எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

திங்கள், 1 மார்ச், 2010

செஞ்சோலை திங்களிதழ், தலையங்கம்

ஒன்றிணைவதும்...,போராடுவதும்..., விடுதலைப் பெறுவதும்... அவசியம்!


நிகழ்கால வாழ்வின் வலிகளும், மிகக் கொடியதும் நெடியதுமான துயரங்களும் எம்மைச் சூழ்ந்திருக்கும் இச்சூழலில் காலம் கனிந்து வரும் என்றிராமல், கடமை எமதானதென ஈழத் துயரங்களுக்காய் இதுகாறும் கொண்டிருந்த நிலை மாற்றி - புதிய தடங்களினூடே இளைய சமூகத்தை பங்குபற்றச் செய்ய அதிமுக்கியமானதொரு கடப்பாடு இருக்கிறது என்பதை உணர்ந்து, சாதியாகவும், மதமாகவும், கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து நிற்காது ஒன்றுபட்டு குரலெழுப்ப இதுவே தருணம் என உணரவைப்போம். இழந்தவைகள் போதும் இனியேனும் எஞ்சியவைகளையாவது இழக்காமலிருக்க இணைந்து நிற்பது அவசியமானதென நம்புகிறோம்.

இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்களை ஆறேழு மாதங்களுக்கு மேலாக புதைச்சேறுகளின் சகதிகளிலும், நச்சுக் கக்குவான்கள் நிறைந்துள்ள வனப்பகுதிகளில் (தற்காலிக ஏற்பாடாய்) எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற முள்வேலி முகாம்களில் விலங்களைப் போன்று அடைத்து வைத்து அவர்களின் உடல், உள ஆரோக்கியத்தைச் சிதைத்தும், வதைத்தும் வரும் ராசபட்சே அரசு அதற்குப் பொருப்பேற்கவும், பதிலளிக்கவும் வேண்டும். பன்னாட்டு அமைப்புகள் முகாம்களைப் பார்வையிடவும், அம் மக்களிடம் சுயாதீன விசாரணைகளை நடத்தவும், உலக ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கவும் கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை ஏற்படுமாயின் கடந்த ஏழெட்டு மாதங்களில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் கொடிய முகம் வெளிப்படும். அதற்குக் காரணமானவர்கள் உரிய தண்டனைகளை எதிர்கொள்ளவும், தமிழர்களுக்கான உரிய நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்.

நடந்தவைகளை மறந்துவிட்டு நடப்பவைகளை பார்ப்போம் என இப் பிரச்சினையை விட்டுவிடுவதும்- மறந்துபோவதும் - மறக்க முயற்சிப்பதும், மானுட அறம், மனித நீதி, குடிமைச் சமூகம், வாழ்வியல் உரிமை சார்ந்த நடவடிக்கைகளுக்கும், சனநாயக நெறிமுறைகளுக்கும் மிகவும் ஆபத்தானதும், அபத்தமானதும் கூட.., இந் நூற்றாண்டின் மிகப் பெரும் மனிதப் பேரவலம் எனக் கூறப்படும் ஒரு கொடிய யுத்தத்தை நடத்தி லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வை சிதைத்தவர்கள் மீண்டும் அரசாட்சியை பிடித்திருப்பதும், இதற்கெல்லாம் காரணமாகவும், உதவியாகவும், உந்துதலாகவும் இருந்த பிராந்தியப் பேரரசுகள் யுத்தம் முடிவுற்ற பின்னரும் மெளனியாய் வேடிக்கைப் பார்ப்பதும், விவேகமற்ற அயலுறவை கொண்டிருப்பதும், ஊடகங்கள் ஊடாக மட்டுமே அறிக்கையும்- ஆர்ப்பாட்டம் செய்வதென்பது வேடிக்கைகுறியதும், வெட்கக்கேடானதுமாகும்.

முழு முற்றாக ஓர் இனத்தை அழிக்கத் துடித்த அதிகார வெறியாட்டத்தை, இனவெறி, மற்றும் பிராந்திய மேலாதிக்க கொடுங்கோன்மைகளையும், மனித நேயமற்ற கொடூரங்களையும் எதிர்கொள்ள தம் மக்களையும், தமது பண்பாட்டு மறபார்ந்த வாழ்வியலையும் பாதுகாக்க சுயசார்புடனான மக்கள் விடுதலையும், விடுதலைப் புலிகளின் ஆயுதப் புரட்சியும், தமது மக்களின் நீண்ட நெடிய துயரங்களுக்கான மாற்றுத் தேடலும், மக்கள் போரும் நியாயமானதென தனது ஒவ்வோர் வார்த்தையிலும், வாழ்விலும் உறுதிப் படுத்தி வந்த அத் தலைவனின் லட்சியங்கள் ஈடேறவும்..., ஈழ நிலமெங்கும் விரவிக் கிடக்கும் தமிழ்க்குருதிகளிலிருந்து இன்னோர் எழுச்சிப் போர் உயிர்த்தெழவும், கும்மிருட்டுக் கொட்டடிகளில் வன்புணர்ச்சிகளின் மரண ஓலங்களிலிருந்தும், ஆடையுரித்து மண்டியிட வைத்து நெற்றிப் பொட்டில் சுட்டு வீழ்த்தும் கோழைக் கொடியவர்களின் கொடிமைகளிலிருந்தும் புறப்படட்டும்...., எதற்காக இப் போராட்டமும் போரும் தொடங்கப்பட்டதோ அதற்கான காரணமும் - அடிப்படைகளும்- அம் மக்களுக்கான விடுதலையும் இன்றளவிலும் மாற்றம் கொள்ளாது மென்மேலும் மதம் பிடித்து நிற்பதால், மனிதம் மறுத்து நிற்கும் மகிந்த கும்பல்களுக்கு பாடம் புகட்ட... அந்த மாவீரர்கள் விட்டுச் சென்ற அரும்பணிகளில் தம்மை ஈடுபடுத்தி உரிமை மீட்க உறுதியேற்போம்.

                                                                                                              -நெறியாள்கைக் குழு