாட்சியாக சுருங்கி, இப்போது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அது கைவிடப்பட்டது என்றுகூடச் சொல்லலாம்...
ஆனைமுத்து: மன்னிக்கணும். அண்ணா, ‘கைவிடப்பட்டதுஎன்றுதான் சொன்னார். அவர் ராஜ்ஜிய சபாவிலேயே, ‘திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது! ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றனஎன்று சொன்னார். பிறகு, கட்சிக்கு ஒரு கொள்கை வேண்டும், இல்லையா? அதை வகுக்கிறபோதுதான், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில்கூட்டாட்சி.அது அவர்கள் கட்சி கொடுத்த அரசியல் நோக்கம். கூடியிருப்போம். ஆனால், நாம் சுயாட்சியோடு இயங்கவேண்டும்.இந்தக் கோரிக்கையை வைத்த பிறகு, இப்போது இருக்கிற சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கிறோம். உதாரணமாக, 1977 வரைக்கும் கல்வி முழுக்க முழுக்க மாகாண பட்டியலில் இருந்தது. 1977-ல் இருந்து மைய, பொதுப் பட்டியலுக்குப் போய்விட்டது. பொதுப்பட்டியல் என்றால், மாமியாரும் பேசுவாள், மருமகளும் பேசுவாள். அது எப்படி சரியாக இருக்க முடியும்? மாமியார் மட்டும் பேசினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இரண்டு பேரும் பேசுவது இருக்கும். அதிகாரத்தை முழுவதுமாகப் பிடுங்கிவிட்டார்கள். அது மிகப்பெரிய கொடுமை. மாநில சுயாட்சியை நாம் கொஞ்சம் இழந்திருக்கிறோம், இந்தக் கோரிக்கையை வைத்த பிறகு. 
இரண்டாவது, இந்தி வந்துவிட்டது. ஏறக்குறைய ஆட்சி மொழியாக வந்துவிட்டது. எங்கள் கட்சியின் கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்டாயமாக, இந்தி மொழி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது. அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட எல்லா மொழிகளும் ஒரே நேரத்தில் ஆட்சிமொழியாக்கப் படவேண்டும். தமிழ் மட்டும் அல்ல. நம் மொழி சிறந்தது என்பதால், நம் மொழியை மட்டும் ஆட்சி மொழியாகக் கேட்பது பொருத்தமற்ற கோரிக்கை. அதே நேரத்தில், தமிழும், தமிழைப் போன்ற மற்ற எல்லா ஏற்புடைய மொழிகளும் உடனடியாக இந்திய ஆட்சி மொழியின் மையமாக இருக்கவேண்டும். 
இப்போது பார்லிமெண்ட்டில், மு.க. அழகிரி தமிழில் பேசவேண்டும் என்றால், தாராளமாகப் பேசவேண்டும். இதில் என்ன இடைஞ்சல்? இப்போது கூகிள் என்ன செய்கிறான்? உலகத்தையே ரெவல்யூஷனரி பண்ணிவிட்டான். எல்லா மொழியிலயும் அதுல பண்ணலாம். இல்லையா? அவனை சைனாகாரனாலேயே ஒண்ணும் பண்ண முடியாது என்றால், அந்த அளவுக்கு ஜெயித்துவிட்டான். எந்த மொழியில் மாற்றவேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். இதையும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த ஊடகம் பெருகிவிட்ட பின்னால், கணினி பெருகிவிட்ட பின்னால், ஆங்கிலத்தில் இருந்தால், எந்த மொழியிலும் மாற்றலாம். இந்த தன்மை வந்துவிட்ட பிறகு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றலாம். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மாற்றலாம். இப்படி வந்தபிறகு இப்படி வைத்திருப்பதே தவறு முதலில். ஆந்திராவில் ரயில் ஓடுகிறது. போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. வங்கி இருக்கிறது. இன்கம்டாக்ஸ் இருக்கிறது. ஏ.ஜி. ஆபீஸ் இருக்கிறது. எல்லாமே தெலுங்கில்தான் எழுதப்பட்டிருக்கும். இவர்கள்? எங்க ஊரில் தமிழில் எழுதவேண்டும். கேரளத்தில் மலையாளத்தில் எழுதவேண்டும். கர்நாடகாவில், கன்னடத்தில் எழுதவேண்டும். எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. அவரவர்கள் ஊரில், அவரவர் மொழிதான் இருக்கவேண்டும். பார்லிமெண்ட்டில் அவரவரின் தாய்மொழியில் பேசவேண்டும். ஃபோன் வைத்திருந்தால், இங்கிலீஷில் கேட்கவேண்டும். எல்லோரையும். ஏற்பாடு செய்! எங்கள் வீட்டுப் பணத்தில் அல்லவா நீ செய்கிறாய் அரசாங்கம்? உனக்கென்ன நோப்பாளம்? எங்க மொழியைக் கேட்டு, மொழிபெயர்த்து சொல்லு எல்லோருக்கும். அடுத்த ஆண்டில் என் பணி அதுதான். தலையங்கத்தில் அறிவித்துவிட்டேன். தேசிய மொழியாக ஒரு மொழி தேவை இல்லை. இந்தியாவில் இந்தி தேசிய மொழி என்பது தப்பு. ஏனென்றால், எவ்வளவு அதிக எண்ணைக்கை உள்ளவர்கள் பேசுகிற மொழியாக இருந்தாலும், அது அவர்களுக்குத்தான் படிப்பிலும், நிர்வாகத் துறையிலும், நீதித் துறையிலும், பார்லிமெண்ட்டிலும், சட்டமன்றத்திலும் ஆதிக்கத்தை உண்டு பண்ணும். நாளாவட்டத்தில், எல்லோரும் அவர்களுக்கு அடங்கித்தான் இருக்க முடியும். அதில்தான் கொண்டுபோய் முடியும் அது. 
இதை முதலில் புரிந்துகொண்டது லெனின் தான். அவர் 1905-ல் பேச ஆரம்பித்து, 1907-ல் தோற்றுப் போய்விட்டார். அப்போது அது குறித்து ஆராய்ச்சியில் அவர் முதலில் புரிந்துகொண்டது, ‘நம் தாய்மொழி ரஷ்யன். நாம நம்பளை எல்லாம் அண்ணன், தம்பி என்று சொல்கிறோம். எவன் நம்புவான்?’ அப்படியானால், என் மொழிக்கு என்ன உரிமை உண்டோ, அந்த உரிமை உனக்கும் உண்டு. நீ உன் மொழியிலேயே பார்லிமெண்ட்டில் பேசலாம். நீ உன் மொழியிலேயே கடிதங்கள் எழுதலாம். இப்படி உறுதிமொழி கொடுத்தார். அதனால், ‘ஆல் அப்பரஸ்டு நேஷன்ஸ் யுனைட்!என்று கோரிக்கை வைத்தார். வேர்ல்டு ஒர்க்கர்ச் யுனைட். ஒர்க்கர்ஸ் ஆஃப் ஆல் நேஷன்ஸ் யுனைட். உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள். அதற்குப் பிறகு அவர் கொடுத்தது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களே ஒன்று சேருங்கள்! அந்த தேசிய இனத்திற்கு என்ன அடையாளம்? மொழி. என்னை நம்பு. உன் மொழியில் பேசலாம். உன் மொழியில் படிக்கலாம். உன் மொழியில் நீதிமன்றம் நடக்கும். கல்லூரிகள் நடக்கும். நிர்வாகம் நடக்கும். என்று சொன்னவுடன், எல்லோரும் நம்பிவிட்டார்கள். அடுத்து, நாம பொட்டிக்கடைக்காரனையோ, இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் காரனையோ நாம் குலாக்குகள் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு பெட்டி பூர்ஷுவாக்கள்என்று பெயர். இது ரொம்பத் தப்பு, அவன் வயித்துக்கு சம்பாதிக்கிற அளவுக்குத்தான் வச்சிருக்கான். அதனால், அவன் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறான். தொழிலாளர்களில் நூற்றுக்கு நான்குபேர்கூட கிடையாது. அதனால், ‘ஆல் ஸ்மால் பெர்சன்ஸ், அண்ட் டிரேடர்ஸ் யுனைட்!என்று சொன்னார். அப்போதான் ஜெயிச்சுது. சுலபமா ஜெயிச்சுட்டார். அன்றைக்கு உலக சூழலும் அவருக்கு ஆதரவாக இருந்தது. அன்றைக்கு உலகத்தில் அனுபவரீதியாக, தன்னுடைய பிழையைக் கண்டு திருத்திக்கொண்ட முதல் புரட்சித் தலைவன் லெனின் தான். அதற்கு ஐந்தாண்டுகள் ஆனது. இடையில் தோற்றார். இறுதியில் ஜெயித்தார். அப்படி. 
கேள்வி: குறள் மலர்’, ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்என்று பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறீர்கள். உங்களுடைய பத்திரிகை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்? ஆனைமுத்து: தமிழ்மொழியில் பத்திரிகைகள் வந்ததெல்லாம் ஏறக்குறைய 1920-க்கு பிற்பாடுதான். 1950 வரைக்கும் எந்தக் கட்சிக்காரர்கள், எந்தக் கொள்கைக்காரர்கள் நடத்தினாலும் அவன் தியாகிதான். நான் மட்டுமில்லை. ஏனென்றால், அன்றைக்கு எழுத்தறிவு நூற்றுக்கு ஏழு விழுக்காடு. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அந்த ஏழுபேரில் இரண்டுபேர் பார்ப்பான். இரண்டுபேர் கிறிஸ்தவன். ஒருவன் துலுக்கன். இரண்டுபேர் வெள்ளாளன். சூத்திரனும் ஆதிதிராவிடனும் படிக்கவே கிடையாது. அப்போ வாங்குவது யார்? இதை யாருமே ஆராயவில்லை. வாங்குவதற்கு ஆள்? அப்போது, லட்சியப்பிடிப்போடு ஒரு பத்திரிகையை ஆரம்பித்து, வாங்குகிறானோ, இல்லையோ, லட்சியத்திப் பரப்பவேண்டும். மத வாதிகள், தேசியவாதிகள், பொதுவுடைமைவாதிகள், சுயமரியாதைக்காரர்கள் எல்லோருமே தூய உள்ளத்தோடு பத்திரிகை தொடங்கி அண்டா, குண்டா இழந்தார்கள். பலபேர் சொத்தை இழந்தார்கள். 1957-ல் நான் வீட்டில் இருந்த நகை, தாலி உட்பட விற்றுவிட்டேன். பத்துபவுன் நகையை விற்றுவிட்டு, ஜெயிலுக்குப் போவதற்கு முன், தாலியை நசுக்கி, விற்று, வீட்டில் காசைக்கொடுத்துவிட்டுத்தான் போனேன். இதற்கு வேறு வழியில்லை. 
நான் மட்டுமில்லை. கம்யூனிஸ்ட் காரர்களும் அப்படித்தான். காங்கிரஸ்காரர்களும் அப்படித்தான். ஆதிதிராவிடப் பத்திரிகையாளர்களும் அப்படித்தான். இஸ்லாமிய பத்திரிகையாளர்களும் அப்படித்தான். கிறிஸ்தவர்களுக்குமட்டும் சில விதி விலக்குகல் உனடு. அதனால எல்லாருமே தியாகிகள் தான். 
கேள்வி: 1974-க்கு அப்புறம்... உங்களுக்கு கொஞ்சம் மாற்றம்...
ஆனைமுத்து: இல்லை, இல்லை. 1974-க்குப் பிறகு கொஞ்சம் அரசியலில் ஈடுபடுபவர்கலுக்குப் புரிகிற மாதிரி எழுதினேன். 
கேள்வி: அப்போ உங்களுக்கு பொருளாதார சிக்கல் எப்படி இருந்தது? ஆனைமுத்து: தீரலை. 1993 வரைக்கும் பொருளாதார சிக்கல் மிகக் கடுமையாக இருந்தது. மூன்று வட்டிக்கெல்லாம் பணம் வாங்கியிருந்தேன். பிறகு, ‘பொங்கல் மலர்என்று ஒன்றைப் போட்டோம். 1990-க்கு பிற்பாடு. அதில் ஏதாவது பணம் கிடைத்தால், நான் வாங்கிய கடனைக் கொடுத்துவிடுவேன். பிறகு மீண்டும் கடன் வாங்கிக் கொள்வேன். 1993 வரைக்கும் இந்த நிலைமைதான். அதன் பிறகு, இப்படிக் வட்டிக்கு வாங்குவதை விட்டுவிட்டு, கை மாற்றாக வாங்க ஆரம்பித்தேன். பிறகு, அதையும் விட்டுவிட்டு, என்னுடைய பத்திரிகைக்கு சந்தா, ஆயுள் சந்தா, நன்கொடை என்று அப்படி இப்படி வசூல் செய்து கொஞ்சம் கடன் இல்லாமல் நடத்தினேன். இப்போதும் நட்டத்தில்தான் இருக்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டம். இது எல்லாருக்கும் உள்ளது. நாங்கள்மட்டும்தான் பெரிய தியாகி என்று சொல்ல முடியாது. சிறு பத்திரிகைகள் நடத்தற எல்லாருமே கஷ்டப்படுறவங்கதான். அதுல கண்ணு, மூக்கு வச்சுப் பேசுறது நியாயம் ஆகாது. சில ஊதாரிப் பத்திரிகைகள் இருக்கலாம். பிளாக் மெயில் பண்ற பத்திரிகை மாதிரி. மற்ற பத்திரிகைகள் எல்லாமே, மதவாதி, தேசியவாதி யாரா இருந்தாலும் கண்டிப்பா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். அது தவிர்க்க முடியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கு. இந்த சமூகம், ஒரு பொறுப்பில்லாத சமூகம். இந்தப் பத்திரிகை பொறுப்பா பாடுபடுறாங்களே, நாம கை தூக்கிவிடுவோமே!அப்படிங்கற உணர்வு, பார்ப்பனர் அல்லாதவர்களிடம் மிகமிகக் குறைவு. பார்ப்பனர்களைப் பார்த்தால், ஒரே பார்ப்பனருக்கு ஆனந்தவிகடன், அவள்விகடன், ஜூனியர் விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன் அத்தனையும் வாங்கறான். ஹிந்து வாங்கறான். ஃபிரண்ட்லைன் வாங்கறான். அவன் எக்ஸ்பிரஸ் வாங்கறதில்லை. தினமணி வாங்கறதில்லை. டெக்கான் கிரானிக்கல் வாங்கறதில்லை. நல்லா கவனிக்கணும். சூத்திரன் நடத்தற பேப்பர் எதையும் வாங்க மாட்டான் அவன். பார்ப்பான் நடத்தற, குறிப்பா ஆனந்தவிகடன், கல்கி குழுமம் நடத்தற அத்தனை பத்திரிகைகளையும் குழந்தை குட்டியில இருந்து எல்லாரும் படிப்பார்கள். அந்த இனப்பற்று அவர்களுக்கு உண்டு. தமிழர்களுக்கு உண்மையிலேயே அந்த இனப்பற்று கிடையாது. இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப் பற்று தமிழனுக்கு ரொம்பக் குறைவு. இல்லையென்றால், குறைந்தது தமிழ்நாட்டில் ஹிந்து மாதிரி ஒரு பார்ப்பான் இல்லாதவன் ஒரு வருமானம் வரக்கூடிய பத்திரிகை நடத்தணுமே!

1929-
ல் ஆனந்தவிகடனில் ஒரு செய்தி வெளியானது. அப்போ பனகல் ராஜா இறந்து போனார். அவர் மேல் உள்ள வெறுப்பைக் காட்டுவதற்கு, கற்பனையாக ஒரு கல்யாணப் பத்திரிகையை வெளியிடுகிறார்கள். அவர்களாக எழுதி. அதில், அழைக்கிறவர்கள் என்று போடுகிற இடத்தில், ‘பனங்கள் ராயர்என்று போட்டார்கள். அவர் இறந்துபோய்விட்டார். அந்த பிரிண்ட்டை இன்னமும் நான் வைத்திருக்கிறேன். எவ்வளவு வெறுப்பு இருக்கும் பாருங்கள்! பனகல் ராஜா சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பெரிய ஜமீன்தார். நாணயமானவர். யோக்கியமானவர். பார்ப்பான் அட்டகாசத்தை அடக்குவதில் முதல் ஆள். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, அவர் பட்ட கடனுக்காக அவருடைய சொத்து ஏலம் போகிறது. அந்த ஏல நோட்டிஸை நான் கெஜட்டில் படித்திருக்கிறேன். அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தட்டிக் கழித்தார். 
பனகல் ராஜா, தியாகராயர் இவங்கள்லாம் தங்களுடைய சொத்துகளை கட்சிக்காக அழித்தார்கள். அவ்வளவு பெரிய மகான்கள். இந்த வரலாறு, தமிழ்நாட்ல இருக்கிற, தமிழனாக இருக்கிற ஐ.ஏ.எஸ். படித்தவனுக்குத் தெரியுமா? வக்கீலுக்குத் தெரியுமா? டாக்டருக்குத் தெரியுமா? பேராசிரியருக்குத் தெரியுமா? அது அவன் குறையா? இல்லை. கல்வித் திட்டத்தின் குறை. பன்னிரெண்டாவதில் சொல்லித் தரவேண்டும் இல்லையா? பனகல் ராஜா என்றால் இப்படி. தியாகராயர் என்றால் இப்படி. என்று சொல்லித் தரவேண்டும். தியாகராயர் வீட்டை ஒவ்வொருவரும் போய்ப் பார்க்க வேண்டும். அவருடைய வீடு தண்டையார்பேட்டையில் இருக்கிறது. இரண்டு பக்கமும் வீடு. நடுவில் பாலம். அந்த வீட்டையும் இந்த வீட்டையும் இணைப்பதற்கு ரோட்டுக்கு மேல் பாலம். வெள்ளைக்கார கவர்னர், அவரை அங்கே போய்த்தான் பார்ப்பான். அவ்வளவு பெரிய செல்வந்தர் அவர். இன்று வரைக்கும் அந்தப் பாலம் அப்படியே இருக்கிறது. அவரெல்லாம் ஆங்கிலத்தில் பேசினால், அப்படியே கேட்டு, கேட்டு பசியே அடங்கிடும். அப்படி இருக்கும் அவருடைய இங்கிலீஷ் ஸ்டைல். நான் தியாகராயரைப் பார்த்ததில்லை. அவரிடம் பழகினவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர் மேதை. காங்கிரஸிலும் அப்படித்தான். பல மேதைகள் இருந்தார்கள். 
கேள்வி: உங்களுடைய மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
ஆனைமுத்து: நாங்கள் அடிப்படையில் மார்க்சியவாதிகள். உலகத்தின் நிகழ்வுகளையும், சம்பவங்களையும், சமூக அமைப்பையும் மார்க்சிய பார்வை கொண்டு பார்க்கவில்லை என்றால், எந்த ஒரு மனிதனும் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. மார்க்ஸ், அவர் வாய் மொழியாகவே, ‘ஒரு நாட்டில் சமதர்ம புரட்சி வரவேண்டும் என்று யார் பாடுபடுகிறானோ, அவன் முதலில், அவன் பிறந்த நாட்டில் இருக்கிற சமூக அமைப்பின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ச்சி செய்யவேண்டும்.என்று சொல்கிறார். நிபந்தனையே அதுதான். சமதர்மம் என்பது, ஒரு ரெடிமேடு மருந்து அல்ல.என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதைப் போலவே, இந்தியாவில், ஓர் இந்து என்பவன், ஒரு பசுமாட்டைத்தான் பெரிதாக நினைப்பான். ஒரு மனிதனை பெரிதாக நினைக்க மாட்டான். ஏனென்றால், மனிதன் என்பவன் தீண்டத்தகாதவனாக, தொடப்படாதவனாக இருக்கிறான். கீழ்ச்சாதிக்காரனாக aஇருக்கிறான். பசுமாடு, தெய்வாம்சம் பொருந்தியது. பிராமணத்துவம் பொருந்தியது. என்று நினைக்கிறான். இதையெல்லாம் திராவிட இயக்கத்தவர்கள் படிக்கவில்லை. இது முதல் குற்றம். இரண்டாவது, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இதை மறைத்தேவிட்டார்கள். அந்த மார்க்சியம் இந்தியாவில் வெல்ல வேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு சரியான பாதை பெரியார் பாதை. சரியான பாதை அம்பேத்கார் பாதை. இந்த இரண்டுபேரும்தான் இந்திய சமூகத்தைப் படித்தவர்கள். அதற்கேற்ற பாதையை வகுத்தவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்தவர்கள். அதனால்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது, நடுவில் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு கிடையாது. 81-ல் இருந்து 89 வரைக்கும் கடுமையாக விவாதித்தோம், கட்சிக்குள். எங்கள் கட்சியின் பெயர், ‘பெரியார் சம உரிமைக் கழகம். அதை நான் சேலத்தில்குறிப்பிட்டேன். நாம் மார்க்ஸிஸ்டுகள். பேரை மாற்றவேண்டும்என்றேன். அதற்கு ஒரு கமிட்டி போட்டோம். 1988, மார்ச்சில், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் விவாதித்தபிறகு ஏற்றுக்கொண்டார்கள். எதையும் நாங்கள் துல்லியமாகப் புரிந்து செய்கிறோம்.எதையும் புரியாமல், கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடவில்லை. 

0

(
மே, 2010 ”அம்ருதாஇதழில் வெளியான நேர்காணல்.)